இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிகவும் கொடூரமான பாதிப்பை ஏற்படுத்தி வருது. அதுவும் கடந்த சில வாரங்களாக வெளிவரும் தகவல்கள் மக்களை மிகுந்த அச்சத்துக்கு உள்ளாக்கியிருக்கு. கொரோனாவின் கொடூரமான முகத்தை வெளிக்காட்டும் புகைப்படங்களும் வீடியோக்களும் சோஷியல் மீடியாவில் பரவலாக பகிரப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கு. குறிப்பாக ஆக்ஸிஜன் சிலிண்டருக்காக காத்திருக்கும் உறவினர்களின் புகைப்படங்கள், டெல்லியில் இரவு ,பகலாக எரிந்துகொண்டிருக்கும் சடலங்களின் புகைப்படங்கள் மற்றும் ஆம்புலன்ஸில் இருந்து கீழே விழும் சடலங்கள் என கொரோனா தொடர்பாக வெளிவரும் செய்திகள் அனைத்துமே மக்களை கவலைக்கு உள்ளாக்கியது. இவற்றைப் பற்றி விரிவாக தெரிஞ்சுக்கலாம் வாங்க..
காத்திருக்கும் உறவினர்கள் :
உலகத்துல கொரோனா வைரஸால அதிகளவு பாதிக்கப்பட்ட நாடுகளை விட ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கைல இந்தியா முதலிடத்துக்கு வந்தது. மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், குஜராத், ஹரியானா மற்றும் டெல்லி என பல மாநிலங்களிலும் மருத்துவமனை படுக்கைகள் நிரம்பி வழிஞ்சுது. ஆக்ஸிஜன் கிடைக்காம மக்கள் மூச்சுத் திணறலோட மருத்துவமனையோட வாசல்கள்லயும் ஆம்புலன்ஸ்கள்லயும் காத்துகிட்டு இருந்தாங்க. சில மாநிலங்கள்ல தங்களுடைய உறவினர்களின் தேவைக்காக சிலிண்டரோட மக்கள் பிராண வாயுவை நிரப்ப ஆக்ஸிஜன் ஃபில் பண்ணும் நிலையங்களின் முன்னால காத்து இருந்தாங்க.
பல மருத்துவமனைகள்ல நோயாளிகளுக்கு இடமில்லைனு மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டுச்சு. குறிப்பா, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில இருக்கும் அவசர சிகிச்சைப் பிரிவு ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமா தற்காலிகமா மூடப்படுதுனு மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டுச்சு. அதாவது, புதிய நோயாளிகளுக்கு இடமில்லைனு தகவல் தெரிவிச்சிருந்தாங்க. ஆக்ஸிஜன் கிடைக்காம இருப்பதால, உயிரிழப்பு எண்ணிக்கைகளும் இந்தியாவுல தொடர்ந்து அதிகரிச்சுட்டு வருது. நீதிமன்றங்களும் மத்திய அரசிடன் ஆக்ஸிஜன் பற்றாக்குறை தொடர்பாக கடுமையான கேள்விகளை எழுப்பி வருது. ஆனால், மத்திய அரசு அடுத்த சில வாரங்களுக்கு பாதிப்பு மிகவும் கடுமையா இருக்கும்னு நீதிமன்றத்துல தெரிவிச்சிருக்காங்க. ஆக்ஸிஜன் பற்றாக்குறையை தீர்க்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகுதுனு பொருத்திருந்துதான் பாக்கணும்!
டெல்லியில் கொத்தாக எரியும் சடலங்கள் :
மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் அதிகப்படியா கொரோனா வைரஸ் மரணங்கள் நிகழ்ந்திருக்கு. அதற்கு அடுத்ததா தேசிய தலைநகரான டெல்லியில நிறைய பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால இறந்திருக்காங்க. தொடர்ந்து நிகழும் மரணங்களால அனைத்து மயானங்களிலும் தொடர்ந்து சடலங்கள் எரிக்கப்பட்டும் புதைக்கப்பட்டும் வருகின்றன. எனினும், மரணங்கள் அதிகமாக இருப்பதால மயானங்கள்ல இடம் கிடைக்காம உறவினர்களுக்கு இறுதி சடங்கு செய்ய பொது மைதானங்கள்ல உறவினர்களின் சடலங்களை தகனம் செய்து வர்றாங்க. அதுக்கும் சிலர் இரண்டு நாள்கள் காத்திருக்க வேண்டிய சூழலும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வளவு துயரமான சம்பவம் இல்ல இது?!
ஆம்புலன்ஸில் இருந்து விழுந்த சடலம் :
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள விடிசா பகுதியில கொரோனா தொற்றால் பலர் உயிரிழந்து வர்றாங்க. வைரஸால் பாதிப்படைந்து உயிரிழந்ததால சடலக்களை உறவினர்களிடம் ஒப்படைக்காமல் மருத்துவமனை நிர்வாகமே தகனம் செய்து வருகின்றன. அவ்வகையில, மருத்துவமனையில் இருக்கும் சடலங்களை எடுத்துக்கொண்டு ஆம்புலன்ஸ் ஒன்று வெளியே வருகிறது. ஆம்புலன்ஸ் மருத்துவமனை வாயிலில் திரும்பும்போது பக்கவாட்டு கதவு திறந்து உள்ளிருந்த சடலம் வெளியே விழுந்தது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாவுல வெளியாகி அதிகமான நபர்களால் பகிரப்பட்டது. பார்க்கவே எவ்வளவு கொடூரமா இருக்குல!