உயரத்துக்குப் போக, போக நண்பர்களின் வட்டம் சுருங்கிப்போகும், அந்த நண்பர்களின் வட்டமும் அடிக்கடி மாறும். யதார்த்தம் இப்படியிருக்க, தளபதி விஜய் இதிலும் ஓர் ஆச்சர்யம்தான். சென்னை லயோலா கல்லூரியில் படிக்கும்போது தனக்கு கிடைத்த நட்பை இப்போதும் பொக்கிஷமாக பாதுகாத்துவருகிறார் விஜய். பரபரப்பான சினிமா வேலைகளுக்கு நடுவே விஜய் இளைப்பாறுவது இவர்களிடம்தான். வாரத்தில் ஒருதடவை மீட்டிங், மாதத்தில் ஒருதடவை அவுட்டிங், வருடத்தில் ஒருதடவை ஃபாரீன் டிரிப் என இந்த ‘பஞ்சதந்திர’ கேங் அடிக்கும் லூட்டிகள் ஏராளம்.
சஞ்சீவ்
இவரை அனைவருக்கும் தெரிந்திருக்கும். இன்னும் சொல்லப்போனால் விஜய் மூலமாகத்தான் அனைவருக்கும் தெரிந்திருக்கும். விஜய்யின் ஆரம்பகால படங்களான ‘சந்திரலேகா’, ‘நிலாவே வா’ தொடங்கி ‘மாஸ்டர்’ வரை விஜய்யுடன் பல படங்களில் அவருடன் இணைந்து நடித்திருக்கிறார். ஆனால் அவர் விஜய்யுடன் நட்பானது கல்லூரிக்காலத்திலேயே. லயோலா கல்லூரியில் சேர வேண்டுமானால் ஒரு நுழைவுத்தேர்வு எழுதவேண்டும். அந்த தேர்வு எழுதும்போது விஜய்க்கு ஒரு கேள்விக்கு விடைதெரியாமல் அருகில் இருந்த ஒருவரிடம் கேட்க, அவரும் விடை தெரியாமல் விழித்திருக்கிறார் அவர்தான் சஞ்சீவ். அப்போது தொடங்கிய நட்பு இப்போதுவரை தொடர்கிறது. சமீபத்தில் சஞ்சீவ் கொரோனா குவாரண்டைனில் இருக்கவேண்டிய சூழல் வந்தபோது நண்பனுக்காக தானே சாப்பாடு எடுத்துக்கொண்டு சர்ப்ரைஸ் விசிட் அடித்து நெகிழவைத்திருக்கிறார்.
ஸ்ரீநாத்
இயக்குநரும் நடிகருமானவர் ஸ்ரீநாத். விஜய்யுடன் ‘வேட்டைக்காரன்’ படத்தில் இவரைக் காணலாம். லயோலா நுழைவுத்தேர்வில் விஜய்யும் சஞ்சீவும் விடை தெரியாமல் மூன்றாவதாக ஒரு ஆளிடம் கேட்டு எழுதினார்கள். அந்த மூன்றாவது ஆள்தான் ஸ்ரீநாத். இவர் அடிக்கும் காமெடி கவுண்டர்கள் விஜய்க்கு ரொம்பவே பிடிக்குமாம்.
சிரிஷ் – ஆனந்த் – மனோஜ்
இவர்கள் சினிமா அல்லாத வேறு வேறு துறைகளில் பயணிப்பவர்கள். ஆனால் இவர்களையும் விஜய்யுடன் இணைப்பது லயோலாதான். விஜய், சஞ்சீவ், ஸ்ரீநாத்துடன் சேர்ந்து கல்லூரியில் இவர்கள் செய்த அலப்பறைகள் ஏராளம். இந்த அலப்பறைகள் இப்போதும் தொடர்கிறது. காலேஜ் டைமில் ஒருமுறை விஜய்யுடன் பெங்களூருக்கு போன டிரெயின் டிரிப்பை தங்களது வாழ்வின் மறக்கமுடியாத அனுபவம் என்கிறார்கள். மேலும் இவர்கள் விஜய்யின் ரியல் டைம் காமெடி பஞ்ச்களுக்கு ரசிகர்கள். நண்பர்களுடன் இருக்கையில் விஜய் செய்யும் காமெடிகளில் பாதியளவுகூட அவர் இன்னும் தன் படங்களில் செய்யவில்லை என்பது இவர்களின் கருத்து. ‘சச்சின்’ படத்தில் மட்டும் லேசாக அந்த விஜய்யை காணலாம் என்கிறார்கள்
சாந்தனு
ஒரு ரசிகராக விஜய்யிடம் அறிமுகமாகி இன்று அவரது நெருங்கிய வட்டத்தில் ஒருவராக மாறியிருக்கிறார் சாந்தனு. இவரது கல்யாணத்திற்கு வந்திருந்து தாலி எடுத்துக்கொடுத்ததே விஜய்தான். விஜய்யை தன்னுடைய ரோல்மாடலாக வைத்திருக்கும் சாந்தனுவுக்கு விஜய் அவ்வபோது சொல்லும் உற்சாக வார்த்தைகள்தான் எனர்ஜி டானிக்
ஜெகதீஷ்
ஒரு மேலாளராக, தொழில்முறையில் விஜய்யுடன் இணைந்து பயணிக்க ஆரம்பித்து இன்று அவரது நிழலாகவே வளர்ந்து நிற்கிறார் ஜெகதீஷ். விஜய்க்கு என்ன தேவையென்பதை அவர் சொல்லாமலேயே செய்துமுடிக்கும் அளவுக்கு விஜய்யின் மனஓட்டம் ஜெகதீஷூக்கு அத்துப்படி ‘விஜய்யின் கால்ஷீட் வேணுமா ஜெகதீஷைப் பிடிங்க’ என்பதுதான் தமிழ் சினிமாவில் இன்றைய சூழல்.
Also Read : சின்னத்தம்பி – லாஜிக் இல்லா மேஜிக் திரைக்கதை!