பெரிய பெரிய நட்சத்திர பட்டாங்களோ, நட்சத்திர இயக்குநர்களோ, பெரிய ஃபேன் பேஸோ இல்லாம சில படங்கள் ‘கன்டென்ட்’ ஒன்றை மட்டுமே கொண்டு ரசிகர்களின் ஃபேவரிட் மூவீஸ் ஆகுறதுண்டு. அப்படி 2015-ல் இருந்து நடப்பு 2023 வரை வெளிவந்த 10 படங்களோட பட்டியலைதான் இந்த வீடியோ ஸ்டோரில பார்க்கப் போறோம்.
ராஜதந்திரம் – 2015
தமிழ் சினிமாவில் ரேர் ஆன ஹெயிஸ்ட் த்ரில்லர் ஜானரில் 2015-ல் வெளியான படம் ‘ராஜதந்திரம்’. மூன்று இளைஞர்கள் சேர்ந்து ஸ்கெட்ச் போட்டு ஒரு பெரிய நகைக் கடைல ராஜதந்திரத்தோட திருடுறதுதான் திரைக்கதை. ரொம்ப ஜாலியா ஸ்டார்ட் ஆகுற இந்தப் படம், முழுக்க முழுக்க கமெடி இழையோட… ஒரு கட்டத்துல த்ரில்லிங் அனுபவம் கம்ப்ளீட்டாக தொற்றிக்கொள்ளும் வகையில் இயக்குநர் ஏ.ஜி.அமித்தால் மிகச் சிறப்பாக எழுதப்பட்டிருக்கும். குறிப்பாக, அந்த ஹோட்டல்ல தங்க பிஸ்கட் திருடுற சீன் செம்மயா இருக்கும்.
இந்தப் படத்தோட ஹீரோ வீரா தன்னோட அசால்டான பெர்ஃபார்மன்ஸ்ல ரசிகர்களை வாவ் சொல்ல வெச்சிருப்பார். ஒவ்வொரு கதாபாத்திரமும் கம்ப்ளீட்டாகவும் ரசிகர்களை ஜாலியா எங்கேஜிங்கா வைச்சிக்கிற மாதிரியும் இருக்கும். ரெஜினாவுக்கு இது ரொம்ப முக்கியமான படம்.
உறியடி – 2016
2016-க்கு தமிழ் சினிமாவுக்கு கிடைத்த சூப்பர் சர்ப்ரைஸ்னா அது ‘உறியடி’தான். யார்றா இந்தப் பையன்?-ன்னு கேக்குற அளவுக்கு ஃபிலிம் மேக்கிங்லயும் ஆக்டிங்லயும் மிரட்டியிருப்பார் விஜயகுமார். படத்தோட கதைக்களம் 1999-ல் நடக்குற மாதிரி அமைக்கப்பட்டிருக்கும். கிராமும் இல்லாம, சிட்டியும் இல்லாம டவுன் பேஸ்டு கல்லூரி, ஹாஸ்டல், தாபா முதலான பின்புலத்தில் சாதி அரசியலை ரத்தம் தெறிக்கத் தெறிக்க சொன்ன படம் இது.
அரசியல் – சுயலாபத்துக்காக இயங்கும் சாதித் தலைவர்களை அப்பட்டமாக காட்டுற பொலிட்டிக்கல் – க்ரைம் த்ரில்லரா படம் செம்ம எங்கேஜுடா இருக்கும். குறிப்பாக, அந்த இன்டர்வெல் ஃபைட் முழுக்கவே கூஸ்பம்ப் மூவ்மென்ட்டா இருக்கும். படத்தோட எண்டுல வர்ற ‘அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்’ பாட்டெல்லாம் அதிசிறப்பான அனுபவமா இருக்கும். சில ‘ரா’வான காட்சிகள் மிரட்டலா இருக்கும். தியேட்டர்ல கொஞ்சம் லேட்டா பிக் அப் ஆன உறியடி, இணையத்துல அந்தக் காலக்கட்டத்துல அதிகம் டவுன்லோடு செய்து பார்க்கபட்ட படம்னா, அது மிகை அல்ல.
மெட்ரோ – 2016
அடுத்து, அதே ஆண்டுல வெளிவந்த ‘மெட்ரோ’ திரைப்படம். இந்தப் படத்துல தெரிஞ்ச முகம்னா அது பாபி சிம்ஹா மட்டும்தான். ஆனா, அவருக்கு இதில் முக்கியமான ரோலா இருந்தாலும் சின்ன கேரக்டர்தான். ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தில் பணத்துக்காக திசை மாறும் இளைஞனின் பின்னணியில் ஒரு நகரத்தின் சாலைகளில் நடக்கும் பயங்கரமான சங்கிலிப் பறிப்புச் சம்பவங்களும், அதற்குப் பின்னால் உள்ள பயங்கரமான நெட்வொர்க்கையும் ரொம்ப டெப்தா போய் காட்டின படம்தான் ‘மெட்ரோ’.
கதை, கதைக்களம், கதாபாத்திரங்களின் வடிவமைப்பு, நடிகர்களின் இயல்பான நடிப்பு என எல்லா ஏரியாவிலும் ஸ்கோர் செய்திருக்கும் இந்தப் படம், தீவிர சினிமா ஆர்வலர்களுக்கு மட்டுமின்றி படத்தைப் பார்த்த பல தரப்புகளுக்கும் நிறைவைத் தந்தது. குறிப்பா, சங்கிலிப் பறிப்பில் ஒரு பெண் குறிவைக்கப்படுவது எப்படி, அந்தத் திருட்டு நகை சில பல டிராவல்களுக்குப் பிறகு தங்க பிஸ்கட் ஆவது எப்படின்னு பல டீட்டெய்லிங் நம்மை மிரளவைக்கும்ன்றது நிச்சயம்.
மாநகரம் – 2017
அடுத்து 2017-ல் வெளிவந்த ‘மாநகரம்.’ இந்த லிஸ்ட்ல மாநகரம் எப்படி? லோகேஷ் கனகராஜ்தான் பாப்புலர் டைரக்டர் ஆச்சேன்னு கேட்கலாம். அது இப்பதானே… மாநகரம் ரிலீஸானப்ப அவர் ஜஸ்ட் அறிமுக இயக்குநர். அந்தப் படத்துலயும் பெருசா ஸ்டார் வேல்யூ எதுவும் இல்லை. முழுக்க முழுக்க இன்டன்ஸான கன்டென்ட்டால அப்போ கவனம் ஈர்த்த படம் அது.
இரு வெவ்வேறு பின்புல கொண்ட இளைஞர்களையும், சென்னை சிட்டியையும் மையப்படுத்தும் கதை. குறிப்பா ஸ்ரீ, சந்தீப், ரெஜினா, சார்லி, அருண் அலக்ஸாண்டர், ராமதாஸ், மதுசூதனன்னு பலரோட வாழ்க்கையின் கிளைக்கதைகளை உள்ளடக்கிய த்ரில்லிங்கான திரைக்கதை. சென்னை சிட்டியின் இருட்டுப் பக்கத்தையும், அதற்கு வெளிச்சம் தரும் ஹ்யூமானிட்டியையும் ‘மாநகரம்’ பதிவு பண்ணின விதம் அட்டகாசமானது. சென்னைவாசிகள், அவங்களோட கேரக்டர்ஸ், ரவுடியிசம், ஐ.டி. ஃபீல்டு, போலீஸ் என பல தரப்பினரையும் பக்காவா இந்தப் படம் பதிவு பண்ணியிருக்கும்.
சார்லியோட பெஸ்ட் பிரசன்ஸ்ல இந்தப் படமும் ஒண்ணு. ரொம்ப அழுத்தமா போயிட்டு இருக்குற திரைக்கதைல நமக்கு மிகப் பெரிய ரிலீஃபா வரும் ராமதாஸுக்கும் இந்தப் படம் ரொம்ப முக்கியமானது. திரும்பத் திரும்ப போரடிக்காம பார்க்கக் கூடிய மேஜிக் நிறைந்த படங்களில் இதுவும் ஒண்ணு.
8 தோட்டாக்கள் – 2017
தன்னோட துப்பாக்கியை பறிகொடுத்துவிட்டு அதைத் தேடி அலையும் இளம் போலீஸ் அதிகாரியையும், அந்தத் துப்பாக்கியை வைத்துக்கொண்டு சில பல சம்பவங்களை நிகழ்த்துற சாமானியரையும் மையமாகக் கொண்ட வித்தியாசமான சோஷியல் – க்ரைம் த்ரில்லர்தான் ‘8 தோட்டாக்கள்’. நம்ம சமூகத்துல பணம் படுத்துற பாடு இருக்கே… அதைப் பத்தி ரொம்ப நல்லா சொல்லியிருக்கும் இந்தப் படம்.
ஆக்சுவல்லி ஜப்பானிய ஜாம்பவான் டைரக்டர் அகிரா குரசோவாவோட ‘ஸ்ட்ரே டாக்’ (Stray Dog) படத்தின் ஒன்லைனில் இன்ஸ்பையராகி, நம்ம மண்ணுக்கு ஏத்தமாதிரி திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். அதுக்கு நேர்மையாக படத்தோட எண்டு கார்டுல கிரெடிட்டும் கொடுக்கப்பட்டிருக்கும். வெற்றி தன்னால் இயன்ற பெர்ஃபராமன்ஸை கொடுத்திருப்பார். இந்தப் படத்தோட ஹைலைட்டே
எம்.எஸ்.பாஸ்கர்தான். அவரோட திரை வாழ்க்கையில் இது ஒரு மைல் கல்னே சொல்லலாம். ரொம்ப இயல்பான உணர்வுபூர்வ நடிப்பால ரசிகர்களை மிரட்டியிருப்பாரு. அவருக்கு சில மாஸ் காட்சிகளும் படத்தில் இருக்கு. ஹோட்டல்ல வெற்றிகிட்ட பேசுற சீன் எல்லாம் க்ளாஸ் ரகம்னா, பேங்க்ல இருந்து பணமூட்டையோட வெளிய வந்து கரன்ஸியை காத்துல பறக்கவிட்டுட்டே கெத்தா நடந்து போறது மாஸ் ரகம். பெரிதாக நட்சத்திரப் பின்னணி இல்லாத இந்தப் படமும் பலரோட ஃபேவரிட் லிஸ்ட்ல இருக்கு.
மரகத நாணயம் – 2017
அதே 2017-ல் வெளிவந்து, தியேட்டருக்கு வந்து சென்ற பிறகு இன்று வரை ரிப்பீட் ஆடியன்ஸ் பலரையும் வசப்படுத்திய படம் ‘மரகத நாணயம்’. எக்கச்சக்க சேலஞ்சஸுடன் மரகத நாணயத்தை ஆட்டையை போட முயற்சிப்பதுதான் ஒன்லைன். கதைப்படி ஆதிதான் ஹீரோ என்றாலும், திரைக்கதையில் நமக்கு ஹீரோவாகத் திகழ்வது ராமதாஸ். படத்துல அவர் பண்ற சேட்டை எல்லாம் வெடித்துச் சிரிக்கவைக்கிற ரகம்.
வெகுஜன ரசிகர்களை எங்கேஜ் பண்ண வைக்கிறதா நம்பப்படுற எந்த மசாலாத்தனமும் இல்லாம, படம் முழுக்க சுவாரஸ்ய அனுபவத்தைக் கடத்துற இந்தப் படம் உண்மையிலே தமிழ் சினிமாவின் மிக முக்கியப் படைப்புதான். நிக்கி கல்ராணியின் உடலுக்குள் ஒரு ரவுடியின் ஆவி புகுந்தப்புறம், அந்த ரவுடியோட பாடிலேங்குவேஜை படம் முழுக்க மெயின்டெயின் பண்ணி நமக்கு செம்ம சர்ப்ரைஸ் தந்திருப்பார் நிகில் கல்ராணி. இன்னொரு பக்கம் ஆனந்த்ராஜ் அண்ட் கோ-வோட அட்ராசிட்டீஸ் தியேட்டரையே அதிரவைச்சிருக்கும். இந்தப் படத்தோட தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ் அனுபவிச்சங்க ரொம்ப லக்கின்னே சொல்லலாம்.
அருவி – 2017
இதுவும் அதே 2017-ல் வந்த படம்தான். அருவி… ஒரு சீரியஸான கான்செப்ட்டை ரொம்ப சுவாரஸ்யமான திரைக்கதை மூலமாக ரசிகர்களை கவனிக்க வைச்ச படம் இது. அதுக்கு ‘சொல்வதெல்லா உண்மை’ நிகழ்ச்சியை Mock பண்ண விதம் பகடியின் உச்சம்.
விமர்சனங்கள் மூலமாகவும், வாய்வழி பரிந்துரைகளாலும் தியேட்டரில் இந்தப் படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சுது.
Also Read – தட் நிஜ இளந்தாரிப்பய… சி.எஸ்.அமுதன் சம்பவங்கள்!
டிவி ரியாலிட்டி ஷோக்களின் பின்புலத்தை பகிரங்கப்படுத்தப்பட்டது ரசிகர்களிடையே செம்மயா ஒர்க் அவுட் ஆச்சு. அந்த ‘ரோலிங் சார்…’ எல்லாம் டயலாக் எல்லாம் தியேட்டரை அதிரவைச்சுது. வசனங்கள் வழியா மட்டும் இல்லாமல், சிறந்த திரைமொழியாலும் அன்பின் மேன்மையைச் சொல்லி கவனம் ஈர்த்த ‘அருவி’ ரொம்பவே முக்கியமான படம். குறிப்பாக, தமிழ் சினிமாவுக்கு அதிதி பாலன் எனும் அற்புதமான ஆக்ட்ரஸ் கிடைச்சாங்க.
ஜீவி – 2019
‘முக்கோண எஃபெக்ட்’, ‘தொடர்பியல்’னு நம்ம மூளைக்கு வேலை தரக்கூடிய விஷயங்களை வெச்சு, இன்டெலக்சுவலான ஒரு ஸ்கிரிப்ட் பண்ணி, அதை எந்தக் குழப்பமும் இல்லாம நமக்கு கடத்தின அட்டகாசமான படம்தான் 2019-ல் வெளிவந்த ஜீவி. ‘8 தோட்டாக்கள்’ படத்தை விட வெற்றியோட நடிப்புல ஒரு டெவலப்மெண்ட் இந்தப் படத்துல பார்க்கலாம். கருணாகரன், ரோகிணி, மைம் கோபி ஆகிய மூவரும் பெர்ஃபக்டான சப்போர்ட்டிங் கேரக்டரா இருப்பாங்க.
படத்துல குட்டி குட்டி டீட்டெய்லிங் நம்மளை வியக்கவைக்கும். குறிப்பா, ஒரே வீட்டு ரூம்ல கொஞ்சம் கூட போரடிக்காத அளவுக்கு காட்சிகள் விறுவிறுப்பாக நகர்த்தப்பட்டிருக்கும். ஏழைகளை குறிவைக்கும் போலீஸ் முகம், எளிய மனிதர்களுக்கு இழைக்கப்படும் சமூக அவலம்னு பல விஷயங்கள் டச் பண்ண விதமும் சிறப்பாக இருக்கும். த்ரில்லர் வகை படத்தை அறிவுப்பூர்வமா அணுகுன விதத்துல தனித்து நிற்கிற ஜீவி இப்போ பலரோட ஃபேவரிட்டா இருக்கு. ரீசன்ட்டா வந்த ரெண்டாவது பார்ட்டை விட, ஜீவி முதல் பாகம்தான் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் கொடுத்தது.
லவ் டுடே – 2022
பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் டுடே’ சக்சஸ் பத்தி நான் சொல்லிதான் தெரியணும்ன்றது இல்லை. குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம், பயங்கர வசூலை அள்ளியதோடு, குறிப்பா 2கே கிட்ஸ் மத்தியில மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. கருத்தியல் ரீதியாகப் பார்த்தால் பூமர்த்தனம் நிறைந்த படமாக இருந்தாலும், சுவாரஸ்யான திரைக்கதை, கூட்டத்தைக் கட்டிப்போடும் அம்சங்கள், ரீல்ஸுக்கு கட் பண்ணத் தேறும் காட்சிகள்னு ரசிகர்களை நல்லாவே எங்கேஜ் பண்ணின இந்தப் படம் நிச்சயம் இந்தப் பட்டியலுக்கு உரியதுதான். ‘கோமாளி’ படம் மூலம் அறிமுக இயக்குநராக கவனிக்கப்பட்டாரே தவிர, ‘லவ் டுடே’ ரிலீஸாகுறதுக்கு முன்னாடி பிரதீப்பிடம் ஸ்டார் வேல்யூ எதுவும் இல்லை. இந்தப் படத்துல அறிமுக ஹீரோவாவும் களமிறங்கியதோட தன்னோட தன்னம்பிக்கையால சிறப்பான சக்சஸையும் கொடுத்திருக்கார்.
டாடா – 2023
இந்த லிஸ்ட்ல நாம கடைசியா பார்க்கப் போற படம், சமீபத்தில் தியேட்டரில் வெளிவந்து கவனத்துக்குரிய ரெஸ்பான்ஸைப் பெற்று, இப்போது ஓடிடியில் பலரது ஃபேவரிட் பட்டியல்ல இடம்பெற்றுள்ள ‘டாடா’. கல்லூரிக் காதலிலேயே பரிசாக குழந்தை பிறக்கிறது. சில பல குடும்பச் சிக்கல்களில் காதலி மாயமாக, காதலன் தாயுமானவனாக குழந்தையை வளர்க்க வேண்டிய சூழல். இறுதியில் சுபமாவதற்கு முன்பு நிகழ்வும் வாழ்வனுபவமே திரைக்கதை.
கவின், அபர்ணா ரெண்டு பேருமே ஓரளவு பரிச்சயமான முகம்னா கூட, பெரிய அளவுக்கு ஃபேன் பேஸ் எல்லாம் இல்லை. ஆனா, ஒரு மெலோ டிராமா மாதிரியான படத்தை ஒரு நிமிஷம் கூட போரடிக்காம எங்கேஜிங்காவும் ஜாலியாவும் கடத்தின விதம்தான் இந்தப் படத்தைக் கட்டிப் போட்டிருக்குன்னு சொல்லலாம். the pursuit of happiness படத்தையெல்லாம் நினைவூட்டினது ஒரு பக்கம் என்றாலும், ஹீரோவை மேன்மையானவராக, தாயுமானவராக, புனிதராக காட்டுவதற்காக ஹீரோயின் மட்டுமின்றி படத்தில் வந்த பெண் கதாபாத்திரங்களையெல்லாம் படுமட்டமானவர்களாக காட்டிய விதம்தான் ரொம்பவே நெருடலா இருந்துச்சு. அதை நார்மல் ஆடியன்ஸ் உணராத அளவுக்கு சீரியஸான படத்தை ஜாலியா கடத்தின விதம்தான் வெற்றிக்கு காரணம்.
இந்தப் பட்டியல்ல வேறு எந்தெந்த படங்கள் இடம்பெறலாம்னு நீங்க மறக்காம கமெண்ட் பண்ணுங்க.