ஆக்ஸிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை 4 மாதங்கள் தற்காலிகமாகத் திறக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகியிருக்கும் நிலையில், ஆக்ஸிஜன் தேவையும் பலமடங்கு உயர்ந்திருக்கிறது. டெல்லி, குஜராத், மத்தியப்பிரதேசம், ஹரியான, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழந்த சம்பவங்களும் அரங்கேறின. இந்தசூழலில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆலையைத் திறக்க அனுமதித்தால் இலவசமாக ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து வழங்கத் தயார் என்று ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் குறிப்பிட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆலை திறந்து ஆக்ஸிஜன் உற்பத்திக்கு அனுமதிக்கலாமே என தமிழக அரசிடம் கேட்டது. இந்தசூழலில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பது குறித்து ஏறக்குறைய 2.30 மணி நேரம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில், தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பா.ஜ.க, தே.மு.தி.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அ.தி.மு.க சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், விஜயபாஸ்கர், தி.மு.க சார்பில் தூத்துக்குடி எம்.பி கனிமொழி, மாநிலங்களவை எம்.பி ஆர்.எஸ்.பாரதி, காங்கிரஸ் சார்பில் கே.வி.தங்கபாலு, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் முத்தரசன், பா.ஜ.க சார்பில் மாநிலத் தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, `ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டும் என்பது தமிழக அரசின் நோக்கமல்ல. ஆலையை மூடியதே அரசுதான். ஆனால், தற்போது ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளது. இதனால், ஆக்ஸிஜன் உற்பத்திக்காக 4 மாதங்கள் தற்காலிகமாக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்கலாம்’ என்று பேசினார்.
தி.மு.க எம்.பி கனிமொழி கூறும்போது, ஆக்ஸிஜன் உற்பத்திக்காகத் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை 4 மாதங்கள் திறக்க அனுமதிக்கலாம். ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தியைத் தவிர வேறு எந்த செயல்பாடுகளுக்கும் தமிழக அரசு மின்சாரம் வழங்கக் கூடாது’ என்று தெரிவித்தார். முத்தரசன் பேசும்போது,
தமிழகத்தில் உற்பத்தியாகும் ஆக்ஸிஜனை அரசின் அனுமதி இல்லாமல் மத்திய அரசு வேறு மாநிலங்களுக்கு வழங்கக் கூடாது. மனிதாபிமான அடிப்படையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யலாம்’ என்றார். இந்தக் கருத்துக்கு பா.ஜ.க சார்பிலும் ஆதரவு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஆக்ஸிஜன் உற்பத்திக்காக 4 மாதங்கள் தற்காலிகமாகத் திறக்க அனுமதிக்க முடிவு செய்யப்பட்டு, ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆலைக்கு உடனடியாக மின்சாரம் வழங்கப்படும். அதேபோல், ஆக்ஸிஜன் உற்பத்தி மற்றும் ஆலையின் செயல்பாடுகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு கண்காணிக்கும் என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு முன்பாக உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்திருக்கும் சிறப்பு மனுவில், ஸ்டெர்லைட் ஆலையைத் தமிழக அரசிடம் ஒப்படைப்பது ஆபத்தை விளைவிக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. மேலும், `ஆலையின் ஆக்ஸிஜன் உற்பத்திப் பிரிவை தமிழக அரசு நடத்துவது இயந்திரங்களுக்கு மட்டுமல்ல, அந்தப் பணியில் ஈடுபடுபவர்களுக்கும் பேராபத்தை விளைவிக்கும். ஆக்ஸிஜன் உற்பத்தியில் உயரழுத்தம் கொண்ட கொள்கலன்கள், அதிக வோல்டேஜில் இயங்கும் இயந்திரங்கள் உள்ளிட்டவைகளைப் பயன்படுத்த வேண்டும். இந்தப் பணியில் உரிய முன் அனுபவம் இல்லாதவர்களை ஈடுபடுத்தினால், உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜன் பயன்படுத்த முடியாத அளவுக்குத் தரம் குறைந்தநிலையில் இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது’ என்று கூறப்பட்டுள்ளது.