தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வரும் 23-ம் தேதி முதல் ஒருவாரத்துக்குத் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் பல மாநிலங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. முதல் அலையில் தமிழகத்தின் தினசரி பாதிப்பு 7,000-த்தைத் தாண்டாத நிலையில் தற்போது 35,000 வரை பதிவாகிறது. தேர்தலுக்குப் பிறகு தி.மு.க தலைமையில் புதிய அரசு அமைந்தவுடன் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தளர்வுகளுடன் மே 10 முதல் 24-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. ஊரடங்கை மதிக்காமல் பொதுமக்கள் வெளியே சுற்றித்திரிவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
ஊரடங்கு விதிக்கப்பட்டு 12 நாட்களைக் கடந்தும் கொரோனா பாதிப்பு குறையாத நிலையில், அனைத்து கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கடுமையான ஊரடங்கை அமல்படுத்த பல்வேறு கட்சி உறுப்பினர்களும் வலியுறுத்தினர். இந்தநிலையில், தமிழகத்தில் மே 24-ம் தேதி தொடங்கி ஒருவாரத்துக்குத் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட இருப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
இந்த காலகட்டத்தில் எதெற்கெல்லாம் அனுமதி?
- மருந்தகங்கள், நாட்டு மருந்துக் கடைகள், கால்நடை மருந்தகங்கள்.
- பால் விநியோகம், குடிநீர் மற்றும் தினசரி பத்திரிகை விநியோகம்
- பொதுமக்களுக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள் தோட்டக்கலைத் துறை மூலமாக சென்னை நகரத்திலும் அனைத்து மாவட்டங்களிலும் சம்பந்தப்பட்ட ஊராட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலமாக வழங்கப்படும்.
- வெளியூர் செல்லும் பயணிகள் நலன் கருதி இன்று (22-05-2021) மற்றும் நாளை (23-05-2021) அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வழக்கம்போல் இயங்க அனுமதி.
- 22, 23-05-2021 இரண்டு நாட்களும் கடைகள் இரவு 9 மணி வரை திறக்க அனுமதி.
- தனியார் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரிவோர் வீட்டிலிருந்தே பணிபுரிய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
- இ-கமர்ஸ் சேவைகள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதி.
- உணவகங்களில் காலை 6-10, நண்பகல் 12- மதியம் 3, மாலை 6 – இரவு 9 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி.
- பெட்ரோல், டீசல் பங்குகள், ஏடிஎம்கள் வழக்கம்போல் இயங்க அனுமதி.
- உரிய மருத்துவ காரணங்கள் மற்றும் இறப்பு ஆகிய காரணங்களுக்காக மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவுடன் அனுமதி.
- மருத்துவ காரணங்களுக்காக மாவட்டத்துக்குள் பயணிக்க இ-பதிவு தேவையில்லை.
- செய்தி, ஊடக நிறுவனங்கள் வழக்கம்போல் இயங்கலாம்.
Also Read – Sputnik V தடுப்பூசி பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 6 விஷயங்கள்!