டெஸ்லா நிறுவனத்தின் ஆட்டோ பைலட் எனப்படும் தானியங்கி வாகன இயக்கக் குழுவுக்குத் தமிழகத்தைச் சேர்ந்த அசோக் எல்லுச்சாமி இயக்குநராக நியமிக்கப்பட்டிருப்பதாக அந்நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க் அறிவித்திருக்கிறார். மேலும், ட்விட்டர் மூலம் பணிக்கு அமர்த்தப்பட்ட முதல் நபரும் அவரே என்றும் தெரிவித்திருக்கிறார். யார் இந்த அசோக்?
டெஸ்லா – எலான் மஸ்க்
எலெக்ட்ரிக் கார்கள் உற்பத்தியில் உலக அளவில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் டெஸ்லா. அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க், உலகின் இளம் தொழிலதிபர்கள் வரிசையில் முக்கியமான இடம் பிடித்திருப்பவர். டெஸ்லா நிறுவனத்தில் பணியாற்றுவது பொறியாளர்கள் கனவுகள் ஒன்றாக இருப்பதுண்டு. அப்படிப்பட்ட டெஸ்லா நிறுவனத்தின் ஆட்டோ பைலட் டீமின் இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கும் அசோக் எல்லுசாமி, எப்படி பணியில் சேர்க்கப்பட்டார் என்பது குறித்து எலான் மஸ்க் பேசியிருக்கிறார்.
Also Read:
அசோக் எல்லுச்சாமி
டெஸ்லா நிறுவனத்தின் ஆட்டோ பைலட் எனப்படும் தானியங்கி ஓட்டுநர் தொழில்நுட்பக் குழு அமைக்கப்படுவதாகக் கடந்த 2015-ல் எலான் மஸ்க் ட்விட்டரில் அறிவித்திருந்தார். மேலும், இந்தக் குழுவில் இணைய விரும்பும் பொறியாளர்கள் ட்விட்டர் வாயிலாகவே விண்ணப்பிக்கலாம் என்றும் அப்போது தெரிவித்திருந்தார். அதன்படி, டெஸ்லா ஆட்டோ பைலட் தொழில்நுட்பக் குழுவுக்கு ட்விட்டர் வாயிலாகத் தேர்வு செய்யப்பட்ட முதல் நபர் அசோக் எல்லுசாமிதான் என்று எலான் மஸ்க் கூறியிருக்கிறார்.
தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அசோக் எல்லுச்சாமி, சென்னை கிண்டி அரசினர் பொறியியல் கல்லூரியில் எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்கிறார். அதன்பிறகு, அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தின் பிட்ஸ்பர்க் நகரில் உள்ள கார்னீஜ் மெலன் பல்கலைக்கழகத்தில் ரோபோடிக் சிஸ்டம் டெவலப்மெண்ட் பிரிவில் முதுகலைப் பட்டப்படிப்பையும் முடித்திருக்கிறார். தொடக்கத்தில் வாப்கோ வாகனக் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் சென்னை மையத்தில் பணியாற்றிய அவர், ஜெர்மனி கார் நிறுவனமான போக்ஸ் வேகனின் எலெக்ட்ரானிக்ஸ் ஆய்வுப் பிரிவில் பணியில் சேர்ந்திருக்கிறார்.
டெஸ்லா பயணம்
டெஸ்லாவின் ஆட்டோ பைலட் தொழில்நுட்பக் குழுவின் சாஃப்ட்வேர் இன்ஜினீயராகக் கடந்த 2014 ஜனவரியில் பணியில் சேர்ந்த இவர், தற்போது ஆட்டோ பைலட் சாஃப்ட்வேர் குழுவின் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். டெஸ்லா கார்களின் முக்கியமான அம்சமாகக் கருதப்படும் தானியங்கி ஓட்டுநர் தொழில்நுட்பக் குழுவின் முக்கியமான அங்கமாக இருக்கும் அசோக், வாகனங்களில் தானியங்கி பிரேக்கிங் சிஸ்டம் தொடர்பாகப் பல்வேறு ஆய்வுகளை வெற்றிகரமாக செய்திருக்கிறார். அசோக் மேற்பார்வையில் உருவாக்கப்பட்ட “Generating Ground Truth For Machine Learning From Time Series Elements” என்ற தலைப்பிலான கண்டுபிடிப்புக்காக பேடண்ட் கோரி டெஸ்லா விண்ணப்பித்திருக்கிறது. டெஸ்லாவில் அசோக் பொறுப்பேற்ற பிறகு, ஆட்டோ பைலட் சாஃப்ட்வேர்களின் முக்கிய பிரச்னையாகக் கருதப்படும் பிரேக்கிங் தொழில்நுட்பத்தில் பல மைல்கல் சாதனைகளை அந்நிறுவனம் படைத்திருக்கிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா பே பகுதியில் வசித்து வரும் அசோக் நல்லுசாமிக்குத் திருமணமாகி பெண் குழந்தை இருக்கிறது.
வாழ்த்துக்கள் அசோக்!
Also Read – இயர் எண்டில் கார் வாங்குவது சிறந்ததா… பிளஸ், மைனஸ் என்னென்ன?