ஒரு கொடூரமான கொலை. துல்லியமான திட்டமிடல். ஒரே ஒரு நபரின் சந்தேகம். ஒட்டுமொத்த திட்டமும் சொதப்பி கொலையாளி கைது செய்யப்படுகிறார். ஆனால், சிறையிலிருந்து தப்பித்த அந்தக் கொலையாளியை உள்ளூர் காவல்துறை முதல் இண்டர்போல் வரை தேடுகிறது. பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு அக்கொலையாளி பற்றி ஓர் அதிர்ச்சித் தகவல் வெளியாகிறது. அது என்ன தகவல்?
டிஸ்கிளைமர் : இந்த வீடியோவில் பேசப்படும் சில சம்பவங்களும் கருத்துகளும் சிலருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். இளகிய மனம் படைத்தோர் சற்று கவணத்துடன் பார்க்கவும்.
ஒரு கொடூரமான கொலை. துல்லியமான திட்டமிடல். ஒரே ஒரு நபரின் சந்தேகம். ஒட்டுமொத்த திட்டமும் சொதப்பி கொலையாளி கைது செய்யப்படுகிறார். ஆனால், சிறையிலிருந்து தப்பித்த அந்தக் கொலையாளியை உள்ளூர் காவல்துறை முதல் இண்டர்போல் வரை தேடுகிறது. பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு அக்கொலையாளி பற்றி ஓர் அதிர்ச்சித் தகவல் வெளியாகிறது. அது என்ன தகவல்? இது ஒரு திரைப்படத்தின் கதை அல்ல. உண்மைச் சம்பவம். யார் அந்த அசகாய கொலையாளி?
சில வாரங்களுக்கு முன்பு டெல்லியில் நடந்த ஒரு சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியைத் தந்தது. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஜோடிகளில் அவனுடைய துணையைத் துண்டு துண்டாக வெட்டிக் கொன்று அப்பெண்ணின் உடலை பல வாரங்களுக்கு ஃபிரிட்ஜில் வைத்திருத்து பிறகு சிறு சிறு மூட்டைகளாகக் கட்டி ஆள் அரவமற்ற காட்டுப்பகுதிகளில் வீசியெறிந்திருக்கிறான். யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க அப்பெண்ணின் சமூக வலைதளக் கணக்குகள் மூலமாக தோழிகளுடன் பேசுவது, உடலை 35 துண்டுகளாக வெட்டுவது, உடலைப் பத்திரப்படுத்தி வைக்க ஒரு ஃப்ரிட்ஜ் வாங்கியது, ஊதுவத்திகள் வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்தியது என, Dexter சீரிஸைப் போல செய்திருக்கிறான். அவன் கைது செய்யப்பட்ட பிறகு, அந்த சீரிஸைப் பார்த்து சில விஷயங்களைக் கற்றுக்கொண்டதாகத் தெரிவித்திருக்கிறான்.
சில தினங்களுக்கு முன்பு டெல்லி போலிஸ் ஒரு பெண்ணையும் அவருடைய மகனையும் கைது செய்தார்கள். டெல்லியின் சில பகுதிகளில் வெட்டப்பட்ட தலையும், கைகளுமாக ஆறு வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு உடல்பகுதிகள் கிடைத்தன. அப்பகுதிகளில் கிடைத்த CCTV footage அடிப்படையில் இந்தக் கைதுகளை போலீசார் மேற்கொண்டனர். தன் கனவரை மகனுடன் சேர்ந்து கொலை செய்து பத்து துண்டுகளாக வெட்டி ஒவ்வொன்றாக வெவ்வேறு இடங்களில் வீசியெறிந்துள்ளனர்.
திரைப்படங்களை விடவும் கதைகளை விடவும் நிஜத்தில் நடக்கும் பல சம்பவங்கள் பல சமயங்களில் நமக்கு பெருத்த அதிர்ச்சியைத் தருகின்றன. தொழில்நுட்பங்களின் உதவியுடன் இப்போது இந்த சம்பவங்கள் உடனடியாக வெளிச்சத்துக்கு வருகின்றன. விரைவாக வழக்குகள் தீர்க்கப்படுகின்றன. ஆனால், 26 ஆண்டுகளுக்கு முன்பு மேலே சொன்ன சம்பவங்களைப் போல நடந்த ஒரு கொலையில் கைதுசெய்யப்பட்ட குற்றவாளி தப்பிச்சென்று பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக வெளியுலகில் சர்வசாதாரணமாக வலம் வந்த கதையைப் பார்ப்போம்.
1996-ம் ஆண்டு ஜூலை மாதம், ஊட்டியில் ஒரு டாக்ஸி ஓட்டுனர், சந்தேகத்துடன் ஏதோ கெட்ட வாடை வீசுவதாகச் சொல்ல, அந்தப் பெண் பயணி ஏதோ சொல்லி சமாளித்திருக்கிறார். அவருக்குச் சந்தேகம் தீரவில்லை, அந்தப் பயணியிடம் டீ குடிப்பதாகச் சொல்லிவிட்டு, அருகில் இருந்த காவல்நிலையத்துக்கு ஓடி வந்து அங்கிருந்த போலீசாரிடம் “என்னுடைய காரில் ஒரு பெண் பயணி இருக்கிறார். அந்தப் பெண்ணைக் கைது செய்யுங்கள், எதோ சந்தேகமாக இருக்கிறது. அந்த சூட்கேஸைத் திறந்து பாருங்கள்” என்று பதட்டமாகச் சொல்கிறார்.
உடனே, காரை நோக்கி போலீசார் விரைந்த போது, அந்தப் பெண் பயணி தப்பித்திருக்கிறார். காரிலிருந்த அந்த சூட்கேஸிலிருந்து அழுகிய வாசனை வந்திருக்கிறது. திறந்து பார்த்தால் மாமிசம். கொஞ்சம் கவணமாகப் பார்த்தால் அது ஒரு மனிதருடைய மாமிசம். தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு அந்தப் பெண்ணைக் கைது செய்து சிறையில் அடைத்து விசாரிக்கிறார்கள் ஊட்டி போலீசார்.
அந்தப் பெண் கண் மருத்துவர் ஓமனா. சூட்கேஸில் இருந்த உடல் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பையனூர் முரளிதரன் என்பதும். ஊட்டி ரயில் நிலையத்தை அடுத்து இருந்த ஒரு விடுதியில் விஷ ஊசி செலுத்தி அவரைக் கொலை செய்துவிட்டு, உடலை அப்புறப்படுத்த டாக்சியைப் பயன்படுத்திய போதுதான் நாற்றமடித்ததன் காரணமாக ஓட்டுநரின் சந்தேகத்துக்குள்ளாகி கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
ஓமனா ஏன் முரளிதரனைக் கைது செய்தார் என்பதற்குப் பல கதைகள் இப்போது இணையத்தில் உலா வருகின்றன. அவருடைய காதலர் முரளிதரன், அவருக்கு ஏற்கனவே திருமனமான தகவலை மறைத்து தன்னை ஏமாற்றியதால், அவரை ஊட்டிக்கு அழைத்து வந்து கொலை செய்தார் என்பது அவற்றில் ஒரு கதை.
அந்தப் பெண்ணைத் தேடி கண்டறிந்து கைது செய்த, அப்போதைய கொடைக்கானல் காவல் ஆய்வாளர் கலைமோகன் சமீபத்திய பேட்டி ஒன்றில், வேறு ஒரு சம்பவத்தைச் சொல்கிறார். கேரளாவின் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் ஓமனா, அங்கு கண் மருத்துவராக பணிபுரிந்து வந்திருக்கிறார். அப்பகுதியைச் சேர்ந்த பையனூர் முரளிதரன் அவருடைய நண்பர்களின் தூண்டுதலால், ஓமனாவிடம் சிகிச்சை பெறச் சென்று, ஓமனாவை மயக்கி, அவர்கள் இருவரும் காதலிப்பதாக அவர் கதைகட்டி விட்டிருக்கிறார். இதனால் அவமானமடைந்த ஓமனா, நண்பர்களின் துணையுடன் முரளிதரனுடன் பேச்சுவார்த்தை நடத்தி இப்பிரச்சினையை முடித்து வைத்திருக்கிறார்.
ஆனாலும் முரளிதரனின் தொல்லைகள் தொடரவே செய்திருக்கிறது. இந்தப் பிரச்சினையிலிருந்து முழுதாக வெளிவர நினைத்து தன் மருத்துவ நண்பர்களின் உதவியுடன் மலேசியாவில் அரசு மருத்துவர் பணிக்கு முயற்சி செய்து மலேசியாவுக்கே சென்றிருக்கிறார்.
மலேசியாவுக்கு ஓமனாவைத் தேடிச்சென்ற முரளிதரன், அங்கும் தொல்லை கொடுத்திருக்கிறார். ஓமனாவின் பாஸ்போர்ட்டை ஒளித்து வைத்திருக்கிறார். ஓமனா மனநிலை பாதிக்கப்பட்டவர், அவருக்கு எப்படி மருத்துவர் பணி வழங்கப்பட்டது என மொட்டைக் கடுதாசி போட்டு ஓமனாவுக்கு மேலும் தொல்லை கொடுக்க விரக்தியின் உச்சத்துக்கே சென்றிருக்கிறார் ஓமனா.
கேரளாவுக்கே திரும்பிய முரளிதரனைத் தொடர்பு கொண்ட ஓமனா, தெளிவான திட்டமிடலுடன் ஊட்டிக்கு வரவழைத்து, விஷ ஊசி செலுத்தி முரளிதரனைக் கொலை செய்திருக்கிறார். பின்னர் தன்னுடைய மருத்துவ அறிவைக் கொண்டு உடலை சிறு சிறு துண்டுகளாக்கி மூட்டைகட்டி கொடைக்காணலுக்குச் சென்று உடலை அப்புறப்படுத்தலாம் எனத் திட்டமிட்டிருக்கிறார். அது முடியாமல் போக கண்ணியாகுமரி சென்று கடலில் உடலை வீச முடிவு செய்துதான் டாக்சியைப் பயன்படுத்தி இருக்கிறார். டாக்சி டிரைவரின் சமயோசிதத்தால் கைது செய்யப்பட்டார் ஓமனா.
வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது. தமிழக போலீசார் இவ்வழக்கை நடத்தி வந்தனர். வழக்கின் கோப்புகள் ஆங்கிலத்திலோ அல்லது மலையாளத்திலோ தனக்கு வழங்கப்பட வேண்டும் என அவர் கோர வழக்கு வழக்கத்தை விட தாமதமாக நடந்து கொண்டிருந்திருக்கிறது. இந்நிலையில் 2001-ம் ஆண்டு வழக்கு விசாரணையின் போது நிபந்தனைகளுடன் ஓமனாவுக்கு ஊட்டி மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருக்கிறது. அதற்கு அடுத்த வாய்தாவின் போது ஓமனா ஆஜர் ஆகாமல் இருக்கவே போலீசார் சந்தேகப்பட்டு தேடியபோது அவர் தலைமறைவான தகவல் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. எங்கு தேடியும் அவர் கிடைக்காமல் போகவே வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டு இருக்கிறது. அவர் சிங்கப்பூர் அல்லது மலேசியாவுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்ற முடிவுக்கு வருகிறார்கள். Interpol உதவியும் கோரப்பட்டது. டாக்டர்.ஓமனா ஒரு தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவில் ஒரு கட்டடத்தில் இருந்து ஓர் இந்தியப் பெண் குதித்து தற்கொலை செய்துகொண்டார். அடையாளம் கண்டறியப்படாத அந்தப் பெண்ணின் உடல் நான்கு மாதங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இந்தியத் தூதரகம் மூலமாக ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்கொலை செய்துகொண்ட அப்பெண்ணின் படத்துடன் அடையாளம் தெரிந்தால் தெரிவிக்குமாறு கேரளாவில் பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டது. அந்தச் செய்தித்தாளைப் பார்த்த பலரும் அது ஓமனா தான் என அடித்துக்கூறினார்கள். ஓமனாவின் குடும்பத்தினரும் கூட அது ஓமனா தான் என சொன்னார்கள்.
Also Read – `அண்டா மேல கைய வைச்ச…’ கட்சிகளின் டிரெண்டிங் பிரியாணி சம்பவங்கள்!
ஆனால், திருவணந்தபுரத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் அது மெர்லின் ரூபி எனவும், அவரை நான்கு மாதங்களாகத் தேடி வருவதாகவும் சொன்னார்கள். உரிய அடையாளங்களைச் சமர்ப்பித்து மெர்லினின் உடலைப் பெற்று இறுதி மரியாதையைச் செலுத்தினார்கள். அப்படியானால், ஓமணா என்ன ஆனார்? அது இன்றுவரை தெரியாது.
கடந்த ஆண்டு மலையாளத்தில் சுகுமாரன் குரூப் பற்றிய திரைப்படம் துல்கர் சல்மானின் நடிப்பில் வெளியானதைப் போல, ஓமனாவின் கதையைத் திரைப்படமாக்கும் முயற்சி மலையாள சினிமா உலகில் நடந்து வருகிறது.