உங்களது நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய பெர்சனல் லோன் எடுக்கலாம்னு நினைக்கிறீங்களா… பெர்சனல் லோன் எடுக்கும்போது கவனிக்க வேண்டியவை என்ன.. எவையெல்லாம் தேவை?
பெர்சனல் லோன்
ஒரு தனிமனிதரை மட்டும் நம்பி, எந்தவொரு பாதுகாப்பு டெபாசிட்களும் இல்லாமல் நிதி நிறுவனங்கள் அளிக்கும் கடன்தான் பெர்சனல் லோன் எனப்படுகிறது. குறிப்பிட்ட வட்டி விகிதத்தில் வழங்கப்படும் பெர்சனல் லோனை ஒருவருக்கு அளிக்கும்போது நிதி நிறுவனங்கள் கணக்கில் எதையெல்லாம் எடுத்துக்கொள்ளும்… பெர்சனல் லோன் வாங்கத் தேவையானவை என்னென்ன… இதைப்பத்திதான் நாம பார்க்கப் போறோம்.
எதெல்லாம் தேவை?
பெர்சனல் லோன் எடுக்க வேண்டும் நினைக்கும் ஒருவர், தனது கிரடிட் ஹிஸ்டரி எனப்படும் பணப் பரிவர்த்தனை நிலவரங்களை சரியாகப் பராமரிப்பது அவசியம். கீழ்க்காணும் காரணிகள் பெர்சனல் லோன் எடுக்கும்போது முக்கியமான பங்கு வகிக்கும்.
கிரடிட் ஸ்கோர்
கிரடிட் ஸ்கோர் என்பது நிதி பரிவர்த்தனை சார்ந்து தனி நபருக்கு அளிக்கப்படும் மூன்று இலக்க மதிப்பெண் போன்ற எண்ணாகும். 300-ல் இருந்து 900 வரை ஒருவருக்கு கிரடிட் ஸ்கோர் அளிக்கப்படும். பெர்சனல் லோனுக்கு நீங்கள் விண்ணப்பித்தால் நிதி நிறுவனங்கள் முதலில் பார்ப்பது உங்கள் கிரடிட் ஸ்கோரைத்தான். கடன் அல்லது நிதி பர்வர்த்தனைகளை சரியாகக் கையாண்டிருப்பவர்களுக்கு 700 – 750 வரையில் கிரடிட் ஸ்கோர் இருந்தால் போதுமானது.
வேலை
தனி நபரை மட்டுமே நம்பி அளிக்கப்படும் கடன் என்பதால், இதற்கு ஒருவர் பார்த்து வரும் வேலை ரொம்பவே முக்கியமானது. மாதாந்திர ஊதியத்தின் அடிப்படையில் உங்களுக்கு எவ்வளவு கடன் கொடுக்கலாம், வட்டி விகிதம் நிர்ணயிக்கலாம் போன்றவற்றை நிதி நிறுவனங்கள் முடிவு செய்யும். மாதாந்திர ஊதியம் பெறும் வேலையில் நீங்கள் இருந்தால், குறைந்தது கடந்த ஆறு மாதங்கள் நீங்கள் ஊதியம் பெற்றிருக்க வேண்டும். இதை அடிப்படையாகக் கொண்டு உங்களின் திரும்பச் செலுத்தும் திறனை நிதி நிறுவனங்கள் முடிவு செய்யும். தொழில் புரிவோராக இருந்தால், உங்கள் நிறுவனத்தின் மூன்றாண்டு கால நிதி நிலைமை, வருமான வரித் தாக்கல் செய்த படிவம் ஆகியவற்றை நிதி நிறுவங்கள் கேட்கும்.
குறைந்தபட்ச வயது
பெர்சனல் லோனுக்கு விண்ணப்பிப்பவரது வயது பொதுவாக 18 முதல் 65 ஆக இருக்க வேண்டும் என்ற நடைமுறையை நிதி நிறுவனங்கள் கடைபிடிக்கின்றன. உங்கள் திரும்பச் செலுத்தும் திறனை அடிப்படையாகக் கொண்டு வெவ்வேறு வங்கிகள்/நிதி நிறுவனங்கள் வயது தொடர்பான விதியை வைத்திருக்கின்றன. லோனுக்கு விண்ணப்பிக்கும் முன்னர் இதை ஒருமுறை செக் செய்து கொள்ளுங்கள்.
திரும்பச் செலுத்தும் காலம்
வீட்டுக் கடனைப் போலல்லாமல், பெர்சனல் லோன் என்பது குறைந்த காலக் கடன் ஆகும். இதனால், கடனைத் திரும்பச் செலுத்த குறைந்தபட்ச கால அளவே வழங்கப்படும். இந்தியாவில் பொதுவாக 12 முதல் 60 மாத கால அளவு வழங்கப்படுகிறது.
கடன் தொகை
பெர்சனல் லோனாக இவ்வளவு தொகையைத் தான் கொடுக்க வேண்டும் என்ற அதிகபட்ச லிமிட் எதுவும் இல்லை. ஆனால், ஊதியம், வயது, வேலை, திரும்ப செலுத்தும் திறன், கால அளவு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு உங்களுக்கு அளிக்கும் அதிகபட்ச கடன் தொகையை வங்கிகள்/நிதி நிறுவனங்கள் முடிவு செய்யும்.
Also Read:
பெர்சனல் லோன் – கவனிக்க வேண்டிய அம்சங்கள்
பெர்சனல் லோன் எடுக்கும் முன்னர் நீங்கள் கவனிக்க வேண்டிய அம்சங்கள் என்னென்ன?
வட்டி விகிதம்
உங்கள் கடனுக்கான வட்டி விகிதம் என்பதை உங்களது கிரடிட் ஸ்கோர், ஊதியம், திரும்பச் செலுத்தும் திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கடன் வழங்கும் நிறுவனங்கள் முடிவு செய்யலாம். பொதுவாக, பெர்சனல் லோனுக்கு 10 – 25% வரை வட்டி நிர்ணயிக்கப்படுகிறது.
புராசஸிங் கட்டணம்
உங்களுக்குக் கடன் வழங்கும் நிறுவனங்கள், அதில் குறிப்பிட்ட தொகையை புராசஸிங் கட்டணமாக விதிக்கும். பொதுவாக, மொத்த கடன் தொகையில் இருந்து 1 – 3% உடன் அதற்கான வரியுடன் சேர்த்து விதிக்கப்படும்.
Pre-Closure Charges
உங்கள் கடனைக் குறிப்பிட்ட காலத்துக்கு முன்பாகவே முடித்துக் கொள்ள நீங்கள் நினைத்தால், அதற்கென Prepayment Charges என்ற வகையில் குறிப்பிட்ட கட்டணத்தை நிதி நிறுவனங்கள்/வங்கிகள் நிர்ணயித்திருக்கின்றன. கடன் வாங்கும் முன்னர் இதுபற்றி தெளிவாகக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். இது, நிறுவனத்துக்கு நிறுவனத்துக்கு மாறுபடும்.
Loan Cancellation Charges
உங்களுக்குக் கடன் அளிக்க குறிப்பிட்ட நிதி நிறுவனம்/வங்கி ஒப்புதல் வழங்கிய பின்னர், அதை நீங்கள் வேண்டாம் என்று முடிவு செய்யும்பட்சத்தில், உங்களிடமிருந்து Loan Cancellation Charges என்ற வகையில் குறிப்பிட்ட கட்டணத்தை வசூலிக்க முடியும். இதுவும் ஒவ்வொரு நிறுவனத்துக்கும் ஏற்றபடி மாறுபடும்.
Monthly Instalment Payment Bounce Charges
கடனுக்காக மாதாந்திர தவணைத் தொகையை (EMI) குறிப்பிட்ட தேதியில் செலுத்த நீங்கள் ஒப்புக் கொண்டிருப்பீர்கள். தவணை தேதி தாண்டி தாமதமாக அதைத் திரும்பச் செலுத்தும் நிலையில், அதற்கு அபராதமாக ஒரு குறிப்பிட்ட தொகையை நீங்கள் கொடுக்க வேண்டி இருக்கும். இதுவும் நிறுவனத்துக்கு ஏற்றபடி மாறுபடும்.
பெர்சனல் லோன் – வகைகள்
- கல்விக் கடன்
- மருத்துவக் கடன்
- சுற்றுலாக் கடன்
- ஓய்வூதியத்தை அடிப்படையாகக் கொண்ட கடன்
- திருமணத்துக்கான கடன்
Also Read -Home Loan: வீட்டுக் கடன் வாங்கத் திட்டமிடுகிறீர்களா… இதையெல்லாம் மறக்காம செக் பண்ணிடுங்க!