தமிழகம் முழுவதும் விடிய விடிய ரவுடிகள் வீட்டில் சோதனை நடத்திய போலீஸார், 450 ரவுடிகளைக் கைது செய்திருக்கிறார்கள். 420 பேர் காவல்நிலையப் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். பின்னணி என்ன?
டிஜிபி சைலேந்திர பாபு
குற்றத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொலை உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரைக் கண்காணித்து, விசாரணையைத் தீவிரப்படுத்த டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார். அதன்படி, தமிழகம் முழுவதும் நேற்று இரவு முதல் போலீஸார் நடத்திய ஸ்ட்ரோமிங் ஆபரேஷனில் 450 ரவுடிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். குற்றப்பின்னணி கொண்ட 870 பேரின் வீடுகளில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். அவர்களது வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் 265 அரிவாள்கள், 3 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழகம் முழுவதும் இரவு 10 மணிக்குத் தொடங்கிய சோதனை காலை 6 மணி வரை நீடித்திருக்கிறது. ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களில் போலீஸார் சோதனையை நடத்தியிருக்கிறார்கள்.
ரவுடிகள் கைது
சென்னையைப் பொறுத்தவரை 200 இடங்களில் புளியந்தோப்பு துணை ஆணையர் ராஜேஷ் கண்ணா தலைமையில் போலீஸார் ரவுடிகள் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். இதில், 70 ரவுடிகளை போலீஸார் பிடித்திருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் பிடிவாரண்ட் உள்ள தேடப்படும் 16 ரவுடிகள், 8 கொடுங்குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்கள் சம்மந்தப்பட்ட காவல்நிலையங்களுக்கு அழைத்து வரப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. திண்டுக்கல்லில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 44 ரவுடிகள் கைது. பெண் உள்பட 2 பேர் ஒரே நாளில் தலைதுண்டித்துக் கொல்லப்பட்டிருந்த நிலையில், போலீஸார் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். அதேபோல், கன்னியாகுமரி மாவட்டத்தில் 39 ரவுடிகள், பெரம்பலூரில் 6 பேர், அரியலூரில் 39 ரவுடிகளையும் கைது செய்திருக்கிறது காவல்துறை. குற்றத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடரும் என்கிறார்கள் போலீஸ் தரப்பில்.
Also Read : IPL2021: பஞ்சாப் வீரர் தீபக் ஹூடாவின் ஹெல்மெட் போட்டோ சர்ச்சை; பிசிசிஐ விசாரணை – பின்னணி என்ன?