ஜூன் 30, 2001 – இந்த நாள் தமிழக அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத நாள். அப்போதைய ஜெயலலிதா அரசு ஊழல் செய்ததாக நள்ளிரவில் கருணாநிதியைக் கைது செய்தது தேசிய அளவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கருணாநிதி ஏன் கைது செய்யப்பட்டார்?
கருணாநிதி கைதின் பின்னணியைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், அதற்கு முந்தைய ஆட்சியில் ஊழல் வழக்கில் ஜெயலலிதா கைது பற்றி அறிந்துகொள்ள வேண்டும். 1991-1996 ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ஊழல் நடந்ததாகப் பதியப்பட்ட வழக்கில் விசாரணை நடந்து அவர் கைது செய்யப்பட்டார். 1996ம் ஆண்டு டிசம்பர் 7-ம் தேதி கைது செய்யப்பட்ட ஜெயலலிதா 27 நாட்கள் சிறையில் கழித்த பின்னர் பிணையில் வந்தார். தனது கைதுக்குக் கருணாநிதிதான் காரணம் என முழுமையாக நம்பிய ஜெயலலிதா, அதற்குப் பழிவாங்கக் காத்திருந்தார். சிறையில் இருந்து வெளியே வந்தபிறகு மதுரையில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ஜெயலலிதா, `என்னை 27 நாட்கள் சிறையில் வைத்திருந்த கருணாநிதியைப் பழிவாங்காமல் விட மாட்டேன்’ என்று வெளிப்படையாகவே பேசினார்.
2001ம் ஆண்டு மே 14-ம் தேதி முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்றார். இது சர்ச்சையான நிலையில், அதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் ஜூன் 29-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டன. அதேபோல், விழுப்புரத்தில் சன் டிவி நிருபர் சுரேஷ் கைதுக்கு எதிராகப் போராட்டம் நடத்த முயன்ற 150-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டனர். ஜெயலலிதா பதவியேற்றதும் சென்னை மாநகர ஆணையராக ஆச்சார்யாலுவும் டிஜிபியாக ரவீந்திரநாத்தும் நியமிக்கப்பட்டனர். தீவிர ஜெயலலிதா விசுவாசிகளாக ஊடகங்களால் அப்போது பேசப்பட்டவர்கள் இவர்கள். இதுதவிர நூற்றுக்கணக்கான ஐ.ஏ.எஸ் – ஐ.பி.எஸ் அதிகாரிகள் அப்போது பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். இந்தசூழலில், குருவாயூர் கிருஷ்ணன் கோயிலுக்கு ஜூலை 1-ம் தேதி செல்வதாக இருந்த ஜெயலலிதாவின் பயணத் திட்டமும் முன்னதாகவே ரத்து செய்யப்பட்டது. அந்த கோயிலுக்கு யானை ஒன்றை அளிப்பதாக இருந்தார் ஜெயலலிதா. எதிரியைப் பழிவாங்கிவிட்டு குருவாயூர் கோயிலுக்கு யானை வழங்கினால் நிம்மதியாக வாழலாம் என ஜோதிடர் ஒருவர் ஜெயலலிதாவுக்கு ஆருடம் சொன்னதாக சில பத்திரிகைகள் அப்போது எழுதின.
கருணாநிதி கைது
தி.மு.க ஆட்சியில் மேம்பாலம் கட்டியதில் ஊழல் நடந்ததாக 2001-ம் ஆண்டு ஜூன் 29-ம் தேதி இரவு 9 மணியளவில் சி.பி.சி.ஐ.டி போலீஸாரால் வழக்குப் பதியப்பட்டது. சென்னை மாநகர ஆணையர் ஜே.சி.டிஆச்சார்யாலு அளித்த புகாரின்படி வழக்குப் பதியப்பட்டது. ஒரு சில மணிநேரங்களிலேயே கைது நடவடிக்கையை போலீஸார் தொடங்கினர். நள்ளிரவு 1.45 மணியளவில் மயிலாப்பூர் ஆலிவர் ரோட்டில் இருந்த கருணாநிதி இல்லத்துக்குள் நுழைந்த போலீஸார், முதல் மாடியில் இருந்த அவரது அறைக்குள் நுழைந்து அவரை உடை மாற்றச் சொல்லியிருக்கிறார்கள். அவரது கைதுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அப்போதைய மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோரையும் குண்டுக்கட்டாகத் தூக்கிக் கைது செய்தது போலீஸ்.
கருணாநிதி கைது மிகச்சில அதிகாரிகளுக்கு மட்டும் தெரியும்படியாக பரம ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. அப்போதைய சென்னை கமிஷனர் முத்துக்கருப்பன், சி.பி.சி.ஐ.டி டிஐஜி முகமது அலி, டிஜிபி ரவீந்திரநாத் ஆகியோருக்கு மட்டுமே தெரியும். கருணாநிதி கைது பற்றிய செய்தி ஒரு சில மணி நேரங்களிலேயே தமிழகம் முழுவதும் பரவியது. தி.மு.க-வினரின் போராட்டங்களால் தமிழகமே அமளிதுமளியானது. சென்னை மட்டுமல்லாது மதுரை, கோவை, தூத்துக்குடி, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட பல நகரங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. போராட்டங்களால் சாலைகள் வெறிச்சோடின. தமிழகம் முழுவதும் தி.மு.க தொண்டர்கள் ஆக்ரோஷமாகப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
மாநிலம் முழுவதும் பல இடங்களில் நடந்த போராட்டங்களில் தடியடி நடத்தப்பட்டது. ஒரு சில இடங்களில் தொண்டர்கள் சிலர் அதிர்ச்சியில் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகின. போராட்டங்கள் தீவிரமடைந்திருந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் முரசொலி மாறன், மதுரையில் மு.க.அழகிரி என தி.மு.க-வின் முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தி.மு.க-வினர் தொடர்ந்து கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து அப்போது சென்னை மேயராக இருந்த மு.க.ஸ்டாலின் சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்தார். சென்னையில் கைது செய்யப்பட்ட ஸ்டாலின், ஜூலை ஒன்றாம் தேதி மதுரை மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். மதுரை மத்திய சிறையில் கருணாநிதியை விடுவிக்கக் கோரி சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதத்தைத் தொடங்கினர்.
லுங்கியுடன் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட கருணாநிதியை ஓமந்தூரார் மாளிக்கு அருகில் இருந்த சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்தனர். கனிமொழி, ராஜாத்தியம்மாள் ஆகியோர் அங்கு விரைந்ததை அடுத்து, அவசர அவசரமாக வேப்பேரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார் கருணாநிதி. பின்னர் வேப்பேரி காவல்நிலையம் முன்பு கருணாநிதி குடும்பத்தினருக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன்பிறகு, மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட கருணாநிதியை ஜூலை 10-ம் தேதி வரை சிறையில் அடைப்பதற்கான உத்தரவைப் பெற்றது போலீஸ். சிறையில் அடைக்கப்படுவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட கருணாநிதி, சிறை வாசலில் சுமார் ஒரு மணிநேரம் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். சென்னை சென்ட்ரல் அருகே இருந்த மத்திய சிறைச்சாலை வாசலில் கருணாநிதி நடத்தும் போராட்டம் அறிந்து தி.மு.க தொண்டர்கள் அப்பகுதியில் குவியத் தொடங்கினர்.
கருணாநிதி கைதுக்கு முன்பாகவே ஒரு மணியளவில் முன்னாள் தலைமைச் செயலாளர் கே.ஏ.நம்பியார் மற்றும் மேம்பால விவகாரத்தில் ஆலோசகராக இருந்த என்.எஸ்.சீனிவாசன் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
நேரடியாகத் தலையிட்ட பிரதமர் வாஜ்பாய்
கருணாநிதி கைது தேசிய அரசியலில் புயலைக் கிளப்பியது. அப்போது ஆட்சியில் இருந்த வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க அரசுக்கு தி.மு.க ஆதரவு கொடுத்திருந்தது. அதுதவிர, மத்திய அமைச்சர்கள் இருவர் கைதும் இந்த சம்பவத்தைத் தேசிய அரசியலில் பெரும் விவாதப் பொருளாக்கியது. ஜெயலலிதா ஆட்சியைக் கலைக்காவிட்டால், ஆதரவை வாபஸ் பெற்றுவிடுவோம் என தி.மு.க தரப்பில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.
இந்தசூழலில் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் வாஜ்பாய் நேரடியாகவே போன் செய்தார். ஆனால், அந்த அழைப்புகளை ஜெயலலிதா எடுக்காத நிலையில், முதன்மை செயலாளரிடம் அறிக்கை கேட்டது மத்திய அரசு. அதேபோல், ஜெயலலிதா அரசின் இந்த நடவடிக்கையையும் வாஜ்பாய் கடுமையாகக் கண்டித்தார். `கருணாநிதி கைது தனிப்பட்ட காரணங்களுக்காக நடத்தப்பட்டது’ என்று கண்டனம் தெரிவித்தார் அப்போதைய சட்டத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி. ஆனால், 356-வது சட்டப்பிரிவைப் பயன்படுத்தி அ.தி.மு.க அரசைக் கலைக்க வேண்டும் என்ற தி.மு.க கோரிக்கையை மத்திய அமைச்சரவை நிராகரித்தது.
இந்த கைது விவகாரத்தால் அப்போதைய கவர்னர் பாத்திமா பீவியைத் திரும்பப் பெற மத்திய அமைச்சரவை முடிவு செய்து, அவர் பதவி விலகினார்.
`ஊழல் வழக்கில் ஒருவர் மீது குற்றம்சாட்டப்பட்டார், அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அதற்கு முன் அவர் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்திருந்தால் மட்டுமே கைது நடவடிக்கை எடுக்க முடியும். அப்படியிருக்கும்போது இதில் எந்த நடைமுறைகளையுமே பின்பற்றாமல் உடனடியாக கைது செய்யப்பட்டது ஏன்?’ என்றும் சட்டத் துறை அமைச்சர் அருண் ஜெட்லி கேள்வி எழுப்பினார். கருணாநிதி கைதை பா.ஜ.க மட்டுமல்லாது அ.தி.மு.க கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சியும் கண்டித்தது. அதேபோல், தமிழகத்தில் அ.தி.மு.க கூட்டணியில் இருந்த பா.ம.க மற்றும் தா.ம.க ஆகிய கட்சிகளும் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். பா.ம.க நிறுவனர் ராமதாஸ் நேரடியாக சிறைக்கே சென்று கருணாநிதியை சந்தித்தார். அந்த சந்திப்புக்குப் பிறகு ராமதாஸிடமிருந்து காட்டமான அறிக்கையொன்று வெளியானது. ஜெயலலிதாவை நேரில் சந்தித்த ஜி.கே.மூப்பனார், கருணாநிதி கைது ஏற்றுக்கொள்ள முடியாது என்று வெளிப்படையாக விமர்சித்தார்.
கருணாநிதி கைது ஜெயலலிதா அரசுக்குப் பெரும் தலைவலியாக உருவெடுத்தது. நீதிமன்றம், மத்திய அரசு, அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது சமூக ஆர்வலர்கள் பலரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். 1996 தேர்தலுக்குப் பிறகு ஐந்தாண்டுகள் அரசியல் பேசாமல் ஒதுங்கியிருந்த நடிகர் ரஜினிகாந்தும் கருணாநிதி கைதுக்கு கண்டனம் தெரிவித்தார். ஜூலை 2-ம் தேதி மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன், டி.ஆர்.பாலு ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். `யாராக இருந்தாலும் அவர்களைக் கைது செய்யும் திறன் அரசுக்கு உண்டு’ என அ.தி.மு.க தலைமையிலிருந்து ஒரு அறிக்கை வெளிவந்தது. இப்படிப் பலமுனைகளிலிருந்து அழுத்தம் வந்த நிலையில் 2001 ஜூலை 4-ம் தேதி கருணாநிதி விடுவிக்கப்பட்டார். மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை ஜூலை 6-ம் தேதி ஜாமீனில் விடுவித்தார் சென்னை பெருநகர மாஜிஸ்திரேட் பி.அசோக்குமார். இந்த சம்பவத்துக்குப் பிறகு கருணாநிதிக்கு என்.எஸ்.ஜி பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
Also Read – முதல் மேடைப்பேச்சு முதல் லண்டன் பிரஸ்மீட் வரை… கருணாநிதி குறித்த 13 துளிகள்!