தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்திருக்கும் 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை ஜூன் 21-ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.
கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்திருந்த நிலையில், தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில் புதிதாகப் பொறுப்பேற்ற அரசு, கடந்த மே 10-ம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கை அமல்படுத்தியது. தொற்றுக் குறைவதற்கேற்ப அதில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தற்போதைய நிலையில் ஊரடங்கு வரும் 14-ம் தேதி முடிவடைகிறது. இந்தசூழலில், தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்திருக்கும் 27 மாவட்டங்களில் சில கூடுதல் தளர்வுகளோடு ஊரடங்கு உத்தரவு வரும் 21-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
கொரோனா தொற்றுப் பரவல் அதிகம் இருக்கும் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களுக்குத் தளர்வுகள் அளிக்கப்படவில்லை.
27 மாவட்டங்களுக்கான தளர்வுகள் என்னென்ன?
- காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்க அனுமதி.
- சலூன்கள், பியூட்டி பார்லர்கள் ஆகியவை 50% வாடிக்கையாளர்களுடன் ஏசி இன்றி காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.
- அரசு பூங்காக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்களில் நடைபயிற்சிக்கு காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை அனுமதி.
- மிக்சி, கிரைண்டர், டிவி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் பழுதுநீக்கும் கடைகள், சர்வீஸ் சென்டர்கள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இயங்கலாம்.
- செல்போன் மற்றும் அதனை சார்ந்த பொருட்கள் விற்பனைக் கடைகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இயங்கலாம்.
- பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட நிர்வாகப் பணிகளுக்கு அனுமதி.
- தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் மோட்டார் சைக்கிளில் செல்ல விரும்பினால் இ-பாஸ் பெறுவது கட்டாயம்.
- ஐ.டி உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் 20% பணியாளர்கள் அல்லது 10 நபர்கள் மட்டுமே பணிபுரிய அனுமதியளிக்கப்பட்டுள்ளது.