இங்கிலாந்து இளவரசர் வில்லியம் கடந்த ஆண்டு தொடங்கிய Earthshot Prize விருதுக்கான 15 பேர் இறுதிப் பட்டியலில் திருவண்ணாமலையைச் சேர்ந்த 14 வயது மாணவி வினிஷா உமாசங்கர் இடம்பிடித்திருக்கிறார்.
வினிஷா உமாசங்கர்
திருவண்ணாமலையைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி வினிஷா உமாசங்கர், சிறுவயது முதலே அறிவியல் கண்டுபிடிப்புகள் மீது ஆர்வம் கொண்டவர். கரியைப் பயன்படுத்தி செய்யப்படும் பாரம்பரிய இஸ்திரிப் பெட்டிக்கு மாற்றாக சூரிய ஒளியில் இயங்கும் இஸ்திரிப் பெட்டி மாடலை வடிவமைத்து அசத்தினார் இவர். இந்தக் கண்டுபிடிப்பைப் பாராட்டி ஸ்வீடன் நாட்டின் குழந்தைகளுக்கான அறக்கட்டளை இளம் வயது கண்டுபிடிப்பாளர் விருது கொடுத்து இவரை கடந்த ஆண்டு நவம்பரில் அங்கீகரித்தது. இந்த விருதுடன் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.8.63 லட்சம் பரிசும் இவருக்கு அளிக்கப்பட்டது.
இவர் வடிவமைத்த `Iron Max’-ல் வண்டியோடு இணைக்கப்பட்ட இஸ்திரிப் பெட்டி மூலம் 6 மணி நேரம் இஸ்திரி செய்ய முடியும். வண்டியின் மேற்கூரையில் பொருத்தப்பட்டிருக்கும் சோலார் தகடுகள் மூலம் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 5 மணி நேரமாகும். இந்த நடைமுறையால் உலக அளவில் தினசரி லட்சக்கணக்கான டன் கரித் துகள்கள் எரிக்கப்படுவதால் ஏற்படும் காற்று மாசு தவிர்க்கப்படும். இந்த கண்டுபிடிப்புக்குப் பல்வேறு பாராட்டுகளைப் பெற்றது. இந்த கண்டுபிடிப்புக்காக மத்திய அரசின் 18 வயதுக்குட்பட்டோருக்கான பிரதமரின் பாலபுரஸ்கார் விருது இவருக்கு வழங்கப்பட்டது.
Earth Shot Prize
உலக அளவில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் வகையிலான திட்டங்கள், கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்த இங்கிலாந்து இளவரசர் வில்லியம் Earth Shot Prize என்ற விருது வழங்கப்படும் என்று கடந்த ஆண்டு அறிவித்திருந்தார். அந்த விருதுக்கான `Clean Our Air’ பிரிவில் 15 பேர் கொண்ட இறுதிப் பட்டியலில் திருவண்ணாமலை மாணவி வினிஷாவின் கண்டுபிடிப்பும் இடம்பெற்றிருக்கிறது. இந்தியா சார்பில் வினிஷாவின் கண்டுபிடிப்போடு, டெல்லியைச் சேர்ந்த தொழில் முனைவோரான வித்யூத் மோகனின் விவசாயக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் Thakachar முறையும் இறுதிப் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது. இந்த விருதைப் பெறுபவர்கள் பற்றிய அறிவிப்பு லண்டன் அலெக்ஸாண்ட்ரா அரண்மனையில் வரும் அக்டோபர் 17-ல் நடைபெறும் விழாவில் அறிவிக்கப்பட இருக்கிறது.
வாழ்த்துகள் வினிஷா!
Also Read – ஜி.எஸ்.டி வரம்புக்குள் பெட்ரோல், டீசல் வராது… மத்திய அரசு சொல்லும் காரணம் என்ன?