லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலிப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இருவரும் எடுக்கும் புகைப்படங்களை அவ்வப்போது தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துகொண்டிருப்பார்கள். அதுமட்டுமில்லாமல் ரசிகர்களின் கேள்விக்கும் விக்னேஷ் சிவன் தனது பதில்களை தெரிவித்துக்கொண்டிருப்பார். அந்த வகையில், தற்போது `நயன்தாராவிடம் பிடித்த விஷயம், ஃபேவரைட் புகைப்படம், காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் அடுத்த சிங்கிள்’ என ரசிகர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு தனது இன்ஸ்டாகிராமில் இயக்குநர் விக்னேஷ் சிவன் பதிலளித்துள்ளார்.
சிம்பு நடிப்பில் 2012-ம் ஆண்டு வெளியான `போடா போடி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இந்தப் படத்தைத் தொடர்ந்து 2015-ம் ஆண்டு நானும் ரௌடிதான் படத்தை இயக்கினார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. அடுத்ததாக எடுத்த தானா சேர்ந்த கூட்டம், பாவக்கதைகள் ஆந்தாலஜி போன்றவை ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெறவில்லை. தற்போது விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் அனிருத் இசையில் `காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

இன்ஸ்டாகிராமில், “நயன்தாராவிடம் உங்களுக்கு மிகவும் பிடித்த விஷயம் எது?” என ரசிகர் ஒருவர் கேட்க அதற்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் நயன்தாராவின் அழகிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, “அவரின் செல்ஃப் கான்ஃபிடென்ஸ்” என்று பதிலளித்துள்ளார். இதனையடுத்து, “நயன்தாராவுடன் நீங்கள் எடுத்துக் கொண்டதில் உங்களுடைய ஃபேவரைட் புகைப்படம் எது?” என கேட்க.. அவர்கள் அமெரிக்காவுக்குச் சென்றபோது எடுத்த நயன்தாராவின் நெற்றியில் முத்தமிடும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். விக்னேஷ் சிவன் நயன்தாரவுடன் படம் ஒன்றை இயக்குவதுடன் அவரது `நெற்றிக்கண்’ என்ற படத்தை தயாரித்தும் வருகிறார். இந்த ஜோடி தனி விமானம் மூலம் வெளியூர் செல்லும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் அடிக்கடி வைரலாவது உண்டு.

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் முதல் சிங்கிள் கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது தனது படத்தின் அடுத்த சிங்கிள் வெளியீட்டிற்கான அப்டேட்டையும் தெரிவித்துள்ளார். காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் அடுத்த சிங்கிள் ஜூலை மாதத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சாதி ஆணவக் கொலைகளை மையமாக வைத்து உருவான `பாவக் கதைகள்’ ஆந்தாலஜியில் வெற்றிமாறன், சுதா கொங்கரா, கவுதம் மேனன் ஆகியோருடன் இணைந்து விக்னேஷ் சிவனும் அஞ்சலி நடிப்பில் `லவ் பண்ணா உட்றனும்’ என்ற குறும்படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படம் தொடர்பாகவும் ரசிகர்கள் விக்னேஷ் சிவனிடம் கேள்விகளை முன்வைத்தனர்.
“லவ் பண்ணா உட்றனும்’ ஆந்தாலஜியில் ஏன் தந்தை கதாபாத்திரத்தை தப்பிக்க வைத்தீர்கள்? அவரும் கொலைகாரர்தானே’’ என்று ரசிகர்கர் ஒருவர் கேட்ட கேள்விக்கு விக்னேஷ் சிவன், “நீங்கள் கூறுவது சரிதான். அவர் செய்தது தவறுதான். அதற்கு அவரது மனசாட்சியைத் தவிர வேறு எந்த ஆதாரமும் கிடையாது. அவரது தவறான முடிவுக்கு அவரே தண்டனையைக் கொடுத்துக்கொண்டார்” என்று பதிலளித்தார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக காத்திருப்பதாகவும் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
Also Read : ஒலிம்பிக் களத்தின் முதல் திருநங்கை – நியூசிலாந்தின் லாரெல் ஹப்பார்ட் சாதனை!