தமிழர்களின் வாழ்வில் வடிவேலுவைத் தவிர்த்துவிட்டு ஒருநாளைக் கூட நம்மால் கடந்துவிட முடியாது. அந்த அளவுக்குத் தனது டயலாக்குகளாலும் உடல்மொழியாலும் வடிவேலு தமிழர்கள் வாழ்வியலில் இரண்டறக் கலந்துவிட்ட மகா நடிகர். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சமீபத்திய நாய் சேகர் ரிட்டர்ன்ஸின்’ முதல் சிங்கிளான
அப்பத்தா’ பாடல் மூலம் வடிவேலு தரிசனம் தமிழ் ரசிகர்களுக்குக் கிடைத்திருக்கிறது. ரிபூட் பண்ணிட்டு வடிவேலு 2.0-வா புது அவதாரம் எடுத்திருக்கும் வடிவேலு, அப்பத்தா பாட்டுல தன்னோட ஸ்டோரியையே கனெக்ட் பண்ணி பாடியிருப்பார். நூற்றுக்கணக்கான படங்களில் வடிவேலு நடிச்சிருந்தாலும், அவரோட கரியர்லயே முக்கியமான படங்களாக மூன்று படங்களைச் சொல்லலாம். அது ஏன்… அவர் எப்படி நடிக்க வந்தார்.. இப்படி கிளாசிக்கலான வடிவேலு பத்திதான் நாம இந்த வீடியோவில் பார்க்கப் போறோம்.
வடிவேலுவோட ஸ்கிரீன் பிரசன்ஸே ரசிகர்களுக்கு சிரிப்பை வரவழைத்துவிடும். நண்பர்கள் சந்திப்பு, ஆபிஸ் மீட், ஃபேமிலி ஃபங்கஷ்னு எங்க நாலு பேருக்கு மேல் கூடுனாலும் அங்க வடிவேலுவோட டயலாக் இல்லாம முடியாதுனே சொல்லலாம். எத்தனையோ படங்கள்ல வடிவேலு நம்மை சிரிக்க வைச்சிருந்தாலும், வெற்றிக்கொடி கட்டு’ சுடலை, வின்னர்
கைப்புள்ள’, இம்சை அரசன் 23-ம் புலிகேசி கேரக்டர்கள் எவர்கிரீன்னே சொல்லலாம். முக்கியமா சொல்லணும்னா இந்தப் படங்களை எல்லாமே தாங்கிப் பிடிச்சது அவரோட கேரக்டர்கள்தான்.

வெற்றிக்கொடி கட்டு படத்தில் துபாய் ரிட்டர்னாக வரும் சுடலையைத் தமிழ் சினிமா ரசிகன் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. ஒரே கலரில் ஜிப்பா, வேட்டி என தனி டிரெஸ்ஸில் வரும் சுடலை இன்ட்ரோவே அதகளமாக இருக்கும். `எப்பா தம்பி துபாய்ல இருந்து புதுசா ஒரு பையன் வந்திருக்கானாமா… எங்க இருந்தான் பஹ்ரீனா, துபாயா, ஷார்ஜாவா’ என டீக்கடையில் அமர்ந்திருக்கும் நெல்லை சிவாவை வம்பிழுக்கும்போதே சிரிப்பு மீட்டர் வரையறைகளை எல்லாம் தாண்டிவிடும். அதன்பின்னர், பார்த்திபனோடு வம்பிழுத்து, வசமாக சிக்கும் சீன்கள், அவருக்கு ஜாமீன் கையெழுத்துப் போடப் போகும்போது பலியாடாக வரும் சீன் என வடிவேலு தோன்றும் காட்சிகள் எல்லாமே எவர்கிரீன் சிரிப்பு வெடிகள்தான். முத்தாய்ப்பாக, இரண்டு சீன்களைச் சொல்லலாம். ஒன்று, நீ குத்துமதிப்பாதான் கேட்டியா… நானாத்தான் உளறிட்டேனா சீன், உயிரே உயிரே தப்பித்து எப்படியாவது ஓடிவிடு சீன். இது இரண்டையும் சொல்லலாம். வெளிநாடு செல்ல ஏஜெண்டிடம் லட்சக்கணக்கில் கொடுத்து ஏமாந்துவிடுபவர்களின் அன்றாட வாழ்க்கை பிரச்னைகளை சேரன் அழுத்தமாகப் பதிவு செய்திருந்த வெற்றிக்கொடி கட்டு படத்தின் முக்கியமான தூண் சுடலை கேரக்டர் என்றே சொல்லலாம்.
என் ராசாவின் மனதிலே படம் மூலம் வடிவேலுவை அறிமுகப்படுத்துன ராஜ்கிரணுக்கு, அவர் அறிமுகமானதே ஒரு ஆக்சிடண்ட்தான். அதேமாதிரிதான் அவரோட சினிமா அறிமுகமும் இருந்துச்சு.. அப்போ என்ன நடந்துச்சுங்குறதை கடைசில சொல்றேன்.

காமெடி காட்சிகளால் ஒரு படத்தை பிளாக் பஸ்டராக்க முடியும் என்பதற்கு கோலிவுட்டின் அழுத்தமான உதாரணம் சுந்தர் சி இயக்கிய வின்னர். அந்தப் படத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கத் தலைவர் கைப்புள்ள கேரக்டராக வடிவேலு காமெடியில் அதகளம் செய்திருப்பார். தனி பேக்ரவுண்ட் மியூசிக்கோடு அவர் இந்தப் படத்தில் பேசியிருந்த அத்தனை டயலாக்குகளும் மீம் கிரியேட்டர்களின் கோல்டன் கண்டெண்ட். `இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தியே நம்ம உடம்பை ரணகளமாக்கிடுவாய்ங்க… இன்னுமா இந்த ஊர் நம்மளை நம்புது… வேணா… வலிக்குது அழுதுருவேன், இந்த ரணகளத்துலயும் உனக்கு கிளுகிளுப்பு கேக்குது… சங்கமே அபராதத்துலதான் ஓடுது’னு கைப்புள்ள பேசுன எவர்கிரீன் டயலாக்குகளை அடுக்கிக்கிட்டே போகலாம். படத்தின் ஃபர்ஸ்ட் ஹாபில் வர்ற மாதிரி வடிவமைக்கப்பட்ட கைப்புள்ள கேரக்டர், எதிர்பார்த்ததை விட சிறப்பாக வரவே படம் முழுவதும் வரும்படி ஸ்கிரிப்டை மாற்றி எழுதினாராம் சுந்தர் சி. நிஜமாகவே காலில் அடிபட்டி ஒரு மாதிரி நொண்டி நொண்டி நடந்துகொண்டிருந்த வடிவேலுவின் பாடி லாங்குவேஜே தனி அடையாளமாகவும் நிலைத்துவிட்டது.

வெற்றிக்கொடி கட்டு சுடலை, வின்னர் கைப்புள்ள ஒரு ரகம்னா, இம்சை அரசன் 23-ம் புலிகேசி வேற லெவன் வெறித்தனமான கேரக்டர். வெறும் காமெடியன் மட்டுமில்லை, ஆல் ஏரியாவுலயும் அய்யா கில்லி’னு வடிவேலு மிரட்டல் அவதாரம் எடுத்த படம். போருக்காக வாசல் வரை வந்து நிற்கும் எதிரியை நேருக்கு நேர் சந்திக்க முடியாமல், அமைச்சருடன் காய்ச்சல் அடிக்கிறதா என்று பாருங்கள் எனப் பேசும் கான்வோ, தினசரி அவைக்கு வருவதற்கு முன் விளையாடும் சிறுபிள்ளை விளையாட்டு, ஞானப்பழம் காமெடி, கரடி காமெடி, சாதிச் சண்டை மைதானம், அக்காமாலா காமெடிகள் என படம் நெடுக காமெடி கன்னி வெடிகள்தான்.
புறாவுக்கெல்லாம் போரா’, `நமது ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகப் போய்விட்டதே’ உள்ளிட்ட டயலாக்குகளெல்லாம் இன்னிக்கும் எல்லா சிச்சுவேஷனுக்கும் கனெக்ட் ஆகுற வசனங்கள். மற்ற இரண்டு படங்களை விட வடிவேலு இந்தப் படத்துல தனியொரு ஆளா மிரட்டல் சம்பவம் பண்ணிருப்பார்.
ராஜ்கிரணின் தீவிர ரசிகராக இருந்த ஒருவரின் திருமணத்துக்காக மதுரை சென்றிருக்கிறார். திருமணம் காலையில் முடிந்ததும், இரவுதான் ரயில் என்கிற சூழலில் தனது நண்பரான வடிவேலுவைத் துணைக்கு அனுப்பி வைத்திருக்கிறார் அந்த ரசிகர். அவரின் வேடிக்கையான பேச்சில் மகிழ்ந்திருந்தாராம் ராஜ்கிரண். அப்போது வடிவேலு மதுரையில் ஒரு போட்டோ பிரேம் போடும் கடையில் வேலை செய்து வந்திருக்கிறார். சில ஆண்டுகளுக்குப் பின்னர், என் ராசாவின் மனசிலே’ ஷூட்டிங் டைமில் கவுண்டமணி சம்பள பிரச்னையால் நடிக்க முடியாத சூழல் இருப்பதாக புரடக்ஷன் மேனேஜன் ராஜ்கிரணிடம் சொல்லியிருக்கிறார். அப்போது, மதுரை ரசிகர் மூலம் அறிமுகமான வடிவேலு நினைவு வரவே, தனது அலுவலகத்தில் இருந்த ரசிகரின் கடிதத்தை எடுத்து வடிவேலுவை ஷூட்டிங் நடந்துகொண்டிருந்த திண்டுக்கல்லுக்கு காலை 7 மணிக்கு வரச் சொல்லியிருக்கிறார்கள். வடிவேலுவும் வந்து சேர்ந்திருக்கிறார். எதிர்பாராதவிதமாக கவுண்டமணியும் ஷூட்டிங் வந்துவிட்டாராம்.நான் அப்படிப்பட்ட ஆளா… என்னைப் போய் அப்படி நினைச்சுட்டீங்களே’ என கவுண்டமணி வருத்தப்படவே, அவரை சமாளித்திருக்கிறார்கள்.

கவுண்டமணி ஜோசியம் பார்க்கும் சீன் மூலம் திரையில் அறிமுகமானார் வடிவேலு. அவர் தலையை ஆட்டி ஆட்டி நடித்ததை ரசித்த ராஜ்கிரண், ஊருக்குக் கிளம்ப இருந்த வடிவேலுவைத் தடுத்து நிறுத்தி, போடா போடா புண்ணாக்கு’ பாடல் உள்பட அவரின் கேரக்டருக்கு நீட்சி கொடுத்து நடிக்க வைத்திருக்கிறார். டி.ஆர் இயக்கத்தில் 1988-ல் வெளியான என் தங்கை கல்யாணி படத்தின் மூலம் அறிமுகமாகியிருந்தாலும் அந்தப் படத்தில் வடிவேலுவுக்கு கிரடிட் இல்லாத வேடம். 1991-ல் வெளியான என் ராசாவின் மனசிலே படத்தில்தான்
அறிமுகம் மதுரை வடிவேலு’ என்கிற அடைமொழியோடு அவருக்கு கிரடிட் கிடைத்தது. நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் வடிவேலுக்கு எந்த அளவுக்கு கிராண்டான ரீ-எண்ட்ரியா இருக்குனு பார்க்க உங்கள மாதிரியே நாங்களும் மரண வெயிட்டிங் பாஸ்…
வடிவேலுவோட கேரக்டர்கள்ல உங்க மனசுக்கு நெருக்கமான கேர்க்டர் எது… அவரோட ஃபேவரைட்டான டயலாக் எதுனு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க!