கடந்த 2019-ல் மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த அரசினர் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குடியுரிமைத் திருத்த சட்டம் (CAA)
இந்திய அரசியலமைப்புச் சட்ட வரலாற்றில் முதல்முறையாக குடியுரிமை பெற மதத்தை ஒரு காரணியாக்கிய குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 10-ல் நிறைவேற்றப்பட்டது. சர்ச்சைக்குரிய இந்த சட்டத்தால் பலர் இந்திய குடியுரிமையை இழக்க நேரிடும் என்று எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன. இதை எதிர்த்து டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்தன. சென்னையிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம் குடியரசுத் தலைவர் ஒப்புதலோடு கடந்த 2020 ஜனவரி 10-ல் அரசிதழில் வெளியிடப்பட்டு அமலாக்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்
இந்த குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல், 2021 தேர்தல் வாக்குறுதியிலும், `தி.மு.க ஆட்சிக்கு வந்தால் குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தசூழலில், இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக் கோரும் அரசினர் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கொண்டுவந்து, முன்மொழிந்தார். பின்னர், அந்தத் தீர்மானம் தி.மு.க உறுப்பினர்கள் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது.
அ.தி.மு.க – பா.ஜ.க வெளிநடப்பு!
தங்களுக்கு பேச வாய்ப்பளிக்கவில்லை என்று கூறி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதுகுறித்து பேசிய சபாநாயகர் அப்பாவு, “அ.தி.மு.க உறுப்பினர்கள் திட்டமிட்டு வெளிநடப்பு செய்கிறீர்கள். வெளிநடப்புக்கு வேறு நல்ல காரணங்கள் சொல்லலாம். போய் வாருங்கள்’’ என்றார். அவை முன்னவர் துரைமுருகன் பேசுகையில், ‘குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான தீர்மானத்தை எதிர்க்க முடியாததால் அ.தி.மு.க-வினர் வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். தீர்மானத்தை ஆதரிக்கவும் அவர்களுக்கு தைரியமில்லை என்பதுதான் உண்மை’ என்று பேசினார்.
Also Read : `தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை; விநாயகர் சதுர்த்தி கட்டுப்பாடுகள் ஏன்?’ – முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!
அதேபோல், தீர்மானத்தை எதிர்த்து பா.ஜ.க உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க சட்டமன்றத் தலைவர் நயினார் நாகேந்திரன், `குடியுரிமை திருத்த சட்டம் 100% இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல’ என்றார்.
தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “குடியுரிமை சட்டத்தை ஆரம்ப நிலையிலேயே தி.மு.க எதிர்த்தது. அரசியல்ரீதியான பாகுபாட்டை மதரீதியாகப் பார்ப்பது தவறு. இது இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட துரோகம். மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் இந்த சட்ட்ம் தேவையற்றது. குடியுரிமை சட்டப்பதிவேடு சட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். அகதிகளாக வருவோரை மனிதனாக் கருதாத குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்’’ என்று பேசினார். பின்னர், இந்தத் தீர்மானம் பேரவையில் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.