ஒளிப்பதிவு சட்டத் திருத்த வரைவு – 2021 ஏன் இவ்வளவு எதிர்ப்பை சம்பாதித்திருக்கிறது… அதன் முக்கிய அம்சங்கள் என்ன..
ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரியில் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே அமலில் இருக்கும் ஒளிப்பதிவு சட்டத்தில் (1952) சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இந்த சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட இருக்கிறது. இதற்கான வரைவு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், திரையுலகினர் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது. மூத்த இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன், கமல்ஹாசன், சூர்யா, கார்த்திக் சுப்புராஜ், கார்த்தி, விஷால் என திரைத்துறையினர் பலரும் இந்த சட்டத்துக்கு எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார்கள். இந்த வரைவு மீதான கருத்துகளைத் தெரிவிக்க ஜூலை 2-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.
பரிந்துரை செய்யப்பட்ட திருத்தங்கள் என்னென்ன?
இந்தியாவில் திரைத்துறையை நெறிப்படுத்தும் சட்டம் நடைமுறையில் இதுதான். இந்த சட்டத்தில் நான்கு திருத்தங்கள் செய்ய பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.
- தற்போது திரைப்படங்களுக்கு யு, யு/ஏ, ஏ என மூன்று வகையான தணிக்கை சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில், யு சான்றிதழ் பெற்ற படங்களை அனைத்து வயதுடையோரும் பார்க்கத் தடையில்லை. யு/ஏ சான்றிதழ் பெற்ற படங்களை 12 வயதுக்கு மேற்பட்டோரும், ஏ சான்றிதழ் படங்களை 18 வயதுக்கு மேற்பட்டோரும் பார்க்கலாம். முதல் திருத்தமாக யு/ஏ சான்றிதழ் வயதுவாரியாகப் பிரிக்கப்பட பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. யு/ஏ 7+, யு/ஏ 13+, யு/ஏ 16+.
- இரண்டாவது திருத்தம் திரைப்படங்களை சட்டவிரோதமாக நகலெடுத்தல், இணையத்தில் வெளியிடுதல் போன்ற சட்டவிரோத செயல்களுக்குக் கடுமையான தண்டனைகளை விதிக்க பரிந்துரை செய்கிறது. இதற்காக 6AA என தனிப்பிரிவு சேர்க்கப்பட்டிருக்கிறது. அதன்படி, ஒரு படத்தின் இயக்குநர் அல்லது கிரியேட்டரின் எழுத்துபூர்வ அனுமதியின்றி படத்தின் ஒரு சில பகுதிகளையோ அல்லது முழு படத்தையோ நகலெடுத்தல், ஒலி – ஒளிப்பதிவு செய்தல் கூடாது. இதற்கு 3 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம். அதேபோல், குறைந்தபட்சம் 3 லட்ச ரூபாய் முதல் மொத்த தயாரிப்பு செலவில் 5% வரை அபராதம் விதிக்கவும் புதிய சட்டத்திருத்தம் வழிவகை செய்யும். இந்த சட்டத்திருத்தத்துக்கு திரைத்துறையினர் பலரும் வரவேற்புத் தெரிவித்திருக்கிறார்கள்.
- தற்போதைய நிலையில் ஒரு படத்துக்கு வழங்கப்பட்டு வரும் தணிக்கை சான்றிதழ் 10 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும். மூன்றாவது திருத்தம் இந்த கால அளவை ரத்து செய்ய பரிந்துரைக்கிறது. அதாவது ஒரு முறை தணிக்கை சான்றிதழ் பெற்றுவிட்டால், அதை காலம் முழுவதும் செல்லுபடியாகும் சான்றிதழகாகப் பயன்படுத்த முடியும்.
- முக்கியமான நான்காவது திருத்தம்தான் திரைத்துறையின் பரவலான எதிர்ப்புக்குக் காரணம். இதுவரையில் ஒரு படத்துக்குத் தணிக்கைக் குழு சான்று அளித்து தியேட்டர்களில் ரிலீஸாகும் பட்சத்தில் அதில் மத்திய அரசு தலையிட முடியாது. இதுதொடர்பான வழக்குகளை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவை இதை உறுதியும் செய்திருக்கின்றன. ஆனால், இந்த ஷரத்தில் திருத்தி, `ஒரு படம் இந்தியாவின் இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் குந்தகம் விளைவிக்கும் விதமாகவோ, பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலோ, பொது அமைதியைக் குலைக்கும் வகையிலோ, நீதிமன்றத்தின் மாண்பைக் குலைக்கும் விதமாகவோ உள்ளடக்கம் இருப்பதாகப் புகார் எழுந்தால் தியேட்டர்களில் ரிலீஸாகியிருந்தாலும் அந்த படத்தை மறு தணிக்கைக்கு உட்படுத்த தணிக்கைக் குழு தலைவருக்கு மத்திய அரசு அறிவுறுத்தலாம்’
இதுவே திரைத்துறையினரின் கடும் எதிர்ப்புக்குக் காரணம். இதன் மூலம் மத்திய அரசு சூப்பர் சென்சார் போர்டாக மாற முயற்சி செய்வதாக விமர்சனம் எழுந்திருக்கிறது.