இந்தியா முழுவதும் கடந்த சில நாள்களாக, நாகாலாந்தில் சுரங்கத் தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பான தலைப்பாக மாறி பேசுபொருளாகியுள்ளது. சமூக வலைதளங்கள் முதல் பாராளுமன்றம் வரை இந்த சம்பவத்துக்கு எதிராக பொதுமக்கள் குரல்கொடுத்து வருகின்றனர். நாகாலாந்தில் என்ன நடந்தது? காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை என்ன? கொல்லப்பட்டவர்கள் யார்? இதுதொடர்பாக உள்துறை அமைச்சர் அளித்த விளக்கம் என்ன? பிரபல அரசியல் தலைவர்கள் இந்த சம்பவம் தொடர்பாக என்ன பேசியுள்ளனர்? சட்டத்தை வாபஸ் பெற கோரிக்கை விடுக்கும் மக்கள்… அந்த சட்டம் என்ன?, இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தால் நாகலாந்தில் நின்றுபோன பாரம்பரிய திருவிழா பற்றி தெரியுமா? இந்த கேள்விகளுக்கு இந்த கட்டுரையின் மூலம் விடையை தெரிந்துகொள்ளலாம்.

நாகாலாந்தில் என்ன நடந்தது?
நாகாலாந்து மாநிலம், மோன் மாவட்டத்தில், ஒடிங்க் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமம் வழியாக பயங்கரவாதிகள் வருவதாக ராணுவத்தின் 21-வது துணை சிறப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கடந்த சனிக்கிழமை ராணுவத்தினர் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக சென்ற நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் வாகனத்தை தீவிரவாதிகள் செல்வதாகக் கருதி துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் வண்டியில் இருந்த தொழிலாளர்கள் 6 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தால் கோபமடைந்த அப்பகுதி மக்களுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலிலும் ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதிலும் பொதுமக்கள் 7 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் மட்டும் சுமார் 13 பேர் உயிரிழந்துள்ளனர். பத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ராணுவ வீரர் ஒருவரும் உயிரிழந்தார். பல ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.

காவல்துறையின் அறிக்கை என்ன?
ஒடிங்க் கிராமத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக அம்மாநில காவல்துறையினர் வெளியிட்ட அறிக்கையில், “மோன் மாவட்டம் திரூ கிராமத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் 8 பேர் ஒடிங்க் கிராமத்துக்கு வந்தவனர். அவர்கள் மீது ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினர். துப்பாக்கி சூடு நடத்துவதற்கு முன்பு வாகனத்தில் வந்தவர்கள் பயங்கரவாதிகளா அல்லது பொதுமக்களா என தெரிந்துகொள்ள ராணுவத்தினர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இந்த சம்பவத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு கிராம மக்கள் வெளியே வந்துள்ளனர். அப்போது இறந்தவர்களின் சடலங்களை மறைக்கும் முயற்சியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், ராணுவத்தினரின் வாகனங்களுக்கு தீ வைத்தனர். கிராம மக்களுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 7 பேர் உயிரிழந்தனர். ராணுவத்தினரின் செயல்களை நேரில் கண்ட சாட்சிகள் உள்ளன” என்று தெரிவித்துள்ளனர். காவல்துறையினர், ராணுவத்தினர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவும் செய்துள்ளனர்.

கொல்லப்பட்டவர்கள் யார்?
ராணுவத்தினரின் துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேரும் கோன்யாக் என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். ஒடிங்க் கிராமத்தில் கோன்யாக் பழங்குடியின மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இதுதொடர்பாக கோன்யாக் பழங்குடி மக்களின் தலைவர் பேசும்போது, “இறந்தவர்கள் அனைவரும் இங்கிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றி வருபவர்கள். ஒவ்வொரு சனிக்கிழமையும் இவர்கள் ஊருக்கு வந்து செல்வது வழக்கம். அப்படி அவர்கள் வந்தபோதுதான் ராணுவத்தினர் அவர்களை படுகொலை செய்துள்ளனர்” என்றுகூறி தனது கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார். இவர்களின் உடலை ஒரே இடத்தில் அதிகாரிகள் அடக்கம் செய்துள்ளனர். இவர்களை உடலை அடக்கம் செய்வதில் தாமதம் ஏற்பட்டதால் கோன்யாக் அமைப்பு அலுவலகத்தை பொதுமக்கள் சூறையாடினர்.

கோன்யாக் அலுவலகத்தைத் தொடர்ந்து தம்னன் பகுதியில் அமைந்துள்ள அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் துணை ராணுவப் படையின் முகாமுக்குச் சென்ற பொதுமக்கள் அங்கிருந்த கட்டடங்களை நோக்கி தாக்குதல் நடத்தினர். நூற்றுக்கணக்கான மக்கள் இங்கு இருந்ததால் மக்களை அடக்க முடியாமல் அதிகாரிகள் திணறியுள்ளனர். சூழலை கட்டுக்குள் கொண்டுவர மோன் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனினும், அப்பகுதியைச் சுற்றி பதற்றம் தொடர்ந்து வருகிறது.
உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் விளக்கம்:
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் பேசுகையில், “சம்பவம் நடந்த இடத்தில் சனிக்கிழமை இரவு பயங்கரவாதிகள் நடமாட்டம் இருந்ததாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து அங்கு சென்றுள்ளனர். அவ்வழியே வந்த வாகனத்தை நிறுத்தினர். ஆனால், வாகனம் நிற்காமல் சென்றதால் பயங்கரவாதிகள் எனக் கருதி துப்பாக்கி சூடு நடத்தினர். பின்னர், சோதனை நடத்தியதில் அவர்கள் தவறாக துப்பாக்கி சூடு நடத்தியது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் மேலும் சில பொதுமக்கள் பலியாகினர். நாகலாந்தின் தற்போதைய நிலை பதற்றமானதாக இருந்தாலும் கட்டுக்குள் உள்ளது. இதுதொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஒரு மாதத்துக்குள் முழு அறிக்கையையும் தாக்கல் செய்வார்கள். ராணுவத்தினர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அப்பாவி மக்களின் இறப்புக்கு மன்னிப்பு கோரியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த துரதிஷ்டவசமான சம்பவத்துக்கு ஒன்றிய அரசு வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறது” என்றார்.

பிரபல அரசியல் தலைவர்களின் கருத்து :
நாகாலாந்து முதல்வர் நைபியு ரியோ இந்த சம்பவம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், ”மோன் மாவட்டத்தில் உள்ள ஓடிங்க் பகுதியில் பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது. இந்த சம்பவத்தில் காயமடைந்த மக்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும். பொதுமக்களின் படுகொலைக்கு சட்டரீதியில் நீதி பெற்றுத்தரப்படும். எனவே, அனைத்து தரப்பினரும் அமைதியாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், நாகலாந்து சம்பவம் மிகவும் கவலையளிக்கிறது. தங்களது உறவுகளை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இதுதொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும். பாதிப்படைந்த மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். காங்கிரஸைச் சேர்ந்த ராகுல்காந்தி, “நாட்டில் சொந்த மக்களை பாதுகாக்க வேண்டிய உள்துறை அமைச்சகம் என்ன செய்து கொண்டிருக்கிறது?” என்று கேள்வியெழுப்பினார்.

சட்டத்தை வாபஸ் பெற சொல்லும் மக்கள்:
நாகாலந்து, அஸ்ஸாம், மணிப்பூர் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் அமலில் உள்ள ராணுவ படைகளுக்கான சிறப்பு அதிகார சட்டத்தை வாபஸ் பெற சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் கோரிக்கைவிடுத்து வருகின்றனர். இந்த சட்டத்தின்படி பயங்கரவாத இயக்கங்களை ஒடுக்குவதற்காக ராணுவத்துக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சட்டத்தை ராணுவத்தினர் தவறாக பயன்படுத்தப்படுவதால், அந்த அதிகாரத்தை ரத்து செய்ய மனித உரிமை அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றன. தற்போது பொதுமக்களும் இந்த சட்டத்துக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். சமூக வலைதளங்கள் வழியாகவும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இந்த சட்டம் 1958-ம் ஆண்டு அவசர சட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதே இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. அதே ஆண்டில் ஜனாதிபதி ஒப்புதலையும் பெற்றது. இந்த சட்டம் தொடக்கத்தில் அருணாச்சல பிரதேசம், அஸ்ஸாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களுக்காக உருவாக்கப்பட்டது. பின்னர், சில மாநிலங்களில் இருந்து நீக்கப்பட்டன.
நாகாலாந்தில் நின்றுபோன பாரம்பரிய திருவிழா :
நாகாலாந்து மாநிலத்தில் பழங்குடியின மக்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்று, ஹார்ன்பில் திருவிழா. ஆண்டுதோறும் டிசம்பர் முதல் வாரம் இந்த திருவிழா நடைபெறும். இந்த ஆண்டும் டிசம்பர் முதல் வாரம் இந்த திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது. ஆனால், கோன்யாக் பழங்குடி மக்களின் படுகொலை சம்பவம் பழங்குடியின மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால், முதலில் சில பழங்குடி அமைப்புகள் இந்த விழாவில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தன. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு விழா மொத்தமாக ரத்து செய்யப்பட்டது. நாகாலாந்து பழங்குடியின மக்கள் வாழ்வில் இந்த டிசம்பர் மறக்க முடியாத நாளாக மாறியுள்ளது. இதுதொடர்பாக பழங்குடி அமைப்பினர் பேசும்போது, “எங்களது பிள்ளைகளை இந்திய ராணுவம் சுட்டுப் படுகொலை செய்து ரத்தத்தில் மிதக்க விட்டுள்ளது. இந்த சூழலில் நாங்கள் ஆடி, பாடி கொண்டாட முடியுமா. எனவே, இந்த விழாவை புறக்கணிக்கிறோம்” என தெரிவித்துள்ளனர்.

ராணுவ விசாரணை :
கோன்யாக் பழங்குடி மக்கள் படுகொலை சம்பவம் தொடர்பாக ராணுவ நீதிமன்றத்தில் தலைமை அதிகாரிகள் தலைமையில் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

எவ்வளவு விசாரணைகள் மேற்கொண்டாலும், என்ன ஆறுதல் கூறினாலும், இந்திய வரலாற்றில் அதுவும் பழங்குடியின மக்கள் மத்தியில் இனி டிசம்பர் 4 கருப்பு தினமாகவே இருக்கும்!
Also Read : Coonoor Helicopter Crash: CDS பிபின் ராவத் உள்பட 14 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் விபத்து… என்ன நடந்தது?