Chennai

கடைகளுக்கு 12 மணிவரை மட்டுமே அனுமதி! மே 6 முதல் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் என்ன?

தமிழகத்தின் தினசரி கொரோனா பாதிப்பு 20,000-த்தைக் கடந்திருக்கும் நிலையில் மே ஆறாம் தேதி முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.

கொரோனா இரண்டாவது அலையால் மோசமாகப் பாதிக்கப்பட்ட 10 மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டிருக்கிறது. முதல் அலையின்போது தினசரி அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை 7,000-த்தைத் தாண்டாத நிலையில், தற்போதைய பாதிப்பு 20,000-த்தையும் கடந்திருக்கிறது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுத்து வருகிறது. இதுதொடர்பாக முதலமைச்சராகப் பதவியேற்க இருக்கும் மு.க.ஸ்டாலினுடம் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய் முதன்மைச் செயலாளர் பணீந்திர ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

இந்தநிலையில், தமிழகத்தில் மே 6-ம் தேதி முதல் மே 20-ம் தேதி அதிகாலை 4 மணி வரை கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

Lock down
Lock down

கூடுதல் கட்டுப்பாடுகள் என்னென்ன?

  • மெட்ரோ ரயில், அரசு, தனியார் பேருந்து, வாடகை டாக்ஸிகளில் 50% பயணிகளுக்கு மட்டுமே அனுமதி.
  • காய்கறி, மளிகை தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்கலாம்.
  • சனி, ஞாயிறுகளில் இறைச்சி, மீன் கடைகள் இயங்கத் தடை. மற்ற நாட்களில் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இயங்கலாம்.
  • அனைத்து அரசு, தனியார் அலுவலகங்கள் அதிகபட்சமாக 50% ஊழியர்களுடன் இயங்கலாம்.
  • அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி
  • உள் அரங்கங்கள், திறந்தவெளியில் சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாசார நிகழ்வுகள், இதர நிகழ்வுகளுக்குத் தடை.
  • இறப்பு சார்ந்த இறுதி ஊர்வலங்கள் மற்றும் திருமணம் போன்ற நிகழ்வுகளில் 20 பேருக்கு மேல் கலந்துகொள்ள அனுமதியில்லை.
  • மாநகராட்சிகளைத் தொடர்ந்து ஊரகப் பகுதிகளிலும் அழகு நிலையங்கள் இயங்கத் தடை.
  • ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு தொடரும்
  • அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவப் பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத் துறை சார்ந்த சேவைகள், அனைத்து சரக்கு வாகனங்கள், விவசாயிகளின் விளைபொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள், எரிபொருளை எடுத்துச் செல்லும் வாகனங்கள் ஆகியவற்றுக்குத் தடை இல்லை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top