விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகள் வைக்க அனுமதி இல்லை என்று தமிழக அரசு கட்டுப்பாடு விதித்திருக்கிறது. விநாயகர் சதுர்த்திக்கு தமிழக அரசு விதித்திருக்கும் கட்டுப்பாடுகள் என்ன.. எதெற்கெல்லாம் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது?
விநாயகர் சதுர்த்தி
கொரோனா பரவல் காரணமாகக் கடந்த ஆண்டு விநாயகர் சிலையைப் பொது இடங்களில் வைப்பதற்கும், ஊர்வலம் செல்வதற்கும் தமிழக அரசு தடை விதித்திருந்தது. இந்தாண்டு கொரோனா பரவல் சற்று குறைந்திருக்கும் நிலையில், விநாயகர் சிலைகள் வைக்கவும் ஊர்வலங்களுக்கும் அனுமதி கிடைக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், கொரோனா மூன்றாவது அலை பரவ வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரித்திருக்கும் நிலையில், இந்தாண்டும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்குக் கட்டுபாடுகளை விதித்திருக்கிறது தமிழக அரசு.
கட்டுப்பாடுகள் என்னென்ன?
பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி இல்லை. விநாயகர் சதுர்த்தியை ஒட்டி உறியடி போன்ற நிகழ்ச்சிகளை நடத்தவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதி இல்லை. சென்னை மெரினா கடற்கரையில் சாந்தோம் முதல் நேப்பியர் பாலம் வரையில் சிலைகளைக் கரைக்கத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
தனி நபர்கள் தங்கள் இல்லங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுமாறு அரசு வேண்டுகோள் விடுத்திருக்கிறது. தனி நபர்களாகச் சென்று அருகே உள்ள நீர் நிலைகளில் சிலைகளைக் கரைக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், கோயில்களின் சுற்றுப்புறங்களில் வைக்கப்படும் சிலைகளை அகற்ற அறநிலையத் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறது. இந்த விழாக்களுக்காகப் பொருட்களை வாங்க அங்காடிகள், வணிக வீதிகளுக்குச் செல்லும்போது உரிய சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து மக்கள் பொருட்களை வாங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியைப் போலவே செப்டம்பர் 8-ம் தேதி கொண்டாடப்படும் மரியன்னை பிறந்தநாளை ஒட்டி வேளாங்கண்ணி, சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
Also Read – நாசா பாராட்டிய அரியலூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்… பின்னணி என்ன?