சில விஷயங்களை ரசிகர்கள் ஓப்பனாக வெளியில் சொல்லிக்கொள்ளாமல் சீக்ரெட் க்ரெஷ் போல மனதுக்குள்ளேயே வைத்துக்கொள்வார்கள். உதாரணத்திற்கு விஜய்க்கு ‘தெறி’ & ‘மெர்சல்’ என்ற இரண்டு ப்ளாக் பஸ்டர் ஹிட்களையும் ‘பிகில்’ எனும் ஹிட்டையும் தந்த இயக்குநர் அட்லீயை அஜித் ரசிகர்கள் உள்ளுக்குள் ரசிக்கத்தான் செய்வார்கள். எதிர்காலத்தில் ஒருவேளை அஜித் – அட்லீ கூட்டணி இணைவதாக செய்திகள் வந்தால் அப்போதுதான் தெரியும் அஜித் ரசிகர்கள் அதுவரை அட்லீயை வெளியில் காட்டிக்கொள்ளாமல் எவ்வளவு நேசித்திருக்கிறார்கள் என்பது. அதுபோலத்தான் விஜய் ரசிகர்களும் இயக்குநர் சிறுத்தை சிவாவை பார்க்கிறார்கள். அதிலும் ‘விஸ்வாசம்’ படத்தின் வெற்றியைப் பார்த்தபிறகு எந்தவொரு விஜய் ரசிகனுக்கும் ‘நம்மாளு இவர்கூட ஒரு படம் பண்ணணும்பா’ என தோன்றாமல் இருந்திருக்காது. ஆனால், விஜய் – சிறுத்தை சிவா கூட்டணி முன்பே இணைந்து பணியாற்றிருப்பதும் அதிலிருந்தே விஜய்யும் சிவாவும் இன்றுவரை நல்ல நட்புறவுடன் பழகிவருகிறார்கள் என்றால் நம்பமுடிகிறதா?
சிறுத்தை சிவா இயக்குநராவதற்கு முன்பு அடிப்படையில் அவர் ஒரு ஒளிப்பதிவாளர் என்பது அனைவரும் அறிந்ததே. தமிழில் ‘சார்லி சாப்ளின்’ ‘மனதை திருடிவிட்டாய்’ போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர், தெலுங்கில் 2008-ல் வெளிவந்த ‘சௌர்யம்’ என்ற படம் மூலம் இயக்குநராகி அதைத் தொடர்ந்துதான் ‘சிறுத்தை’ படம் மூலம் மீண்டும் தமிழ்நாட்டுக்கு வந்து, அஜித்தை வைத்து ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விஸ்வாசம்’ ஆகிய ப்ளாக்பஸ்டர்களைக் கொடுத்து தற்போது சூப்பர் ஸ்டார் நடிப்பில் ‘அண்ணாத்த’ படத்தை இயக்குவதுவரை வளர்ந்து நிற்கிறார். முன்னதாக சிவா உதவி ஒளிப்பதிவாளராக இருந்தபோதுதான் விஜய்யுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார்.
இயக்குநர் பி.ஏ.அருண் பிரசாத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2001-ஆம் ஆண்டு வெளியான படம்தான் ‘பத்ரி’. ‘கலைஞன்’, ‘பூவரசன்’ போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளர் ஜெயனன் வின்செண்ட்தான் ‘பத்ரி’ படத்துக்கு ஒளிப்பதிவாளர். அவரிடம்தான் சிறுத்தை சிவா அப்போது உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தார். படத்தில் பாக்ஸிங்குக்காக விஜய் தயாராவதுபோல வரும் ‘ட்ராவலிங் சோல்ஜர்’ பாடலை ஷூட் செய்யும்போது ஒளிப்பதிவாளர் ஜெயனன் வின்செண்ட் ஒரு தெலுங்குப் படத்தில் பிஸியாக மாட்டிக்கொண்டார். இதனால் இங்கு ஷூட்டிங்கை தள்ளிப்போடவும் முடியாத நிலை. அந்த நேரத்தில்தான் ஜெயனன் வின்செண்ட், தனது உதவியாளர் சிவாவை சென்னைக்கு அனுப்பி விஜய் நடித்த மாண்டேஜ்களைப் படமாக்க சொல்லியிருக்கிறார். விஜய்யின் கைகளில் கார் ஏறுவது போன்ற பல சாகசங்களை கொஞ்சமும் பிசகில்லாமல் அழகாக படம் பிடித்தது சிவாதான். சிவா உதவி ஒளிப்பதிவாளராக இருந்தபோதே அவரது உழைப்பையும் அர்ப்பணிப்பையும் நன்கு கவனித்த விஜய், இந்த பாடல் ஷூட்டிங்கில் அவரது வேலையைப் பார்த்து மனதார பாராட்டவும் செய்திருக்கிறார்.
மேலும் அப்போதிருந்தே விஜய்யும் சிறுத்தை சிவாவும் நல்ல நண்பர்களாகத்தான் இன்றுவரை பழகிவருகிறார்கள். அவரது எல்லாப் படங்களையும் பார்த்துவிட்டு விஜய், சிவாவை போனில் அழைத்து மனம்விட்டு பாராட்டுவதுண்டு. குறிப்பாக ‘விஸ்வாசம்’ படம் பார்த்துவிட்டு விஜய் ரொம்பவே நெகிழ்ந்துபோய் சிவாவை பாராட்டியிருக்கிறார். மேலும் விரைவில் மீண்டும் நாம் இணைந்து பணியாற்றுவோம் என்றும் சிவாவிடம் வாக்குறுதி தந்திருக்கிறார் விஜய்.
Also Read : பெண் குழந்தைகள் கற்பதை இஸ்லாமியர் விரும்ப மாட்டார்களா… மதுரை கேந்திரிய வித்யாலயா சர்ச்சைக் கேள்வி!