மின் கட்டணம் கணக்கிடும் முறையில் நடக்கும் முறைகேட்டால் ஜூலை மாதம் கரண்ட் பில் பல மடங்கு அதிகரித்திருப்பதாக நுகர்வோர் புகார் கூறுகிறார்கள். கொரோனா சூழலில் மின் கட்டண கணக்கீடு குறித்து மின்வாரியத்தின் அறிவுறுத்தல் என்ன… மாதாந்திர கணக்கீட்டில் குறையுமா?
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்த சூழலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு மே 7-ம் தேதி பதவியேற்றது. இதையடுத்து மே 10-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலானது. இதனால், மின்வாரிய ஊழியர்கள் நேரடியாக வீடுகளுக்குச் சென்று மின்சார கட்டணம் கணக்கீடு செய்ய முடியாமல் போனது. இதையடுத்து, மின் நுகர்வோர் 3 முறைகளில் மின் கட்டணம் செலுத்தலாம் என மின்சார வாரியம் அறிவித்தது.
- 2021 மார்ச் மாத மின் கட்டணத்தையே செலுத்தலாம்
- 2019-ம் ஆண்டு மே மாதம் செலுத்திய தொகையை அப்படியே செலுத்தலாம்
- மின் பயன்பாட்டு அளவே நுகர்வோரே கணக்கீடு செய்து வாட்ஸ் அப் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ பணமாக செலுத்தலாம்.
இந்த மூன்று முறைகளில் நுகர்வோர் கட்டணம் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் கொரோனா பரவல் வேகம் குறைந்திருப்பதால், மின்வாரிய ஊழியர்கள் நேரடியாக வீடுகளுக்குச் சென்று மின் பயன்பாட்டை அளவீடு செய்யும் பணிகளைத் தொடங்கியிருக்கிறார்கள். மார்ச் மாதத்துக்குப் பிறகு நான்கு மாதங்கள் கடந்த நிலையில், மின் பயன்பாடு அளவீடு செய்யப்படுவதால் அதிகக் கட்டணம் வருவதாகப் புகார் கூறுகிறார்கள். நான்கு மாத மின் பயன்பாட்டைக் கணக்கிட்டு மொத்த மின் கட்டணத்தில் பாதியைக் கட்டச் சொல்வதாகவும் நுகர்வோர்கள் தரப்பில் புகார் வைக்கப்படுகிறது. அரசு உத்தரவை மீறி சட்டவிரோதமாக மின்வாரிய ஊழியர்கள் சிலர் இப்படி கணக்கிட்டு பணம் வசூலிப்பதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
தமிழகத்தில் மின் கட்டணம் எவ்வளவு?
தமிழகத்தில் வணிகரீதியில் அல்லாமல் வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் முதல் 100 யூனிட்கள் இலவசமாகவே வழங்கப்படுகிறது. அதன்பிறகு, 101 – 200 யூனிட்களுக்கு தலா 2 ரூபாயும் 201 – 500 யூனிட்களுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.3 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதை டெலஸ்கோபிக் டாஃரிப் என்றழைக்கிறார்கள்.
என்ன பிரச்னை?
நான்கு மாதத்துக்கு மொத்தமாக மின் பயன்பாடு செய்யப்படுவாதால்தான் அதிக கட்டணம் வருகிறது என்று சொல்கிறார்கள். உதாரணமாக நான்கு மாத கால மொத்தப் பயன்பாடு 1,100 யூனிட் என்று வைத்துக் கொண்டால், அதை 550 + 550 என இரண்டு அளவுகளாகப் பிரித்து முதல் 100 யூனிட்கள் இலவசம் என்பதையும் கழித்து மீதமிருக்கும் பயன்பாட்டுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால், அதிக கட்டணம் வருவதாகச் சொல்கிறார்கள் மக்கள்.
500 யூனிட்டுகளுக்குக் கீழ் பயன்பாடு இருந்தால் அதற்கான கணக்கீட்டின்படி கட்டணம் குறைவாகவே வரும். உதாரணமாக 480 யூனிட் பயன்பாடு என்றால், முதல் 100 யூனிட் இலவசம், அடுத்த 100 யூனிட்க்கு ரூ. 200, மீதமிருக்கும் 280 யூனிட்க்கு ரூ.840 வரும். இத்தோடு, நிலையான கட்டணம் ரூ.30, வரி ரூ.48-ஐயும் சேர்த்தால் ரூ.1,118 மின் கட்டணம் செலுத்த வேண்டி வரும்.
500 யூனிட்டுகளுக்கு மேலான பயன்பாடு என்றால், அதற்கான கணக்கீடு முறையே வேறு. முதல் 100 யூனிட்கள் இலவசம், 101-200 யூனிட்களுக்கு ரூ.3.5, 201-500 ஒரு யூனிட்டுக்கு 4.60 ரூபாயும் வசூலிக்கப்படும். 500 யூனிட்டுக்கு மேல் ஒரு யூனிட்க்கு ரூ.6.6 என கணக்கிடப்படும். உதாரணமாக, 1672 யூனிட் பயன்பாடு என்றால், இந்த கணக்கீட்டின்படி ரூ.9,682 மின் கட்டணமாக செலுத்த வேண்டி வரும். மொத்தமாகக் கணக்கிடும்போது 500 யூனிட்களுக்கு மேல் வரும்போது கட்டணமும் அதிகமாக வரும் என்பதுதான் பொதுமக்கள் எதிர்க்கக் காரணம்.
தி.மு.க தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தால் மாதாந்திர மின் கட்டண அளவீடு முறை நடைமுறைப்படுத்தப்படும் என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read – டூ வீலர்களில் சைடு மிரர்களை நீக்கினால் `நோ வாரண்டி’ – நீதிமன்ற எச்சரிக்கையின் பின்னணி!