தி.மு.க-வில் இருந்து வெளியேற்றப்பட்டபோது எந்தக் குற்றச்சாட்டை வைகோ முன்வைத்தாரோ, அதே குற்றச்சாட்டைத் தெரிவித்து ம.தி.மு.க-வில் இருந்து வெளியேறியிருக்கிறார் அக்கட்சியின் மாநில இளைஞரணிச் செயலாளர் ஈஸ்வரன். என்ன நடந்தது?
வைகோ
எம்.ஜி.ஆர் பிரிந்துசென்ற பிறகு தி.மு.க-வில் கருணாநிதியின் வலதுகரமாக செயல்பட்டவர் வைகோ. 1977-ல் அ.தி.மு.க-விடம் ஆட்சியைப் பறிகொடுத்தபிறகு அக்கட்சியில் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலித்தது வைகோவின் குரல். `தி.மு.க-வின் போர்வாள் வை.கோபால்சாமி’ என கருணாநிதியே பாராட்டியிருந்தார். ஆனால், கட்சியில் வைகோவின் வளர்ச்சி கருணாநிதிக்கு உவப்பாக இல்லை என்பது 1980-களின் இறுதியில் பல்வேறு தருணங்களில் வெளிப்பட்டது. குறிப்பாக, 1989-ல் கள்ளத்தோணியில் இலங்கை சென்று வந்த வைகோவின் செயல் தி.மு.க தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. கட்சியில் இருந்து வைகோவை ஓரங்கட்டும் வேலைகளை தலைமை செய்துவந்த நிலையில், 1991-ம் ஆண்டு மதுரையில் நடந்த மாநாடு கட்சியில் வைகோவின் செல்வாக்கை எடுத்துக் காட்டியது. 1991-ம் ஆண்டு ராஜீவ் படுகொலைக்குப் பிறகு தி.மு.கவுக்கு நெருக்கடிகள் அதிகரித்த நேரத்தில் கூட்டப்பட்ட பொதுக்குழுவில் வைகோவைக் கட்சியில் இருந்து நீக்கும் முடிவை கருணாநிதியால் செயல்படுத்த முடியவில்லை. இந்தநிலையில், 1993-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி கடிதம் ஒன்று வந்தது. அதில், வைகோவின் அரசியல் ஆதாயத்துக்காக விடுதலைப் புலிகள் தன்னைக் கொலை செய்யவும் வாய்ப்பிருப்பதாக எழுதப்பட்டிருந்தது என்று பத்திரிகையாளர்களைக் கூட்டி வெளிப்படையாகவே அறிவித்தார் கருணாநிதி. அந்த செய்தியாளர் சந்திப்பில் கடிதத்தில் இருந்த தகவல்களையும் வெளியிட்டார். இது தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது.
இதையடுத்து தி.மு.கவில் இருந்து பிரிந்துசென்ற வைகோவோடு அப்போதைய மாவட்ட செயலாளர்கள் 9 பேர் சென்றனர். தன் மீது பழி சுமத்தப்பட்டதாகச் சொன்ன வைகோ அப்போது கருணாநிதி மீது வைத்த குற்றச்சாட்டு வாரிசு அரசியல் என்பதுதான். “கருணாநிதி, தி.மு.க-வைத் தனது குடும்பக் கட்சியாக்கிவிட்டார். மகன் ஸ்டாலினை அரசியல் வாரிசாக மகுடம் சூட்டுவதற்காகவே என் மீது இந்த அபாண்ட பழியை சுமத்துகிறார்’’ என்று கொந்தளித்தார் வைகோ. அதன்பின்னர், சென்னை தி.நகரில் இருந்த தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடத்தில் 1994-ம் ஆண்டு மே 6-ம் தேதி கூடிய ம.தி.மு.க பொதுக்குழுவில் கட்சியின் கொள்கைகள், கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. அக்கட்சியின் பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்ட வைகோ, அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை, இலட்சியத்தில் உறுதி’ என்ற முழங்கினார்.
திரும்பும் வரலாறு
இந்த சம்பவம் நடந்து ஏறக்குறைய 22 ஆண்டுகள் கழித்து வாரிசு அரசியல் என்ற குற்றச்சாட்டால் ம.தி.மு.க-வில் இருந்து பிரிந்து மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் என்ற ஒரு இயக்கத்தைத் தொடங்க இருப்பதாக அக்கட்சியின் மாநில இளைஞரணிச் செயலாளர் ஈஸ்வரன் அறிவித்திருக்கிறார். என்னநடந்தது?
வாரிசு அரசியல் குற்றச்சாட்டை முன்வைத்த வைகோ, தமிழக அரசியலில் 56 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர். ஆனால், அரசியலில் அனைத்தும் சாத்தியமே என்பதற்கேற்ப அ.தி.மு.க – தி.மு.க கூட்டணியோடு இணைந்து பல ஆண்டுகளாகப் பயணித்தவர். யாரை எதிர்த்து தி.மு.க-வில் இருந்து வெளியேறினாரே, அதே ஸ்டாலினை முதல்வராக்குவேன் என்று கடந்த தேர்தலில் சபதமேற்றவர் வைகோ. அதேபோல், சின்னத்துக்கு உரிமைகோரி சட்டப்போராட்டம் நடத்திய அதே உதயசூரியன் சின்னத்தில் நின்று எம்.பியானார். ம.தி.மு.க சார்பில் 4 பேர் எம்.எல்.ஏக்களாக இருக்கிறார்கள்.
துரை வைகோ
தொடக்கத்தில் அரசியலில் பெரிதாக ஈடுபாடு காட்டாமல் இருந்த வைகோவின் மகன் துரை வையாபுரி, கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சி வேட்பாளர்களுக்காக தீவிர பிரசாரம் மேற்கொண்டார். பா.ஜ.க கூட்டணியில் சிவகாசி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட வைகோ, தோல்வியைத் தழுவினார். வைகோவுக்காக சிவகாசி தொகுதிக்கு வந்த அப்போதைய பா.ஜ.க தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங், இவர் ஜெயித்தால் தமிழகத்துக்கு ஒரு மத்திய அமைச்சர் கிடைத்துவிட்டார் என்று வைத்துக்கொள்ளுங்கள் என்று பரப்புரை செய்திருந்தார். ஆனால், அது நடக்கவில்லை.
துரை வைகோவின் வருகை விமர்சனத்தை எழுப்பியிருந்த நிலையில், கட்சியில் அவருக்கு எந்தவித பொறுப்பையும் வைகோ கொடுக்கவில்லை. கொரோனா சூழலால் வைகோ வெளியே அதிகம் தலைகாட்டாத நிலையில், அவருக்குப் பதிலாகப் பல்வேறு நிகழ்ச்சிகளில் துரை கலந்துகொள்ளத் தொடங்கினார். இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான 78 வயதான வைகோ, மகனுக்குப் பொறுப்புக் கொடுப்பது தொடர்பாக பொதுக்குழுவில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்தார். அதன்படி, சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க தலைமைக்கழகமான தாயகத்தில் நடந்த கூட்டத்தில், துரை வையாபுரிக்கு ஆதரவாக கூட்டத்தில் பங்கேற்ற 106 பேரில் 104 பேர் வாக்களித்தனர். இதையடுத்து, அவருக்கு தலைமைக் கழகச் செயலாளர் பொறுப்பு ம.தி.மு.கவில் வழங்கப்பட்டிருக்கிறது. துரை நியமனத்தில் வாரிசு அரசியல் செய்யவில்லை. கட்சி உறுப்பினர்களின் கருத்துக்கு மதிப்பளித்தே அவருக்குப் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாக வைகோ விளக்கமளித்திருக்கிறார்.
இளைஞரணிச் செயலாளர் ஈஸ்வரன்
வைகோவின் இந்த முடிவை எதிர்த்து ம.தி.மு.க-வின் மாநில இளைஞரணிச் செயலாளர் ஈஸ்வரன் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கடந்த 28 ஆண்டுகளாக என் வாழ்க்கையை முழுவதுமாக அர்ப்பணித்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தில் பணியாற்றி வந்தேன். கட்சி இட்ட கட்டளைகளை செவ்வனே நிறைவேற்றி உள்ளேன். மக்களின் பிரச்சனைகளை தீர்க்க அறப்போராட்டத்தின் வாயிலாகவும் சட்டப்போராட்டத்தின் வாயிலாகவும் தொடர்ந்து போராடிவருகிறேன்…. நான் நேசிக்கும் தலைவர் வைகோ, என் உள்ளத்தில் பல அடிப்படை கொள்கைகளை விதைத்து விட்டார். அது இன்று மரமாகிவிட்டது.அதை என்னால் வெட்ட இயலவில்லை ! எந்த காரணம் சொல்லியும் என்னால் சமாதானப்படுத்திக்கொள்ள இயலவில்லை. என் தலைவரா ? அவர் விதைத்த கொள்கையா? என்ற போராட்டத்தில் அவரின் கொள்கையே என்னை ஆட்கொண்டுவிட்டது.
என்ன செய்வேன் நான் ?எது நடக்கக்கூடாது என்று நினைத்தேனோ அது நடந்துவிட்டது என்று எதை பொதுச்செயலாளர் சொன்னாரோ அது நடப்பதற்கு முன்பே அமைதியாக சென்றுவிட நினைத்து கடிதம் எழுதினேன். ஆனால், பொதுச்செயலாளரின் காந்தக்குரல் என்னைக் கட்டிப்போட்டு விட்டது. ஆனால் இன்று! கனத்த இதயத்தோடு இமைப்பொழுதும் என்னை நீங்கா என் தலைவரின் இயக்கமான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தில் இருந்து விலகிக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்திருக்கிறார்.
Also Read – எம்.ஜி.ஆருக்குப் பிறகு தி.மு.க-வை உடைத்த வைகோ – ம.தி.மு.க உருவான பின்னணி!