திருநெல்வேலி மாநகராட்சி அருகே இருந்த தனியார் பள்ளியின் கழிப்பறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் எட்டாம் வகுப்பு மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர். என்ன நடந்தது?
திருநெல்வேலி பள்ளி
திருநெல்வேலி மாநகராட்சி அருகே இயங்கி வரும் அரசு உதவிபெறும் பள்ளி சாஃப்டர் மேல்நிலைப்பள்ளி. ஆறாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் சுமார் 2,000 மாணவர்கள் இங்கு பயின்று வருகின்றனர். மாநகராட்சி அலுவலகத்துக்கு அருகிலேயே இந்தப் பள்ளி செயல்பட்டு வருகிறது. கொரோனா சூழலால் மூடப்பட்டிருந்த பள்ளி சமீபத்தில் திறக்கப்பட்டது.
இன்று காலை இரண்டாவது பாடவேளையின் போது விளையாடுவதற்காக எட்டாம் வகுப்பு மாணவர்கள் சென்றிருக்கிறார்கள். பள்ளியின் கழிப்பறைக்கு மாணவர்கள் சென்றபோது, கழிப்பறையின் சுற்றுச்சுவர் திடீரென பெரும் சத்தத்தோடு இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் எட்டாம் வகுப்பு மாணவர்கள் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். சிகிச்சை பலனின்றி மேலும் ஒரு மாணவர் உயிரிழந்த நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை மூன்றாக அதிகரித்தது. மேலும், 3 மாணவர்கள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாணவர்கள் போராட்டம்
விபத்து குறித்து தகவல் தெரிவித்தும் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்துக்கு உடனடியாக வரவில்லை என்றும், அலட்சியத்தாலேயே உயிரிழப்பு ஏற்பட்டதாகக் கூறி மாணவர்கள் வகுப்புகளைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்தில் காவல் கண்காணிப்பாளர் செந்தாமரைக் கண்ணன், எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அரசு உதவிபெறும் பள்ளியில் இருக்கும் கட்டடங்களை மாநகராட்சி அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்யவில்லை என்றும் இதனால் மாணவர்களின் பாதுகாப்புக் கேள்விக்குறியாகியிருப்பதாகவும் புகார் எழுந்திருக்கிறது. விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு பெற்றோர்கள் வரத் தொடங்கியதால், பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு மாணவர்கள் அனைவரும் பள்ளியில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களோடு போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். நெல்லை டவுன் பகுதியில் இருக்கும் பள்ளியில் ஏற்பட்ட இந்த விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.