கோவையில் 1997-ம் ஆண்டு நவம்பர் 29-ல் காவலர் ஒருவர் மர்ம நபர்களால் கொல்லப்பட்டதும், அதையடுத்து நடந்த கலவரங்களும் தமிழக வரலாற்றில் தவிர்க்க முடியாத கறும்புள்ளியாக மாறிப்போனது. 1997 கோவை கலவரத்தில் என்ன நடந்தது?
அரசியல் வளர்ச்சி
திராவிட இயக்கங்கள் எழுச்சிபெற்ற தமிழகத்தில் 1990-களின் இறுதியில் மதவாத இயக்கங்கள் மெல்லக் காலூன்றத் தொடங்கியிருந்தன. கேரளாவிலும் தமிழகத்திலும் ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளும், அல்-உம்மா போன்ற இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்களும் கிளை பரப்பும் முயற்சியில் ஈடுபட்டன. அல் – உம்மா அமைப்பின் மாநில நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டது தொடர்பாக அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவருக்கும் இடையே பிரச்னை எழுந்தது. இந்த சூழ்நிலையில், கோட்டைமேடு பகுதியில் போக்குவரத்துக் காவலர் செல்வராஜ் கத்தியால் குத்தப்பட்டு மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் ஒரு இஸ்லாமிய இளைஞர் என இந்து அமைப்புகள் குற்றம்சாட்டின.

இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கோட்டைமேடு பகுதியில் இருந்த இஸ்லாமிய வியாபாரிகளின் கடைகளைப் போக்குவரத்துக் காவலர்கள் சூறையாடினர். அவர்களோடு இணைந்து இஸ்லாமியர்களின் கடைகளை இந்து அடிப்படைவாதிகளும் அடித்து நொறுக்கினர். கோவையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரும் காவல் கட்டுப்பாட்டு அறையில் பணியில் இருந்த காவலர்களும் பணி செய்ய மறுத்தனர். காவலரின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு காவலர்களின் குடும்பத்தினர் நவம்பர் 30-ல் கமிஷ்னர் அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர்.
மதக்கலவரம்

இந்த விவகாரத்தை அடுத்து கோவையின் பல்வேறு பகுதிகளிலும் இரு சமுதாயத்தினர் மோதிக்கொண்டனர். கற்கள், ஆயுதங்களால் மாறி மாறித் தாக்கிக் கொண்டனர். கோயில்களும், மசூதிகளும் சேதப்படுத்தப்பட்டன. பல இடங்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 இஸ்லாமிய இளைஞர்கள் உயிரிழந்தனர். பலர் உயிருடன் எரிக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட காவலர் செல்வராஜின் உடல் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனை வாயிலில் பெரும் கூட்டம் திரண்டது. அங்கு வந்த தி.மு.க எம்.எல்.ஏ சி.டி.தண்டபாணியும் அவரது மகனும் மருத்துவமனை வாயிலில் திரண்டிருந்த கூட்டத்தால் தாக்குதலுக்கு உள்ளாகினர். கலவரம் கட்டுக்கடங்காமல் சென்றதை அடுத்து நவம்பர் 30-ம் தேதி இரவில் சிறப்பு அதிரடிப் படையினர் களமிறக்கப்பட்டனர். டிசம்பர் 4-ல் கலவரம் ஓரளவுக்குக் கட்டுக்குள் வந்தது. இஸ்லாமியர்கள் 18 பேர் இந்துக்கள் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். இந்தக் கலவரத்தில் மட்டும் பொது, தனியார் சொத்துகள் என ரூ.500 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டதாகக் கணக்கிடப்பட்டது.
1998 கோவை குண்டுவெடிப்பு

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து 1998 பிப்ரவரி 14-ல் கோவையில் 11 இடங்களில் அல் – உம்மா தீவிரவாத அமைப்பினரால் குண்டுவெடிப்புத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. மோட்டார் சைக்கிள்கள், கார்கள், சைக்கிள்கள் உள்ளிட்டவைகளில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்ததில், 58 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 12 கி.மீ சுற்றளவில் வெடித்த குண்டுகளால் 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இது பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே.அத்வானியைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலாகக் கருதப்பட்டது. அரசு சார்பில் அமைக்கப்பட்ட நீதிபதி பி.ஆர்.கோகுல கிருஷ்ணன் தலைமையிலான விசாரணை கமிஷன் குண்டுவெடிப்பின் பின்னணியில் அல்-உம்மா தீவிரவாத அமைப்பு இருப்பதாக விசாரணை அறிக்கை தாக்கல் செய்தது. கோவை மதக் கலவரங்களும், அதைத் தொடர்ந்து நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களும் அமைதிப் பூங்காவான தமிழகத்தின் வரலாற்றில் அழிக்க முடியா கறுப்புப் பக்கங்கள்.