ஜெயலலிதா இறந்த அன்று என்ன நடந்துச்சு?

தமிழக முதலமைச்சராக ஆறு முறை பதவி வகித்த ஜெ.ஜெயலலிதா, கடந்த 2016 ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி இரவு 11.30 மணிக்கு உயிரிழந்ததாக அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதா இறப்பு குறித்த நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில், டிசம்பர் 4-ம் தேதி மதியம் 3.50 மணியளவிலேயே அவர் இறந்திருக்க வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்பட்டிருப்பது புதிய விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெயலலிதா இறந்தபோது என்ன நடந்தது?

Jayalalithaa
Jayalalithaa

சென்னை கிரீன்வேஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் 2016 செப்டம்பர் 22-ம் தேதி இரவு 10.30 மணிக்கு அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் உள்ளிட்ட சாதாரண பிரச்னைகளால் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், அவர் குறிப்பிட்ட காலத்துக்கு மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சைபெற வேண்டும் என்ற முடிவுக்கு செப்டம்பர் இறுதிவாக்கிலேயே வந்தனர். ஆரம்பத்தில் அப்போலோ வாசலில் பெருமளவில் செய்தியாளர்கள் தினசரி கூடுவதை வாடிக்கையாக வைத்திருந்தனர். அ.தி.மு.க-வைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் தினசரி ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அப்டேட் சொல்வதும், அது நாள் முழுவதும் செய்தி சேனல்களில் தொடர்ச்சியாக ஒளிபரப்பப்படுவதுமாக இருந்தது. நாட்கள் செல்லச் செல்ல அப்போலோ வாசலில் மீடியாவினரின் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது. யாரேனும் முக்கியமான தலைவர்கள் வந்தால் மட்டுமே வருவதை பல மீடியாக்கள் வழக்கமாக்கிக் கொண்டன.

நீண்டகாலமாகவே நீரிழிவு நோய், உடல் எடை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா, அதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் இரண்டு ஆண்டுகளாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையிலேயே பரிசோதனைகளையும் சிகிச்சைகளையும் மேற்கொண்டு வந்திருக்கிறார். ஆனால், 2016 செப்டம்பர் 22-ம் தேதி திடீரென அவர் மயங்கிவிழுந்த நிலையில், ராமச்சந்திரா மருத்துவமனை தூரமாக இருக்கவே அருகில் இருந்த அப்போலோவில் அவரை அனுமதித்தனர். சிகிச்சையில் இருந்த நாட்களில் மருத்துவர்களின் கட்டுப்பாட்டை மீறி தனக்குப் பிடித்தமான மலை வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம், இனிப்பு வகைகள் உள்ளிட்டவைகளை அவர் தொடர்ந்து சாப்பிட்டு வந்ததாலேயே, உடல்நலன் குன்றியதாகவும் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.  

Justice Arumugasamy
Justice Arumugasamy

2016 டிசம்பர் 4-ம் தேதி ஜெயலலிதா உடல்நிலை பற்றி அ.தி.மு.க-வின் முக்கியமான தலைவர் ஒருவர் ஊடகங்களில் கொடுத்த பேட்டி வைரலானது. அவர் யார்… என்ன சொன்னார்னு தெரியுமா… அதற்கான பதிலை வீடியோவோட கடைசில சொல்றேன்.

ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு 70 நாட்களைக் கடந்த நிலையில், 2016 டிசம்பர் 4-ம் தேதியான ஞாயிற்றுக்கிழமை பரபரப்பில்லாமலேயே விடிந்தது. ஞாயிற்றுக்கிழமை என்பதால், ஊடகவியலாளர்கள் மத்தியிலும் அமைதியாகவே கழிந்தது. திடீரென மாலை 6 மணிக்கு மேல் பத்திரிகையாளர்களின் வாட்ஸப் குழுக்கள் பரபரப்பாகின. ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமானதாக ஒரு தகவல் வெளியாகவே, அப்போலோ வாசலில் லைவ் கேரவன்கள் குவிந்தன. அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்திருக்கலாம் என்கிற ஒரு உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியானதே இந்தப் பரபரப்புக்கெல்லாம் காரணம். ஆனால், மருத்துவமனை தரப்பிலோ, அதிமுக தரப்பிலோ எந்தவொரு எதிர்வினையும் ஆற்றப்படவில்லை. 8 மணிக்கு மேல் அப்போலோ வாசலில் அதிமுகவினரும் குவியத் தொடங்கினர்.

இப்படியான சூழலில் இரவு 9.30 மணியளவில் அப்போலோ மருத்துவமனை சார்பில் செய்திக் குறிப்பு ஒன்று வெளியானது. அதில், `கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இன்று மாலையில் திடீரென இதயத் துடிப்பு முடக்கம் (Cardiac arrest) ஏற்பட்டது. அவருக்கு அவசரகால சிகிச்சை நிபுணர்கள், இதய நோய் நிபுணர்கள், நுரையீரல் நோய் நிபுணர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்’ என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மறுநாளான 2016 டிசம்பர் 5-ம் தேதி காலையில் அப்போலோ சார்பில் வெளியிடப்பட்ட மற்றொரு செய்திக் குறிப்பில் ஜெயலலிதாவுக்கு உயிர்காக்கும் எக்மோ கருவி பொருத்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டிருந்தது. ஜெயலலிதாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக சில செய்தி சேனல்களில் செய்திகள் வெளியாகின. ஆனால், அதில் உண்மையில்லை என்பது பின்னர் தெரியவந்தது. இதையடுத்து ஜெயலலிதா உடல்நிலை பற்றி சோசியல் மீடியாக்கள் விவாதம் நடந்தது. மருத்துவமனை தரப்பில் இருந்து சிலர், அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகப் பதிவிட்டது இந்த விவாதங்களைத் தீவிரப்படுத்தியது.

அப்போலோ மருத்துவமனை
அப்போலோ மருத்துவமனை

அரசுப் பேருந்துகளைத் தவிர பெரும்பாலான வாகனங்கள் எதுவும் இன்றி, அன்றைய தினம் சென்னை மாநகர சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன. லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே அனுப்பியிருந்த மெயிலில், ஜெயலலிதாவின் உடல்நிலையைக் காப்பாற்ற தன்னால் முடிந்த அளவு முயற்சிகளை எல்லாம் செய்துவிட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். அதன்பிறகு மருத்துவனை தரப்பிலும் மாலை வரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. மாலை 6 மணிக்கெல்லாம் போக்குவரத்து முற்றிலுமாகக் குறைந்தது. பெரும்பாலான கடைகளும் அடைக்கப்பட்டன. இந்த சூழலில் ஜெயலலிதா 6 மணியளவில் பிரபலமான ஒரு செய்தித் தொலைக்காட்சி ஜெயலலிதா மறைந்துவிட்டதாக பிரேக்கிங் நியூஸ் போட்டது. அதிமுக தொண்டர்கள் கதறி அழத் தொடங்கினர். ஆனால், ஜெயலலிதா உயிர்காக்கும் கருவிகளின் உதவியோடு பிழைத்திருப்பதாக அப்போலோ தரப்பில் ஊடக செய்திக் குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. இதையடுத்து, செய்தி சேனல் தரப்பில் அந்த செய்தி ஒளிபரப்புவதை நிறுத்தினார்கள்.

ஆனால், அதன்பிறகு அப்போலோவில் திடீரென போலீஸார் குவிக்கப்பட்டத் தொடங்கி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதேபோல், சென்னை மாநகரம் உள்பட தமிழகம் முழுவதும் பாதுகாப்புக் கெடுபிடிகள் அதிகப்படுத்தப்பட்டன. மருத்துவமனையில் வாயிலில் கூடியிருப்பவர்களை ஒழுங்குபடுத்துவதற்காக கயிறுகள் கட்டப்பட்டன. இதனால், என்ன நடந்திருக்கும் என்பதை ஒருவாறு எல்லோராலும் கணிக்க முடிந்தது என்றுதான் சொல்ல வேண்டும். நேரம் செல்ல செல்ல மருத்துவமனை தரப்பிலிருந்து என்ன செய்தி வருமோ என தமிழகமே காத்திருந்தது. இரவு 11.45 மணியளவில் அப்போலோ தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக செய்தியறிக்கை வெளியானது. அதில், `தமிழக முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா இன்று (5.12.16) இரவு 11.30 மணி அளவில் இயற்கை எய்தினார் என்பதை சொல்லவியலா துயரத்தோடு பகிர்ந்துகொள்கிறோம்’ என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Also Read – ஜெயலலிதா மரணம்: வார்டிலேயே ஆபரேஷன் நடந்ததா – ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை என்ன சொல்கிறது? #BTS

அதன்பிறகு மருத்துவமனையில் இருந்து அமைச்சர்கள், சசிகலா என ஒவ்வொருவராக வெளியேறத் தொடங்கினர். ஜெயலலிதா உடல் ஆம்புலன்ஸ் மூலம் அவரது போயஸ் கார்டன் இல்லத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. இந்தசூழலில், தமிழகத்தின் புதிய முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டதாகவும், அவருக்கு ஆளுநர் வித்யாசாகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்ததாகவும் அதிகாலை 2 மணியளவில் ஆளுநர் மாளிகையில் இருந்து செய்தியறிக்கை ஒன்று ஊடகங்களுக்குப் பகிரப்பட்டது.

Jayalalithaa
Jayalalithaa

டிசம்பர் 6-ம் தேதி மாலை 4.30 மணியளவில் ஜெயலலிதாவின் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர், வாலஜா சாலை வழியாக எம்.ஜி.ஆர் நினைவிடம் கொண்டு செல்லப்பட்ட ஜெயலலிதாவின் உடலுக்கு சசிகலா இறுதிச் சடங்குகள் செய்தார். 2016 டிசம்பர் 5-ம் தேதி இரவு 7 மணியளவில் எம்.ஜி.ஆர் சமாதிக்குப் பின்புறம் உள்ள இடத்தில் ஜெயலலிதாவின் உடல் புதைக்கப்பட்டது.

2016 டிசம்பர் 4-ம் தேதி காலையில் அப்போலோ வாசலில் அதிமுகவைச் சேர்ந்த மூத்த தலைவர் பொன்னையன் ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்தார். அப்போது அவர், `ஜெயலலிதா நன்றாகப் பேசும் அளவுக்குக் குணமடைந்துவிட்டார். ஆட்சி நடத்துவதற்குத் தேவையான உத்தரவுகளையும் அவர் அதிகாரிகளுக்குப் பிறப்பித்து வருகிறார். எய்ம்ஸ் மருத்துவர் குழுவினர் அவர் முழுமையாகக் குணமடைந்துவிட்டதை உறுதி செய்திருக்கிறார்கள். இப்போது அவருக்கு உடற்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அது முடிந்ததும் ஜெயலலிதா வீடு திரும்புவார்’ என்று சொல்லியிருந்தார். இந்த வீடியோ அன்றைய நாளில் பல செய்தித் தொலைக்காட்சிகளில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்பட்டது.

ஜெயலலிதா இறப்பு பற்றி ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கை வெளியாகியிருக்கிறது. அதைப்பத்தி என்ன நினைக்கிறீங்க.. மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top