பரமபதம் விளையாட்டு பார்ப்பது ஒரு விபரீத விளையாட்டு என்பதைக் கூறிக்கொண்டு… இந்தப் படத்தின் புகழ்பாடுவோம் வாங்க!
வெறுமனே ஒன்லைனை மட்டும் எடுத்துக்கொண்டு படம் எனும் பெயரில் வெட்டி ஒட்டி தைத்து வைத்திருக்கிறார்கள், பார்க்கும் நம்மையும் ஊமைக் குத்தாய் குத்தி அனுப்பியிருக்கிறார்கள். பிரபல மருத்துவமனையில் பெரிய டாக்டராக பணிபுரிகிறார் த்ரிஷா. திடீரென ஒரு நாள் முதலமைச்சரான வேல ராம மூர்த்தி நெஞ்சு வலியால் த்ரிஷா பணிபுரியும் அந்த பிரபல' மருத்துவமனையில் அட்மிட் ஆகிறார். உடனே அந்த ஃப்ளோரில் இருக்கும் மற்ற நோயாளிகள் அனைவரையும் வெறும் டயலாக்கை மட்டும் சொல்லி கீழே அனுப்பிவைக்கிறார்கள். பின் அங்கிருக்கும் சிசிடிவியும் அகற்றப்படுகிறது. சடாரென ஒரு கட்டத்தில் இறந்தும்விடுகிறார்.
லட்டுல வெச்சேன் நெனச்சியா தாஸ்… நட்டுல வெச்சேன்’ என்பதைப்போல் யாருக்கும் தெரியாமல் முதலமைச்சர் சிகிச்சை எடுத்துக்கொண்ட இடத்தில் த்ரிஷா ஒரு கேமராவை வைத்திருக்கிறார். மருத்துவமனை, சிசிடிவி, CM... இதெல்லாம் பார்த்தா அதானே டா... அதேதான்'. இதைத் தெரிந்துகொண்ட வில்லன் கும்பல், த்ரிஷாவைக் கடத்திவிடுகிறார்கள். அங்கிருந்து நம்மைப் பதம் பார்க்கிறது இந்த
பரமபதம் விளையாட்டு’.
- வுமன் சென்ட்ரிக் படம் ஓகேதான். ஆனால், த்ரிஷா இதுபோன்ற படங்களை அறவே தவிர்த்துவிடுவது நல்லது. படத்தின் ஒரு காட்சிகூட ஒட்டாமல் போனதால் இவரது நடிப்பையும் ஹைலைட் செய்து சொல்ல முடியவில்லை. இதைவிட முதலமைச்சரை மோட்டிவேட் செய்ய, யூ-டியூபில் ஏப்ரல் 6-க்கு முன் வெளிவந்த சில அரசியல் விளம்பரங்களைப்போல் ஒரு வீடியோவை போட்டுக்காட்டி, `என் ஓட்டு உங்களுக்குத்தான்’ என்கிறார் த்ரிஷா. ஸோ சேட்!
- படத்தில் சர்ப்ரைஸ் இருந்தால் பரவாயில்லை, படமே சர்ப்ரைஸாய் இருந்தால் என்ன செய்வது. டைட்டில் கார்டில் கருப்பு சிவப்பு பேட்டர்னில் பெயர்களைப் போடுகிறார்கள், முதலமைச்சர் மருத்துவமனையில் அட்மிட் ஆகிறார், காலையில் இட்லி சாப்பிட்டார், சிசிடிவி, தர்மயுத்தம் என இப்படியாகத்தான் கதை நகர்கிறது. சரி சரி மோரை ஊத்து அதுல பூனை கிடக்குதான்னு பார்ப்போம் என்ற மனநிலை வெகு சீக்கிரம் வந்துவிடுகிறது. சத்திய சோதனை!
- இதுபோதாதென்று படத்தின் வில்லனாக ரிச்சர்ட் நடித்திருக்கிறார். ஸாரி நடந்திருக்கிறார். இவருக்கென்று ஒரு பிஜிஎம் பின்னணியில் ஒலிக்கிறது. ஹாலிவுட் வில்லனாக தன்னை நினைத்துக்கொண்டு ஏதோ ஃபீல் செய்து பர்ஃபார்ம் செய்திருக்கிறார். குடோஸ் ப்ரோ!
- படத்தின் வசனகர்த்தாவுக்கு ஒரு பெரிய அப்ளாஸ். மல்லாந்து படுத்து மேங்கோ ஜூஸ் குடித்துக்கொண்டே வசனங்களை எழுதியிருப்பார்போல. படத்தின் சில டாப் பன்ச்களை உங்களுக்காக இங்கே பதிவு செய்கிறேன். மன்னித்துவிடும் ஐயா!
=> என்ன பட்டைய (சரக்கு) தூக்கி சொட்டையில ஊத்துறாரு
=> குடிக்கிறத விட்டுட்டு அவன முடிக்கிறது எப்டினு யோசிங்க.
=>ஊசி குத்துறத விட்டுட்டு இங்க வந்து உலைய வெச்சிட்டிருக்கா… களையெடுத்துருங்க.
=> இங்க என்னயா நோண்டிகிட்டே இருக்க… உள்ள உன்ன தோண்டிகிட்டே இருக்காங்க.
=> வாடகை கார் ஓட்டுறவனக்கு வாயப்பாரு.
இப்படி படத்தில் வரும் வசனங்கள் அனைத்தும் இந்த வகையறாதான். ப்ச்!
சுகர் பேஷன்ட் பாஸ் நானு!
`எப்பேற்பட்ட இடியே வந்தாலும் சமாளிச்சிடுவேன்’ என்கிற இடிதாங்கி சினிமா ரசிகர்கள் ஃபன்னுக்காகவே இந்தப் படத்தை பார்க்கலாம். கனிந்த உள்ளம் கொண்டவர்கள்… கவனமா இருந்துக்கங்க!