ஒன்றரை மணி நேரத்தில் கொரோனா வைரஸைக் கண்டுபிடிக்கும் புதிய மாஸ்கை அமெரிக்காவின் மசசூசெட்ஸ் மற்றும் ஹார்வார்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வடிவமைத்திருக்கிறார்கள். இந்த மாஸ்க் எப்படி செயல்படுகிறது?
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பலவும் பல்வேறு கட்ட முயற்சிகளைத் தொடர்ச்சியாக எடுத்து வருகின்றன. ஊரடங்கு, தனிமனித இடைவெளி, தடுப்பூசி என பலகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், கொரோனா பாதிப்பை உரிய பரிசோதனை மூலம் விரைந்து கண்டறிவது அதன் பரவலைக் கட்டுப்படுத்த முக்கியமான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. இதுவரை RT-PCR டெஸ்ட் உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் நடைமுறையில் இருந்தாலும், அதற்காக செலவிடப்படும் நேரமும் முக்கியமானது.
இதனால், கொரோனா வைரஸ் குறைந்த நேரத்தில் கண்டறியும் பல்வேறு நடைமுறைகள் தொடர்பாக ஆய்வுகள் ஒருபுறம் முடக்கி விடப்பட்டிருக்கின்றன. அந்த முயற்சியில் மசசூசெட்ஸ் மற்றும் ஹார்வார்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள். கொரோனா வைரஸை 90 நிமிடங்களில் கண்டுபிடிக்கும் மாஸ்க் ஒன்றை அவர்கள் வடிவமைத்திருக்கிறார்கள்.
எப்படி செயல்படுகிறது மாஸ்க்?
freeze-dried cellular technology எனப்படும் ஒருவகைத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் சிறிய அளவிலான சென்சார்கள் மாஸ்கில் பொருத்தப்படுகின்றன. WFDCF தொழில்நுட்பம் என்றழைக்கப்படும் இதில் கொரோனா வைரஸைக் கண்டறியும் சிந்தெடிக் ஜீன்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. சிலிகான் எலோஸ்டாமீட்டரால் சுற்றப்பட்டு அவை மாஸ்கில் பொருத்தப்படுகின்றன. மாஸ்கில் இருக்கும் சின்ன பட்டன் ஒன்றைத் தட்டினால் மிகச்சொற்பமான அளவு தண்ணீர் வெளிவரும்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அந்த தண்ணீர் மூலம் சிந்தடிக் ஜீன்கள் ஆக்டிவேட் ஆகின்றன. மாஸ்க் அணிந்திருப்பவரின் சுவாசம் மூலம் கொரோனா வைரஸ் இருப்பதை இது கண்டுபிடிக்கிறது. ஒருவேளை கொரோனா வைரஸ் இருந்தால், மாஸ்க் 90 நிமிடங்களில் நிறம் மாறிவிடும்.
இதுகுறித்து பேசிய மசசூசெட்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர் ஜேம்ஸ் காலின்ஸ், `இந்த மாஸ்கில் அணிந்துகொள்ளக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட அடுத்த தலைமுறை பயோ - சென்சார்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. முன்களப் பணியாளர்களான சுகாதாரத்துறைப் பணியாளர்கள், ராணுவ வீரர்களுக்காக இதை வடிவமைத்திருக்கிறோம்’’ என்றார்.
கோல்டு ஸ்டாண்டார்டு எனப்படும் பிசிஆர் டெஸ்டில் கிடைக்கும் முடிவுகள் அளவுக்கு இதன் முடிவுகளில் துல்லியம் இருக்கும்’ என்கிறார் ஹார்வார்டு ஆய்வாளர் பீட்டர் நியூஜின்.
Also Read – 24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும் காரணம்!