டோக்கியோ ஒலிம்பிக்கின் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 87.58 மீ தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். அபினவ் பிந்த்ராவுக்குப் பிறகு ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற இரண்டாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா இதுவரை 2 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்கள் வென்றிருந்தது. இந்தசூழலில், ஈட்டி எறிதல் பிரிவின் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில், இந்தியா சார்பில் கலந்துகொண்ட நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா, முதல் வாய்ப்பிலேயே 87.03 மீ தூரம் எறிந்து முதலிடம் பிடித்தார். அடுத்த வாய்ப்பில், 87.58 மீ தூரம் எறிந்து பதக்க வாய்ப்பைப் பிரகாசப்படுத்தினார். மூன்றாவது முயற்சியில் 76.79 மீ எறிந்தார்.
அவருக்குக் கடும் போட்டியளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜெர்மனியின் ஜோஹன்னஸ் வெட்டரால் நான்காவது இடத்தையே பிடிக்க முடிந்தது. போட்டிக்கு முந்தைய பேட்டி ஒன்றில், `90மீ தூரம் எறிவது பைக் ஓட்டுவது போல எனக்கு மிகவும் எளிதானது’ என்று வெட்டர் மற்ற வீரர்களை சீண்டியிருந்தார்.
12 வீரர்கள் கலந்துகொண்ட இறுதிப் போட்டியில் நீரஜ் சோப்ரா முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். இதன்மூலம், அபினவ் பிந்த்ராவுக்குப் பிறகு தனிநபர் பிரிவில் ஒலிம்பிக் தங்கம் வெல்லும் இரண்டாவது நபர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றார். இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. சுதந்திர இந்தியாவின் டிராக் அண்ட் ஃபீல்ட் பிரிவில் தங்கம் வென்ற முதல் வீரர் நீரஜ் சோப்ராதான். இதற்கு முன்பு 1900-ல் பிரிட்டிஷ் இந்தியாவின் கீழ் நார்மென் தங்கம் வென்றிருந்தார். டோக்கியோ ஒலிம்பிக்கில் இதுவரை ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கங்களை வென்று, ஒலிம்பிக்கில் பெஸ்ட் ரெக்கார்டைப் பதிவு செய்திருக்கிறது இந்தியா.