இசை, குரல், நடிப்பு- எம்.எஸ்.வி-யின் மூன்று முகம்… 3 சம்பவங்கள்!

மெல்லிசை மன்னர், எம்.எஸ்.வி என்று ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்களால் அன்போடு அழைக்கப்படும் எம்.எஸ்.விஸ்வநாதன் கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள எலப்பள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார். சிறிய வயதிலேயே தன்னுடைய தந்தையை இழந்தார். இதனால், அவரது தாத்தாவின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். கண்ணூரில் உள்ள நீலகண்ட பாகவதர் என்பவரிடம் இசை பயிலும் வாய்ப்பு எம்.எஸ்.வி-க்கு கிடைத்தது. எம்.எஸ்.வி-யின் இசை ஆர்வத்தையும் அறிவையும் அறிந்துகொண்ட அவர் இசையை பயிற்றுவித்தார். இவர்தான் எம்.எஸ்.வி-யின் முதல் இசை குரு. எம்.எஸ்.வி-க்கு நடிகராகும் ஆசை சிறுவயது முதலே இருந்தது. அவருக்கு ஜுபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் `கண்ணகி’ திரைப்படத்தில் பால கோவலனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில் பால கண்ணகியாக பிரபல பின்னணிப் பாடகி டி.வி. ரத்தினம் நடித்திருந்தார். படமாக்கப்பட்ட காட்சிகளைப் பார்க்கும் பொழுது கண்ணகிக்கு தம்பி போல் எம்.எஸ். விஸ்வநாதன் இருந்ததால் அப்படத்தில் இருந்து நீக்கப்பட்டார். அதே நிறுவனத்தில் ஆஃபீஸ் பாயாக இவர் பணிபுரிந்ததாகவும் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் ராமமூர்த்தியுடன் இணைந்து படங்களுக்கு இசையமைக்கத் தொடங்கினார். விஸ்வநாதன் – ராமமூர்த்தி கூட்டணி தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கியது என்றே கூறலாம். பாமர மக்களும் ரசிக்கும்படியான இசையயை அமைத்த பெருமை இவர்களையேச் சேரும். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். மேற்கத்திய இசைக்கருவிகளை முதன்முதலில் தமிழ் சினிமாவில் பயன்படுத்தியதும் இவர்தான். நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என மூன்று துறைகளிலும் கலக்கியவர். இவரைப் பற்றிய சுவாரஸ்யமான சில சம்பவங்களை இங்கே பார்க்கலாம்.

நடிகர்…

எம்.எஸ்.விஸ்வநாதனை காதல் மன்னன் படத்துல நடிக்க வைக்கணும்னு எப்படி தோணுச்சுனு இயக்குநர் சரணிடம் கேட்கும்போது அவர், “எம்.எஸ்.விஸ்வநாதன் சார் ஒரு லெஜண்ட். ரொம்ப ஸ்வீட்டான மனிதர். ஒருநாள் விவேக் எனக்கு ஃபோன் பண்ணாரு. தூர்தர்ஷன்ல எம்.எஸ்.வி பேட்டி ஒண்ணு கொடுத்துட்டு இருக்காரு. நல்லாருக்கு பாருங்கனு சொன்னாரு. அவர் பேச பேச பயங்கர எக்ஸ்பிரசிவா இருக்காரு. பயங்கர சைல்டிஷா இருந்தாரு. பார்த்தவுடன ரொம்பப் புடிச்சுது. உடனே விவேக்குக்கு ஃபோன் பண்ணேன். `இவரை படத்துல நடிக்க வச்சா எப்படி இருக்கும்னு கேட்டேன்’. முதல் படத்துல பேசபடக்கூடிய விஷயம் இருந்தா யாருனு திரும்பிப் பார்ப்பாங்க. அதனால், அவர வச்சு பண்ணலாம்னு முடிவு பண்ணேன். அவருக்கு எந்த மாதிரி கேரக்டர் கொடுக்கலாம்னு முடிவு பண்ணேன். ஹீரோ மேன்ஷன்ல தங்கி இருக்குறதால மெஸ் ஒண்ணு வைக்கலாம். அதுல எம்.எஸ்.விக்கு ஒரு கேரக்டர் கொடுக்கலாம்னு ஐடியா வந்துச்சு. அவரை பார்த்ததுக்கு அப்புறம்தான் அந்த கேரக்டர் உருவாச்சு. அதுனாலதான், அந்த கேரக்டருக்கு மெஸ் விஸ்வநாதன்னு பெயர் வச்சேன். ஏன்னா, அதுல எம்.எஸ்-அப்டின்ற சவுண்ட்டும் வரும். அதுக்கப்புறமா நானும் விவேக்கும் அவரைப் போய் பார்த்தோம். `ஐயயோ.. நான் எங்க நடிக்கிறது. அதெல்லாம் முடியாது. என்னை மியூசிக் பண்ண கூப்டுங்க’ அப்டின்னு சொல்லிட்டாரு. 

எம்.எஸ்.வி
எம்.எஸ்.வி

அவர்கிட்ட நடையா நடந்தோம். இரண்டு. மூணு மாசம் நடந்தோம். ரொம்ப மிரட்டுனோம். எப்பலாம் டைம் கிடைக்கிதோ அப்பலாம் போய்டுவோம். அம்மாகிட்ட ரொம்ப பயம் அவருக்கு. உங்க கிட்ட பேசினா வேலை நடக்காது அதனால உங்க மனச மாத்த சொல்லி உங்க அம்மாகிட்ட லெட்டர் குடுத்துருக்கோம்னு.. லெட்டர் எழுதி அவங்க அம்மா ஃபோட்டோ முன்னால வச்சுட்டு வந்துருவோம். அவர் உண்மையிலேயே பயந்துட்டு இருப்பாரு. ரொம்ப நாள் கழிச்சு நடிக்கிறேன்னு சொன்னாரு. ஆனால், ஒண்ணுனு கண்டிஷன் போட்டாரு. `என்ன சம்பளம் தருவீங்க?’னு கேட்டாரு. `என்ன சம்பளம் வேணும்’னு கேட்டோம். `பத்து லட்சம் வேணும். எனக்கு 5 ராமமூர்த்திக்கு 5’ அப்டின்னாரு. `நீங்க தான நடிக்கிறீங்க. அவர் நடிக்கலையே?’னு கேட்டோம். அதுக்கு அவர், `சோ வாட். விஸ்வநாதன் – ராமமூர்த்தினா அப்படி. ஷூட்டிங் ஸ்பாட்ல உட்காரவே மாட்டாரு. எதாவது பண்ணிட்டே இருப்பாரு. காதன் மன்னன்ல ஃபஸ்ட் ஷாட் அவரை வச்சுதான் எடுத்தேன். ரொம்ப சிறப்பா அந்த கேரக்டர பண்ணாரு” என்று கூறினார். 

இசையமைப்பாளர்…

வாலி ஒருமுறை எம்.எஸ்.வியைப் பற்றி பேசும்போது, “இன்றைக்கு வாலினு ஒருத்தன் இருக்கான்னா அது விஸ்வநாதன் அண்ணன் இட்ட பிச்சை. சந்திரமுகி கேசட் வெளியீட்டு விழால மேடைல சொன்னேன்.. `விஸ்வநாதன் அண்ணனை சந்திக்கிறதுக்கு முன்னாடி எனக்கு சோத்துக்கே வக்கில்லை. விஸ்வநாதன் அண்னனை சந்தித்த பிற்பாடு எனக்கு சோறு திங்கவே நேரமில்லை’னு சொன்னேன்” என்றார். இசைத்துறையில் பலரையும் இசையால் பலரையும் வாழ வைத்த எம்.எஸ்.வி அவர்களின் வாழ்வில் நடந்த சம்பவம் ஒன்றைப் பற்றி இப்போ தெரிஞ்சுக்கலாம்.

கண்ணதாசன் மற்றும் எம்.எஸ்.வி
கண்ணதாசன் மற்றும் எம்.எஸ்.வி

டி.ஆர்.ராமண்ணாவின் இயக்கத்தில் எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த படம் `பெரிய இடத்துப் பெண்’. இந்தப் படத்தின் கம்போசிஷனின் போது காலையில் சரியாக ஒன்பது மணிக்கு கண்ணதாசன் ஸ்டுடியோவுக்கு வந்துள்ளார். எப்பவும் சரியான நேரத்துக்கு வந்துவுடக்கூடிய எம்.எஸ்.வி அன்றைக்கு பத்து மணியாகியும் வரவில்லை. கண்ணதாசனும் ராமண்ணாவும் பாடல் அமைய வேண்டிய சூழலைப் பத்தி பேசிகிட்டு இருந்துருக்காங்க. தாமதமாகியும் எம்.எஸ்.வி வராததால், தன்னுடைய உதவியாளரை அழைத்து எம்.எஸ்.வி-க்கு ஃபோன் பண்ண சொல்லியிருக்கிறார். அப்போது எம்.எஸ்.வி தூங்கிக்கொண்டு இருப்பதாக எம்.எஸ்.வியின் உதவியாளர் கூறியுள்ளார். அப்புறம் கொஞ்சம் நேரம் கூட அவருக்காக காத்திருந்துள்ளார். பதினொரு மணியாகியும் அவர் வரவில்லை. இதனால், கண்ணதாசனே அவரது வீட்டுக்கு ஃபோன் செய்துள்ளார். அப்போதும் அவரது உதவியாளர் ஃபோனை எடுத்து அவர் தூங்கிக்கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். அன்றைக்கு எம்.எஸ்.வி 12 மணிக்கே மேலதான் தூங்கி எழும்பியிருக்காரு. அவரது உதவியாளர் கண்ணதாசன் ஃபோன் பண்ணதை சொல்லியிருக்காரு. அப்போதான் விஷயமே எம்.எஸ்.வியின் நினைவுக்கு வந்துள்ளது. உடனே, அவசர அவசரமாக கிளம்பி ராமண்ணாவின் அலுவலகத்துக்கு வந்துள்ளார். அவர் வந்து சேர்வதற்கு முன்னதாகவே கண்ணதாசன் அங்க இருந்து கிளம்பி போய்ருக்காரு. ராமண்ணா ஒரு காகிதத்தை எடுத்து `இதனை உங்களிடம் கண்ணதாசன் கொடுக்க சொன்னார்’ என்று கூறியுள்ளார். காகிதத்தில் எழுதியிருந்த வரிகளைப் பார்த்ததும் எம்.எஸ்.வியால் சிரிப்பை அடக்கவே முடியவில்லையாம். `அவனுக்கென்ன தூங்கிவிட்டான், அகப்பட்டவன் நானல்லவோ’ என்று அதில் பாடலை எழுதியுள்ளார், கண்ணதாசன். அவர் போட்ட மெட்டுக்கு இந்த வரிகள் பொருந்திப்போக அந்தப் படத்திலும் இந்தப் பாட்டு இடம்பெற்றது.

பாடகர்…

எம்.எஸ்.வி மற்றும் எஸ்.பி.பி
எம்.எஸ்.வி மற்றும் எஸ்.பி.பி

மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பி சங்கமம் திரைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வரும் மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம் பாடலில் எம்.எஸ்.வி பாடியதை குறிப்பிட்டு பேசினார். ரஹ்மான் கூப்பிட்டதை மிகவும் ஆனந்தமாக குறிப்பிட்டு எஸ்.பி.பியிடம் பேசியுள்ளார். எம்.எஸ்.வி.. எஸ்.பி.பி-யிடம், “ரஹ்மான் என்னை பாடுறதுக்கு கூப்பிட்டாரு தம்பி. பாட்டு சொல்லி குடுங்கனு கேட்டேன். உங்களுக்கு எப்படி சொல்லி குடுக்குறதுனு கேட்டாரு. நானா இருந்தா மியூசிக் டைரைக்டரா இருந்தாலும் சொல்லிக் கொடுப்பேன்னு சொன்னேன். அதுக்கப்புறம் பாடுனாரு. அப்போதான் தெரியுது மியூசிக் டைரைக்டர் சொல்லிக் கொடுக்கும்போது பாடுறதுக்கு எவ்வளவு கஷ்டம்னு.. என்ன பாடுனாலும் நல்லால்லனு சொல்றாரு. இன்னொரு விதமா பாடுங்கனு சொல்றாரு. எனக்கு தெரிஞ்சது எல்லாம் கொட்டிட்டேன். கடைசில பாடுனத கேக்கலாமானு அவர்கிட்ட கேட்டேன். எடிட் பண்ணனும்னு சொன்னாரு. எடிட் பண்றது என்னனு எனக்குப் புரியல. நான் நினைச்சேன் இவருக்கு புடிக்கல போல இருக்குனு நினைச்சேன். நல்ல சம்பளம் கொடுத்தாரு. கால் தொட்டு கும்பிட்டாரு. அங்க இருந்து போனதுக்கு அப்புறம் ரேடியோல ஒருநாள் பாட்டு கேக்குது. அவர் என்னன்னமோ பண்ணி நான்கூட பெரிய சிங்கர் மாதிரி பண்ணிட்டாரு தம்பி” அப்டினு சொல்லியிருக்காரு.

Also Read : ஹெச்.ராஜாவுக்கு கறுப்புக் கொடி… காலியாகும் சிவகங்கை பா.ஜ.க – பின்னணி என்ன?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top