ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஆசியக் கோப்பை போட்டியில் சதமடித்து, டி20 ஃபார்மேட்டில் தனது முதல் செஞ்சுரியைப் பதிவு செய்திருக்கிறார் இந்திய வீரர் விராட் கோலி. இதன்மூலம் கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் 9 மாதங்களுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் சதத்தைப் பதிவு செய்து விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்திருக்கிறார். இந்த சதம் ஏன் அவ்வளவு ஸ்பெஷல்?
விராட் கோலி
தற்போதைய ஆக்டிவ் பிளேயர்களில் அதிக ரன்கள், அதிக செஞ்சுரிகள் குவித்த வீரர் என்றால், அது விராட் கோலிதான். ஆனால், கடைசியாக அவர் சர்வதேச போட்டிகளில் சதத்தைப் பதிவு செய்து ஏறக்குறைய 3 ஆண்டுகள் ஆகிவிட்டதாகக் கடும் விமர்சனங்கள் எழுந்தன. அதுவும் குறிப்பாக, இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து அவர் விலகியது முதல், ஒரு வீரராக அவரின் பேட்டிங் மற்றும் ஃபார்ம் குறித்தும் தொடர்ச்சியாக விமர்சனங்கள் எழுந்து வந்தன. ஒருதரப்பினர், ஃபார்ம் அவுட்டில் இருக்கும் விராட் கோலிக்குப் பதிலாக மாற்று வீரரை இந்தியா டி20 உலகக் கோப்பையில் களமிறக்க வேண்டும் என்றெல்லாம் விமர்சிக்கத் தொடங்கியிருந்தனர்.
இந்த சூழ்நிலையில், டி20 ஃபார்மேட்டில் நடந்த ஆசியக் கோப்பை தொடர் விராட் கோலிக்கு முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் 30 ரன்களுக்கு மேல் எடுத்தார். ஹாங்காங் போட்டியில் அரைசதம் கடந்தும் சாதனை படைத்தார். ஆனாலும், செஞ்சுரி இல்லையே என்கிற விமர்சனம் தொடர்ந்து அவரைத் துரத்தி வந்தது. அதிலும், கடைசியாக அவர் சர்வதேச சதம் அடித்து 1,000 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது என்றெல்லாம் கூட விமர்சனங்கள் எழுந்தன. ஆசியக் கோப்பை தொடரில் இருந்து இந்தியா வெளியேறிவிட்ட நிலையில், கடைசி போட்டியாக ஆஃப்கானிஸ்தானுடன் மோதியது.
இந்தப் போட்டியில் கேப்டன் ரோஹித் ஷர்மா ரெஸ்ட் எடுக்க, கே.எல்.ராகுல் தலைமையில் களம் கண்ட இந்திய அணியின் ஓப்பனராக விராட் கோலி களம்கண்டார். இந்தப் போட்டியில் சதமடித்து, தன் மீதான விமர்சனங்களையெல்லாம் தவிடுபொடியாக்கியதோடு, டி20 ஃபார்மேட்டிலும் தனது முதல் சதத்தைப் பதிவு செய்திருக்கிறார். சர்வதேச அரங்கில் மூன்று ஃபார்மேட்டுகளிலும் சேர்த்து விராட் பதிவு செய்யும் 71-வது சதம் இதுவாகும். போட்டிக்குப் பின்னர் பேசிய விராட், `டி20 ஃபார்மேட்டில் என்னுடைய 71-வது சதம் அமையும் என்று எதிர்பார்க்கவே இல்லை’ என்று நெகிழ்ந்திருந்தார்.
விராட் கோலியின் சில முக்கிய மைல்கல்கள்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான சதமடித்த போட்டியில் விராட் கோலி கடந்த சில முக்கியமான மைல்கல்கள்…
- முதல் டி20 சதம்
- ஆசியக் கோப்பையின் இரண்டு ஃபார்மேட்டுகளிலும் (ஒருநாள், டி20) சதமடித்த ஒரே வீரர்.
- 71-வது சதம்
- அதிக சதமடித்த வீரர்கள் வரிசையில் இரண்டாவது இடம்
- சர்வதேச அரங்கில் 24,000 ரன்கள் கடந்தது.
- சர்வதேச கிரிக்கெட்டில் 250 சிக்ஸர்கள்.
- சர்வதேச டி20 கரியரில் 3,500 ரன்கள்.
- டி20 கிரிக்கெட்டில் இந்தியாவின் தனி நபர் ஹைஸ்கோர்.
இதற்கு முன்பு, கடந்த 2019-ம் ஆண்டு நவம்பரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வங்கதேசத்துக்கு எதிராக நடந்த பிங்க் பால் டெஸ்டில் விராட் கோலி சதமடித்திருந்தார். அந்தப் போட்டியில் 136 ரன்கள் விளாசியிருப்பார் விராட் கோலி.