டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 4*400 மீ ஆண்கள் தொடர் ஓட்டத்தில் விளையாட தமிழ்நாடு போலீஸில் பணியாற்றும் நாகநாதன் பாண்டி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ராமநாதபுரம் கமுதி அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் இருந்து டோக்கியோ கனவு அவருக்கு எப்படி சாத்தியமானது?
ஜப்பானின் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் வரும் 23-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 5-ம் தேதி வரை நடைபெற இருக்கின்றன. கொரோனாவால் தள்ளிவைக்கப்பட்ட போட்டிகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளோடு இந்த ஆண்டு நடைபெறுகின்றன. இதில் பங்கேற்க தமிழகத்தைச் சேர்ந்த 11 வீரர்கள் தேர்வாகியிருக்கிறார். தமிழக வீரர் ராஜீவ் ரஞ்சனோடு 4*400 மீ தொடர் ஓட்டத்தில் பங்கேற்கத் தேர்வாகியிருக்கும் நாகநாதன் பாண்டி, தமிழ்நாடு ஆயுதப்படைக் காவலராவார்.
நாகநாதன் பாண்டி
ஆயுதப்படை காவலரான நாகநாதன் பாண்டி ராமநாதபுரம் மாவட்ட கமுதியை அடுத்த சிங்கம்புலியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். தாய் – தந்தை இருவரும் விவசாயம் செய்துவரும் சூழலில் சிறுவயது முதலே தடகளத்தில் பெரும் ஆர்வத்தோடு வளர்ந்திருக்கிறார். குடும்ப சூழல் காரணமான தடகள வீரர்கள் அணியும் ஸ்பைக் ஷூ வாங்கவே வழியில்லாத வகையில் வறுமை இவரை வாட்டியிருக்கிறது. பள்ளி, கல்லூரிகளில் தடகள போட்டிகளில் ஜொலித்திருக்கிறார். திறமைக்கு வறுமை தடை போட முடியாது என்பதை உணர்ந்தே இருந்த நாகநாதன், கல்லூரி காலங்களில் சீனியர் அண்ணன் ஒருவர் உதவியால் ஸ்பைக் ஷூ ஒன்றை முதன்முதலாக வாங்கியிருக்கிறார்.
பொதுவாக தடகள வீரர்களிடம் ஸ்பைக் ஷூக்கள் பல இருக்கும். சூழ்நிலை, போட்டியின் தன்மையைப் பொறுத்து அவர்கள் ஷூக்களைப் பயன்படுத்துவர். ஆனால், தன்னிடமிருந்த ஒரே ஒரு ஸ்பைக் ஷூவை வைத்தே அனைத்துவிதமான போட்டிகளிலும் விளையாடி வந்திருக்கிறார். கல்லூரி அளவிலான தடகளப் போட்டிகளில் ஜொலித்த நாகநாதனுக்கு ஃபார்ம் III சான்றிதழ் கிடைத்திருக்கிறது. அதன்மூலம், தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலைக் காவலராகக் கடந்த 2018-ம் ஆண்டு சேர்ந்திருக்கிறார். சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படையில் காவலராக இருந்த அவர், தொடர்ந்து தடகளப் போட்டிகளிலும் ஆர்வத்தோடு பங்கேற்று வந்திருக்கிறார்.
தடகளப் போட்டிகளில் இவரது ஆர்வத்தையும், திறமையையும் பார்த்த போலீஸ் உயரதிகாரிகள் இவருக்கு ஆதரவும் ஊக்கமும் கொடுத்து வந்திருக்கிறார்கள். கடந்த மார்ச்சில் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடந்த தேசிய தடகளப் போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்ற நாகநாதனுக்கு, ஸ்போர்ட்ஸ் கிட் வழங்கி ஊக்குவித்தார் அப்போதைய சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால். அந்தப் போட்டியில் 400 மீ தொடர் ஓட்டத்தில் இரண்டாவது இடம் பிடித்தார். இதன்மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கில் விளையாடத் தகுதிபெற்றார்.
தடகள வீரர்களின் உச்சபட்ச கனவான ஒலிம்பிக்குக்குத் தகுதிபெற்றிருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்திருக்கும் நாகநாதன் பாண்டி, அதில் பதக்கம் வென்று தமிழ்நாடு போலீஸுக்கும் தனது கிராமத்துக்கும் பெருமை சேர்ப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். நாகநாதனுக்குக் காவல்துறையைச் சேர்ந்த பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
ஆல் தி பெஸ்ட் நண்பா..!
Also Read – ஒரு லிட்டர் பெட்ரோல், டீசலுக்கு எவ்வளவு வரி… அரசின் மொத்த வருமானம் எவ்வளவு?