சில வருடங்களுக்கு முன்பு… இப்போ தலைமறைவா ஓடிக்கிட்டு இருக்குற ஆளு. அப்போலாம் வேற லெவல் கெத்தா தமிழகத்துல உலா வந்துட்டு இருந்தாரு. அ.தி.மு.க ஆட்சியில் எதிர்க்கட்சியில் யாராவது ஆளும் கட்சியை விமர்சித்து பேசினால், அ.தி.மு.க-வில் இரண்டு பேரிடம் இருந்து தவறாமல் கருத்துகள் வரும். ஒன்று, ஜெயக்குமார். மற்றொன்று ராஜேந்திர பாலாஜி. தன்னுடைய கருத்துக்களால் எக்கச்சக்க சர்ச்சைகளில் சிக்கிய ராஜேந்திர பாலாஜியின் ஃபேமஸான சில சர்ச்சைகளை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
இந்தி மற்றும் பொருளாதார சர்ச்சை!
ரயில்வேயில் தமிழர்களுக்கு வேலை கொடுக்கப்படுவதில்லை என சர்ச்சை எழுந்தபோது ராஜேந்திர பாலாஜி, தமிழர்களை இந்தி படிக்க வேண்டாம் என தி.மு.க தடுத்ததுதான் அதற்கு காரணம் என்றார். அதேபோல பொருளாதாரம் தொடர்பான சர்ச்சைகள் எழுந்தபோது, “மக்களின் தேவைகள் தற்போது அதிகமாகிவிட்டதால், பொருளாதாரப் பிரச்னைகள் வரத்தான் செய்யும்” என்று கூறி வாங்கிக்கட்டிக்கொண்டார்.
மோடிதான் எங்கள் டாடி!
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அ.தி.மு.க-வின் தலைமையைக் கைப்பற்ற சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என்று பலரும் போட்டி போட்டுக்கொண்டிருந்த சமயத்தில் கருத்து தெரிவித்த அப்போதைய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “அம்மா என்ற ஆளுமை இருந்தபோது அவர் எடுத்த முடிவு வேறு. அம்மா இல்லாத இந்த நேரத்தில் `மோடிதான் எங்கள் டாடி’ என்று பேசி கிச்சுகிச்சு மூட்டினார். ‘மோடி இந்தியாவின் கதாநாயகன்’, ‘மோடி இந்தியாவைப் பாதுகாக்கும் ஸ்டண்ட் மாஸ்டர்’ என்றும் பிரதமர் மோடியைப் புகழ்ந்து தள்ளி மீம் கிரியேட்டர்களின் மெயின் கன்டன்ட் ஆனார்.
‘நீட்’ தற்கொலைக்கு காரணம் தி.மு.க!
இந்தியாவில் நீட் தேர்வு நடைமுறைக்கு வந்தபோது, அனிதா, பிரதீபா உட்பட பல மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான குரல் ஓங்கி ஒலித்தது. அப்போது, அ.தி.மு.க-வை விமர்சித்த தி.மு.க-வுக்கு பதிலளித்த ராஜேந்திர பாலாஜி, “தி.மு.க-வினர் ஊக்குவிப்பதால்தான் மாணவர்கள் தற்கொலை செய்கின்றனர்” எனக்கூறி பதற்றத்தைக் கூட்டினார்.
ஸ்டாலினுக்கு ஜாதகம் சரியில்லை!
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க ஆட்சி அமைத்தபோது அதற்கு எதிராக தி.மு.க கடுமையான விமர்சனங்களை அள்ளி தெளித்தது. விரைவில் எடப்பாடியின் ஆட்சி கவிழும்; தி.மு.க ஆட்சியைப் பிடிக்கும் என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த ராஜேந்திர பாலாஜி, “ஆந்திரா மற்றும் அந்தமானில் வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெற்றால்கூட மு.க.ஸ்டாலினால் முதல்வராக முடியாது” என்றுகூறி ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்தார். ராஜேந்திர பாலாஜி ஒருமுறை மேடையில் பேசும்போது, “தி.மு.க தலைவரானால் நாட்டைப் பிடிச்சிர முடியுமா? எடப்பாடி அண்ணன் ஜாதகம் வலுவாக இருக்கிறது. மு.க.ஸ்டாலினால் ஒருபோதும் முதலமைச்சராக முடியாது. ஏனெனில், அவருக்கு ஜாதகப் பொருத்தம் சரியில்லை” என்றும் பேசி சர்ச்சையைக் கிளப்பினார்.
Also Read: Periyar: பெரியார் காங்கிரஸில் இருந்து வெளியேறியது ஏன்… 1925 காஞ்சிபுரம் மாநாட்டில் என்ன நடந்தது?
மதுவிலக்கு சர்ச்சை!
அ.தி.மு.க ஆட்சியில், மதுவிலக்கை ஏன் நடைமுறைப்படுத்தவில்லை? என்றும் அதை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அன்றைய எதிர்கட்சித் தலைவர்கள் ஒருமித்த குரலில் அரசுக்கு கண்டனம் தெரிவித்த, கொந்தளிப்பான காலகட்டம் அது. அந்நேரத்தில் ராஜேந்திர பாலாஜி, “திடீர்னு குடிக்கிறவங்கள கூப்பிட்டு குடிக்காதீங்கனு சொன்னா… கை, கால் எல்லாம் நடுங்கும்; அதனால, கொஞ்சம் கொஞ்சமாதான் நிப்பாட்டணும்” என்று எதிர்கட்சிகளுக்கு பதிலளித்தார்.
கமலின் நாக்கை அறுக்க வேண்டும்!
“சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து. அந்த இந்து நாதுராம் கோட்சே” என பிரசாரம் ஒன்றில் ம.நீ.ம தலைவர் கமல் பேசினார். அது சமூக வலைதளங்களில் சர்ச்சையானது. கமலின் அந்த பேச்சுக்கு ராஜேந்திர பாலாஜி, “கமலின் கொழுப்பேறிய நாக்கை அறுக்க வேண்டும். அவருக்கு நாக்கில் சனி” என்று துடுக்குத்தனமாகப் பதில் கொடுத்தார். அதற்கு அரசியல் வட்டாரம், சமூக வலைதளங்கள் மற்றும் பொது வெளியில் கடும் கண்டனங்கள் எழுந்தன. அப்போது ராஜேந்திர பாலாஜியைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என ம.நீ.ம சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கும் பதிலளித்த ராஜேந்திர பாலாஜி, “கமல் என்ன இந்தியாவின் ஜனாதிபதியா? தமிழகத்தின் கவர்னரா? இல்லை முதலமைச்சரா?” என்று நக்கலாக கேள்வி எழுப்பி பதில் கொடுத்தார். அதையடுத்து, “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து என நான் சொன்னது சரித்திர உண்மை” என்று கமல் தனது கருத்தை அழுத்திக் கூறினார். அதற்கு சற்றும் சளைக்காத ராஜேந்திர பாலாஜி, “கமல் சொல்வது சரித்திர உண்மை அல்ல. தரித்திர உண்மை. தரித்திரத்தை விலைக்கு வாங்குகிறார், கமல்” எனக்கூறி அவரைக் கிண்டலடித்து பரபரப்பைக் கிளப்பினார்.
சத்துணவு ஊழியர்கள் வருத்தம்!
“நீர்நிலைகளை சரியாகத் தூர்வாரி பராமரிக்காவிட்டால் நீங்கள் அனைவரும் சத்துணவு வேலைக்கு செல்லுங்கள்” என பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தன் கோபத்தை வெளிப்படுத்தினார், ராஜேந்திர பாலாஜி. அவரது அந்தக் கருத்தில் மறைமுகமாக தங்கள் பணி இழிவுபடுத்தப்படுவதாக சத்துணவு ஊழியர்கள் மனவேதனை அடைந்தனர்.
எடப்பாடிக்குதான் மாஸ்!
ராஜேந்திர பாலாஜி அடிக்கடி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை கடுமையாக விமர்சிப்பது வழக்கம். அது அவருக்கு ஒரு பொழுதுபோக்கு என்றே கூறலாம். அதற்கு சில சாம்பிள்ஸ்… அ.ம.மு.க ஒரு கட்டப்பஞ்சாயத்துக் கூட்டம், தினகரனுக்கோ அவரது கட்சிக்கோ மக்கள் மத்தியில் மாஸும் கிடையாது; தூசும் கிடையாது. மாஸான லீடர் எடப்பாடிதான். அவர்தான் பாஸான லீடர். அதேபோல, “தி.மு.க-வுடன் டிடிவி தினகரன் கள்ளக்கூட்டணி வைத்துள்ளார். டிடிவி ஒரு சிவாஜி ரசிகர். அதனால்தான், எம்.ஜி.ஆர் ஆரம்பித்த அ.தி.மு.க-வை எதிர்க்கிறார்” என்று ராஜேந்திர பாலாஜி தெரிவித்ததும் மற்றொரு உதாரணம்.
அ.தி.மு.க பொங்கல் பானை!
தமிழகத்தின் உரிமைகள் பறிபோவதை தடுக்க முடியாமல் அ.தி.மு.க அரசு திணறுகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம் சொல்லிக்கொண்டிருந்த நேரத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதுதான் தமிழகத்துக்கு நல்லது. அதனால்தான், மோடி அரசை அனுசரித்து செல்கிறோம்” என்று பேசினார். அதுமட்டுமல்ல, “தி.மு.க என்பது வெறும் காலி பானை. அ.தி.மு.க என்பது ஆளுங்கட்சி என்ற பொங்கல் பானை. இஷ்டத்துக்கு அதை உருட்ட முடியாது” என்றார்.
ராகுல்காந்திக்கு மொட்டைப் போட்டது யார்?!
பா.ஜ.க தலைவர்களுக்கு ஆதரவாக நின்றுகொண்டு காங்கிரஸ் கட்சி தலைவர்களைக் கடுமையாக விமர்சித்தார், ராஜேந்திர பாலாஜி. ராகுல் காந்தி இந்திய மண்ணைச் சேர்ந்தவர் அல்ல. அவர் குழந்தையாக இருந்தபோது அவருக்கு யார் மடியில் வைத்து மொட்டைப் போட்டார்கள்? அவருக்கு யார் தாய்மாமன் என்று கேட்டு காமெடி செய்தார்.
இந்த சர்ச்சைகள் தவிர்த்து ராஜேந்திர பாலாஜி என்றதும் உங்கள் நினைவுக்கு வரும் வேறு சர்ச்சைகள் என்னென்ன என்பதை கமெண்டில் சொல்ல மறக்காதீங்க மக்களே!
Also Read: `மனம் திருந்தியவர்களை ஏற்பதே தலைமைக்கு அழகு’ – இ.பி.எஸ் முன்னிலையில் ஓ.பி.எஸ் சொன்ன குட்டிக்கதை!