இந்தியாவின் மர்லன் பிராண்டோ என்று புகழப்படும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93-வது பிறந்தநாள் இன்று. கர்ணன் தொடங்கி வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சி, அப்பர் என அவர் திரையில் ஏற்காத பாத்திரங்களே இல்லை எனலாம். பராசக்தி தொடங்கி பூப்பறிக்க வருகிறோம் வரை திரைவானில் ஜொலித்த அந்த மகா கலைஞன் முதன்முதலில் ஹீரோவான தருணம் தெரியுமா?
`சிவாஜி’ கணேசன்
விழுப்புரம் மாவட்டத்தில் பிறந்த கணேசனின் சிறுவயது நாட்கள் பெரும்பாலும் திருச்சி பொன்மலை சங்கிலியாண்டபுரத்திலேயே கழிந்திருக்கிறது. கட்டபொம்மன் நாடகத்தைப் பார்த்து, தானும் நடிகனாக வேண்டும் என மனதில் லட்சியத்தை ஏற்படுத்திக் கொண்ட அவர், அப்போது திருச்சியில் முகாமிட்டிருந்த பொன்னுசாமி நாடகக் குழுவில் தன்னை இணைத்துக் கொண்டார். அநாதை என்று கூறி அந்த நாடகக் குழுவில் சேர்ந்த அவருக்கு முதலில் கிடைத்த வேடம் ராமாயணத்தில் சீதை வேடம். பின்னர், சூர்ப்பனகை தொடங்கி பூதனை, பதிபக்தி படத்தில் சாவித்திரி நடித்திருந்த வேடத்தில் நாடகத்தில் பெண் வேடத்திலும் நடித்தார். அப்போது நாடகக் குழுவில் வந்து சேர்ந்த எம்.ஆர்.ராதாவும் கணேசனும் நெருங்கிய நண்பரானார்கள். இருவரும் இணைந்து நாடக மேடைகளில் கலக்கிக் கொண்டிருந்தனர்.
கைகொடுத்த அண்ணாவின் நாடகங்கள்
நடிகர் திலகம் சிவாஜி சினிமாவில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததற்கு அறிஞர் அண்ணா எழுதிய நாடகங்கள் முக்கியப் பங்காற்றின. கே.ஆர்.ராமசாமியின் கிருஷ்ணன் நாடக சபாவுக்கு அண்ணா எழுதிய ஓர் இரவு நாடகத்தில் கதாநாயகியாக நடித்த சிவாஜி, புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பாராட்டைப் பெற்றார். அண்ணா எழுதிய மற்றொரு நாடகமான சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் நாடகத்தில் கதை நாயகன் சிவாஜி கேரக்டரில் அவர் நடித்தது, பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்த நாடகத்தைப் பார்த்த பெரியார், `சிவாஜி’ என்ற பட்டத்தை அவருக்கு அளித்தார்.
அதன்பின்னர், வேலூரில் அவரின் நாடகசபாவினர் போட்ட நூர்ஜஹான் நாடகம் அவரது வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அந்த நாடகத்தில் நூர்ஜஹானாக நடித்த சிவாஜி கணேசனின் நடிப்பைப் பார்த்து பிரமித்துப் போனார் பி.ஏ.பெருமாள். இதையடுத்து, சிவாஜியை ஹீரோவாக வைத்து படமெடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, பாவலர் பாலசுந்தரத்தின் `பராசக்தி’ கதையை வாங்கி படமாக்க முயற்சித்தார். ஏ.வி.எம் நிறுவனத்தோடு இணைந்து தயாரிக்க அவர் திட்டமிட்டார். ஆனால், சிவாஜிக்குப் பதிலாக கே.ஆர்.ராமசாமியை ஹீரோவாக வைத்து படமெடுக்க அந்த நிறுவனம் அறிவுறுத்தியது. ஆனால், ஹீரோ சிவாஜி கணேசன்தான் என்பதில் உறுதியாக இருந்த பி.ஏ.பெருமாள், சொந்தமாக அந்தப் படத்தை எடுக்கத் திட்டமிட்டார். சிவாஜியை ஹீரோவாக்கி படமெடுப்பது குறித்து பல்வேறு தடைகள் வந்தும், அதைத் தாண்டி படத்தை எடுத்து முடித்து 1952 தீபாவளிக்கு ரிலீஸ் செய்தார். படம் மிகப்பெரிய வெற்றிபெற்றதோடு சிவாஜியின் கலையுலகப் பயணத்தையும் வெற்றிகரமாகத் தொடங்கி வைத்தது.
இந்த நன்றியை மறவாத சிவாஜி ஒவ்வோர் ஆண்டும் பொங்கலுக்கு முன்னாள் வேலூரில் இருக்கும் பி.ஏ.பெருமாளின் வீட்டுக்கு நேரில் சென்று சீர்வரிசைப் பொருட்கள் கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார். சிவாஜியின் மறைவுக்குப் பிறகு அவரின் வாரிசுகள் இந்த வழக்கத்தைத் தொடர்ந்து வருகிறார்கள்.
Also Read – சி.சு.செல்லப்பா: `வாடிவாசல்’ கதை பேசும் அரசியல்!