2020-21ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தமிழகத்தின் முதல் காகிதமில்லா இ-பட்ஜெட் இதுதான்.
தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட் என்பதால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்திருந்தது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சமீபத்தில் வெளியிட்டிருந்த நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையில் தமிழகத்தின் கடன் அதிகரித்திருப்பதாக சுட்டிக்காட்டியிருந்தார். அந்த பிரச்னைகளுக்குத் தீர்வு காண தி.மு.க அரசிடம் இருக்கும் கேம் பிளான் என்ன என்பது பற்றிய கேள்வியும் எழுந்திருந்தது.
இந்தசூழலில், சென்னை கலைவாணர் அரங்கில் பட்ஜெட் கூட்டத்தொடர் கூடியது. முதல்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட்டாகத் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் கலந்துகொண்ட எம்.எல்.ஏ-க்களின் மேசைகளில் கணினி வைக்கப்பட்டிருந்தது.
`இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு’ என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையைத் தொடங்கினார். அ.தி.மு.க உறுப்பினர்கள் பேச வாய்ப்புக் கேட்டு அமளியில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கள், வேலுமணி ஆகியோரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு நடந்த நிலையில், அக்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். பட்ஜெட் குறித்த பொதுவிவாதம் திங்கள்கிழமை நடைபெறும் அப்போது பேச வாய்ப்பளிக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு கூறிய நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அ.தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழக பட்ஜெட் 2020-21 – முக்கிய அம்சங்கள்
- உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் பெறப்பட்ட 2.29 லட்சம் மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது.
- 2.05 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான தமிழக அரசின் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. பொது நில மேலாண்மைக்கு என்று தனியாக புதிய அமைப்பு உருவாக்கப்படும்.
- தமிழக அரசின் அனைத்து தணிக்கைத் துறைகளும் நிதித்துறையின் கீழ் கொண்டுவரப்படும்.
- தலைமைச் செயலகம் வரை அனைத்து துறை அலுவலகங்களும் தமிழை ஆட்சி மொழியாகப் பயன்படுத்துவது வலுப்படுத்தப்படும்.
- உலக அளவில் போற்றப்படும் தமிழ் படைப்புகள் வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்படும். கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்படும். கொற்கை, அழகன்குளம் பகுதிகளில் ஆழ்கடல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
- தமிழ் வளர்ச்சித் துறைக்கு ரூ.80 கோடி, தொல்லியல் துறைக்கு ரூ.29.43 கோடி ஒதுக்கீடு.
- சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்கு ரூ.4,807.56 கோடி ஒதுக்கீடு.
- எளிதில் வெள்ள பாதிப்புகள் ஏற்படும் 4,133 இடங்கள் கண்டறியப்பட்டு சரிசெய்யும் பணிகள் விரைவுபடுத்தப்படும்.
- பேரிடர் மேலாண்மைக்காக 15-வது நிதிக்குழு பரிந்துரைத்த ரூ.1,360 கோடி போதுமானதாக இல்லை.
- காவல்துறைக்கு ரூ.8930.29 கோடி ஒதுக்கீடு. காவல்துறையில் காலியாக உள்ள 14,317 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு ரூ.405.13 கோடி ஒதுக்கீடு.
- சாலை பாதுகாப்பு இயக்ககம் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.500 கோடி ஒதுக்கீடு.
- நீதித்துறைக்கு ரூ.1,713.30 கோடி ஒதுக்கீடு. இதில், நீதிமன்ற கட்டடங்கள் கட்ட ரூ.351.87 கோடி பயன்படுத்தப்படும்.
- ரூ.9,370.11 கோடி செலவில் கோவிட் நிவாரணத் தொகுப்பு தமிழக மக்களுக்கு வழங்கப்பட்டது.
- உணவு மானியத்துக்கு ரூ.8,437.57 கோடி ஒதுக்கீடு.
- அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் 1,000 தடுப்பணைகள், கதவணைகள் கட்டப்படும். ஆனைமலையாறு, நீராறு – நல்லாறு, பாண்டியாறு – புனம்புழா திட்டத்துக்காக கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
- பிரதமரின் வேளாண் நீர்பாசன திட்டத்தின் கீழ் ரூ.111.24 கோடியைப் பயன்படுத்தி 200 குளங்கள் தரம் உயர்த்தப்படும்.
- அணை சீரமைத்தல் மற்றும் புதுப்பித்தல் திட்டம் ரூ.610.26 கோடி செலவில் தொடங்கப்படும். உலக வங்கி உதவி பெறப்படும்.
- மீனவருக்கான சேமிப்புடன் கூடிய நிவாரண திட்டத்துக்கு ரூ.303 கோடி ஒதுக்கீடு. ரூ.6.25 கோடி செலவில் 6 இடங்களில் மீன்பிடித் துறைமுகங்கள் அமைப்பது தொடர்பாக ஆய்வு நடத்தப்படும்.
- காசிமேடு மீன்பிடித் துறைமுகம் ரூ.150 கோடியில் மேம்படுத்தப்படும். மீன்பிடித் துறைமுகங்கள், மீன் இறங்குதளங்களை அமைக்க ரூ.433.97 கோடி ஒதுக்கீடு.
- இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம் நிறுவப்படும்.
- குறைந்தபட்சம் ஒரு லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் காற்றின் தரம் அறியும் வசதி ஏற்படுத்தப்படும்.
- திட்ட மதிப்பீடு, ஒப்பந்தப்புள்ளி உள்ளிட்ட பணிகள் ஓராண்டுக்குள் முற்றிலும் மின்னணுமயமாக்கப்படும்.
- 79,395 குக்கிராமங்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒரு நபருக்கு 55 லிட்டர் தரமான குடிநீர் வழங்க நடவடிக்கை. கிராமங்களில் இருக்கும் 1.27 கோடி குடும்பங்களுக்கு வீட்டு குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை.
- 2020-21 ஆண்டில் ரூ.8,017 கோடி செலவில் 2.89 லட்சம் வீடுகள் கட்டப்படும்.
- ரூ.1,200 கோடியில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் தொடங்கப்படும். ரூ.100 கோடி ஒதுக்கீட்டில் கலைஞரின் நமக்கு நாமே திட்டம் தொடங்கப்படும்.
- ஊரக வாழ்வாதாரத் திட்டம் புதுப்பிக்கப்பட்டு, 36,218 மகளிர் குழுக்கள் பயன்பெறும் வகையில் ரூ.809.79 கோடி ஒதுக்கீடு. சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.20,000 கோடி கடன் உறுதி செய்யப்படும்.
- ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 27 நகரங்களில் பாதாள சாக்கடைத் திட்டம்.
- மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும்.
- சென்னையில் 3 இடங்களில் ரூ.335 கோடியில் மேம்பாலம். சென்னையில் உள்ள நீர்வழிகளில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கும் திட்டத்துக்கு ரூ.2,371 கோடி ஒதுக்கீடு.
- சென்னையுடன் இணைக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் பாதாள சாக்கடைத் திட்டத்துக்கு ரூ.2,056 கோடி ஒதுக்கீடு.
- சுவரொட்டி இல்லாத நகரமாக சென்னை மாற்றப்படும். 1,000 கோடி ரூபாயில் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம்.
- முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த ரூ.1,046 கோடி.
- விழுப்புரம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களில் டைடல் பார்க்.
- உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.20.76 கோடியில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்படும்.
- மதுரை, கோவை – திருப்பூர், ஒசூரில் புதிய பெருநகர வளர்ச்சிக் குழுமங்கள் ஏற்படுத்தப்படும்.
- 10 வருடங்களுக்குள் தமிழகம் முற்றிலும் குடிசைகள் அற்ற மாநிலமாக விளங்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. குடிசை மாற்று வாரியத்துக்கு ரூ.3,954.44 கோடி ஒதுக்கீடு.
- சாலை கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.5,421.41 கோடி ஒதுக்கீடு.
- நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ.17,899.17 கோடி ஒதுக்கீடு. சென்னை – கன்னியாகுமரி ஜி.எஸ்.டி சாலையை 6 முதல் 8 வழிச்சாலையாக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.
- ரூ.623.59 கோடியில் ஜெர்மன் வளர்ச்சி வங்கி உதவியுடன் 1,000 புதிய பேருந்துகள் வாங்க நிதி ஒதுக்கீடு.
- மெட்ரோ ரயில் திட்டத்தில் கோடம்பாக்கம் – பூந்தமல்லி புறத்தட வழி சேவைகள் 2025 ஜூன் மாதம் தொடங்கும்.
- மெட்ரோ ரயிலின் மொத்த இரண்டாம் கட்டப் பணிகளும் 2026-ம் ஆண்டு டிசம்பருக்குள் முடியும்.
- மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கான விரிவான சாத்தியக் கூறுகள் அறிக்கை தயார் செய்யப்படும். கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தைத் தொடங்க மத்திய அரசுடன் ஆலோசிக்கப்படும்.
- 10 வருடங்களில் சொந்த மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் 17,980 மெகாவாட் மின் உற்பத்தி கூடுதலாக்கப்படும்.
- பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.32,599.54 கோடி ஒதுக்கீடு.
- தமிழக சுகாதாரத் துறைக்கு மொத்தம் ரூ.18,933 கோடி ஒதுக்கீடு.
- ரூ.100 கோடியில் 100 கோயில்களில் திருத்தேர், திருக்குளம், நந்தனம் சீரமைக்கப்படும்.
- பெட்ரோல் மீதான வரியிக் ரூ.3 குறைக்கப்படும். இதனால், அரசுக்கு ரூ.1,160 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.
Also Read – வெள்ளை அறிக்கை என்றால் என்ன… தமிழக அரசின் நிதிநிலை வெள்ளை அறிக்கை.. 14 அம்சங்கள்!