`World Favourite Indian’ என்ற டேக்லைனோடு உலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான வளர்ந்து நிற்கும் பஜாஜ் நிறுவனத்தின் கதை தெரியுமா… பல்ஸர் கொடுத்த திருப்புமுனை என்ன?
Bajaj Auto
ஜாம்லால் பஜாஜ் என்பவரால் M/s Bachraj Trading Corporation Private Limited என்ற பெயரில் 1945-ம் ஆண்டு தொடங்கப்பட்டதுதான் பஜாஜ் ஆட்டோ நிறுவனமானது. பஜாஜ் என்றால் என்ன பொருள் தெரியுமா… பஜாஜி என்ற பஞ்சாபி சொல்லில் இருந்து வந்ததுதான் பஜாஜ். பஜாஜி என்றால் துணி என்று பஞ்சாபியில் பொருள். பஞ்சாபின் சிந்து மாகாணத்தில் இன்றும் பஜாஜ் என்ற அடைமொழியோடு இருக்கும் குடும்பங்களைப் பார்க்க முடியும். டூவீலர்கள், த்ரீ வீலர்கள் என ஆட்டோமொபைல் துறையில் கொடிகட்டிப் பறக்கும் பஜாஜ் நிறுவனம், வீட்டு உபயோகப் பொருட்கள், லைட்டிங், இரும்பு மற்றும் ஸ்டீல், காப்பீடு, டிராவல் மற்றும் ஃபைனான்ஸ் என பல்வேறு துறைகளிலும் கால்பதித்திருக்கிறது. சமீபத்தில் அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 100 பில்லியன் அமெரிக்க டாலர்களாக (ரூ.7.5 லட்சம் கோடி) உயர்ந்தது. இதன்மூலம், டாடா, ரிலையன்ஸ், அதானி ஆகிய குழுமங்களுக்கு அடுத்தபடியாக 100 பில்லியன் டாலர் சந்தை மதிப்புகொண்ட நான்காவது குழுமமாக உருவெடுத்திருக்கிறது.
1945-ல் தொடங்கிய பயணத்தின் முதல்படியாக 1948-ம் ஆண்டு முதல் இறக்குமதி செய்யப்பட்ட டூ வீலர்களை இந்தியாவில் விற்று வந்தனர். டூவீலர்கள், த்ரீ வீலர்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்வதற்கான லைசென்ஸை பஜாஜ் நிறுவனம் 1959-ல் பெற்றது. 1960-ல் பப்ளிக் லிமிட்டெட் கம்பெனியாக உருவெடுத்த பஜாஜ் ஆட்டோ, 1991-ம் ஆண்டு பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதற்கு முன்பு வரை இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வந்தது.
1989-ல் ஹமாரா பாஜாஜ் விளம்பரம் மூலம் இந்திய மிடில் கிளாஸ் குடும்பங்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தது. அந்த நிறுவனத்தின் சேட்டக் மாடல் ஸ்கூட்டர்கள் ஒவ்வொரு குடும்பத்தின் பெருமை என்ற நிலையும் ஒரு காலத்தில் இருந்தது. பெரும்பாலான இந்தியர்களின் முதல் ஸ்கூட்டர் என்ற பெருமையும் சேட்டக் மாடலுக்கு உண்டு. சந்தையில் இருந்த ஆதிக்கம் நீண்ட நாளைக்கு நிலைக்காது என்பதை பஜாஜ் நிறுவனம் அறிந்துவைத்திருந்தது. பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பிறகு ஹோண்டா நிறுவனம் பஜாஜூக்கு பெரிய போட்டியாக உருவெடுத்தது. கோடாக் அனலாக் கேமராவுக்கு நேர்ந்த அதே விதி சேட்டக் ஸ்கூட்டருக்கும் நடந்தது.
தொழில் போட்டி
1990களின் தொடக்கம் முதலே பஜாஜ் நிறுவனம் பல்வேறு போட்டிகளை எதிர்க்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. பலமுனைகளில் இருந்தும் வந்த திடீர் போட்டியால் கொஞ்சம் திணறித்தான் போனது பஜாஜ் ஆட்டோ. குறிப்பாக, ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டர் பெற்ற வரவேற்பு பஜாஜ் நிறுவனத்தை ஆட்டம் காணச் செய்தது. பெரும் போராட்டத்துக்குப் பின்னர் 2005-ல் சேட்டக் ஸ்கூட்டரின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. அதன்பின்னர், 2006-ல் Kristal மாடல் மூலம் ஸ்கூட்டர் செக்மெண்டுக்குள் ரீ-எண்ட்ரி கொடுத்தது பஜாஜ். ஆனால், எதிர்பார்த்தது போன்ற வெற்றியைப் பெற முடியவில்லை. இதனால், ஸ்கூட்டர் செக்மெண்டில் இருந்து வெளியேறும் முடிவை 2009-ல் எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
ஒருபுறம் இந்த சூழலால் பின்னடைவு ஏற்பட்டிருந்தாலும், கொஞ்சம் வித்தியாசமாக யோசித்து அதை சரி செய்ய முயன்றது பஜாஜ்.
ரீ-பொசிஷனிங்
ஆட்டோமொபைல் துறையில் நீண்ட அனுபவம் கொண்டிருந்த பஜாஜ் நிறுவனம் சந்தையில் ஒரு மேஜிக்கை நிகழ்த்துவதற்கான சரியான தருணத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்தது. விளம்பரங்கள் வழியாக அந்த மெசேஜையும் 2001-ல் உணர்த்தியது அந்த நிறுவனம். Eliminator’, ‘Boxer’ மற்றும் ‘Caliber’ மாடல் டூவீலர்களுடன் 1989-ல் பாப்புலரான ஹமாரா பஜாஜ் விளம்பரம் புதுப்பிக்கப்பட்டது. 2004-ல் அறிமுகப்படுத்தப்பட்ட Discover 125 மாடல் அந்த செக்மெண்டில் பஜாஜை டாப் பிளேயராக மாற்றியது. ஆனாலும், பஜாஜின் பெரிய வெற்றியைக் கொடுத்தது பல்ஸர் மாடல். டோக்கியோவில் இருக்கும் R&D துறை, டிசைனர் Glynn Kerr உதவியால் 2001-ல் 150, 180 CC செக்மெண்டில் அறிமுகமான பல்ஸர், பஜாஜ் நிறுவனத்துக்கு வேற லெவல் வெற்றியைக் கொடுத்தது.
2011-ல் குறிப்பிட்ட செக்மெண்டில் 47% மார்க்கெட் ஷேர், ஒட்டுமொத்தமாக ஆட்டோமொபைல் செக்மெண்டில் பஜாஜின் ஷேரை 27% ஆகவும் உயர்ந்தது. 2012 ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் மட்டும் 50 மில்லியன் பல்ஸர்களை பஜாஜ் நிறுவனம் விற்றிருந்தது. 125 சிசி செக்மெண்டில் இருந்து மார்க்கெட்டின் கவனத்தை 150 சிசி, 180 சிசி என அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் சென்றதில் பல்ஸரின் ரோல் ரொம்பவே முக்கியமானது. 2007ல் மட்டும் இந்தியாவில் விற்றதைப் போலவே மூன்று மடங்கு அதிகமான பல்ஸர்களை கொலம்பியாவில் விற்றது.
நைஜீரியாவின் Boxer சர்ப்ரைஸ்
இந்தியா மட்டுமல்லாது, ஆப்பிரிக்க நாடுகள், தென்கிழக்கு ஆசிய நாடுகள், தென்னமெரிக்க நாடுகளில் பஜாஜ் நிறுவனம் முக்கியமான மார்க்கெட் ஷேரைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இந்தோனேசியாவில் ஒவ்வொரு வீட்டிலும் பஜாஜின் எதாவது ஒரு தயாரிப்பு இருக்கும் என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. நைஜீரிய மார்க்கெட்டை வைத்து பஜாஜ் நிறுவனம் செய்த மேஜிக் உலகின் பல இடங்களில் அதற்கு கைகொடுத்தது.
அந்த மார்க்கெட்டில் பஜாஜுக்குப் பெரிய போட்டியாக இருந்த விலை மலிவான சீன பைக்குகள்தான். இதை மனதில் வைத்து உருவாக்கிய மாடல்தான் Boxer. சீன பைக்குகளை விட 25% விலை அதிகமாக பொசிஷன் செய்யப்பட்ட இந்த மாடல் பைக்குகள், ஃப்யூல் எஃபிசீயன்ஸியால் பிரபலமானது. நைஜீரியர்களும் மிகப்பெரிய வரவேற்பைக் கொடுத்தனர். இந்த ஐடியாவை பல இடங்களிலும் செயல்படுத்திய பஜாஜ், உலக அளவில் இலங்கை, வங்கதேசம், கொலம்பியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் டாப் செல்லர் என்ற பெருமையைப் பெற்றது. 2020 கணக்கின்படி பஜாஜ், இந்தியாவை விட வெளிநாடுகளிலேயே அதிக எண்ணிக்கையிலான பைக்குகளை விற்கிறது.
இந்தியாவின் அடையாளமாக மாறியிருக்கும் பஜாஜ் நிறுவனம் தற்போது தனது சேட்டக் மாடலை தூசிதட்டி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அந்த மாடலை முன்மாதிரியாக வைத்து தயாரித்திருக்கிறது.