Bharat Net திட்டம் என்பது இந்தியாவில் இருக்கும் கிராம பஞ்சாயத்துகள் அனைத்துக்கும் இணைய வசதி அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட திட்டமாகும். இந்தத் திட்டத்தில் இரண்டாவது கட்டமாக தமிழகத்தில் இருக்கும் 12,524 கிராமங்களுக்கு இண்டர்நெட் வசதி கொடுக்கப்பட இருக்கிறது.
Bharat Net திட்டம்
மருத்துவம், கல்வி மற்றும் இ-கவர்னன்ஸ் எனப்படும் மின் ஆளுகை ஆகியவைகளை நாடு முழுவதும் இருக்கும் அனைத்து கிராமங்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டது. ஆகஸ்ட் 15, 2020-ல் இருந்து 1,000 நாட்களில் நாடு முழுவதும் இருக்கும் 6 லட்சம் கிராமங்களில் இணைய வசதி கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
இந்தத் திட்டத்தை இரண்டாவது கட்டமாக விரிவுபடுத்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த ஜூன் 30-ம் தேதி ஒப்புதல் அளித்தது. விரிவுபடுத்தப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், நாட்டின் 16 மாநிலங்களில் இருக்கும் கிராமங்களில் இணைய வசதி கொடுக்கப்பட இருக்கிறது. மொத்தம் 9 பேக்கேஜ்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும் இந்தத் திட்டத்தில் முதல்முறையாக தனியார் துறையின் பங்கேற்புக்கும் இப்போது அனுமதிக்கப்பட்டிருக்கிறது. சுமார் 30 ஆண்டுகளில் ரூ.95,000 கோடி முதல் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட இருக்கும் இந்தத் திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.19,041 கோடியை ஒதுக்கியிருக்கிறது. தனியார் துறையைச் சேர்ந்த எந்தவொரு நிறுவனமும் 4 பேக்கேஜ்களுக்கு மேல் தேர்வு செய்ய முடியாது என்று வரையறுக்கப்பட்டிருக்கிறது. 2011ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஓடிடி அபார வளர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கும் இந்த சூழலில் அடிப்படை வசதிகளைத் தாண்டியும் பொழுதுபோக்கு அம்சத்துக்காகவும் நாட்டின் ஒவ்வொரு கிராமத்துக்கும் இணைய வசதி அவசியம் என்ற நிலை ஏற்பட்டிருப்பதாக மத்திய தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
செப்டம்பர் 2020 கணக்கின்படி பாரத்நெட் பேஸ் 2-வில் நாடு முழுவதும் 23,000 கிராம பஞ்சாயத்துகளில் சுமார் 1.5 லட்சம் கிலோமீட்டர் தூரத்துக்கு ஃபைபர் ஆப்டிக் கேபிள் வசதி மூலம் இண்டர்நெட் வசதி அளிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் இருக்கும் 6,25,000 கிராமங்களில் தலா 2 – 5 வைஃபை ஹாட்ஸ்பாட்டுகள் உருவாக்கப்பட திட்டமிடப்பட்டிருக்கிறது. மொத்தம், 7,00,000 வைஃபை ஹாட் ஸ்பாட்டுகள் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தபட்சம் 2,50,000 கிராமங்களில் 100 Mbbs வேகம் கொண்ட இணைய இணைப்பு கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தின் முதல் பேஸில் 13 மாநிலங்களைச் சேர்ந்த 10,000 கிராமங்களில் இணைய வசதி கொடுக்கும் பணிகள் கடந்த 2017 டிசம்பரில் நிறைவு பெற்றது.
தமிழகத்தின் நிலை
பாரத் நெட் பேஸ் 2-வின் கீழ் தமிழகத்தின் 12,524 கிராமங்கள் இணைய வசதியைப் பெறவிருக்கின்றன. இதற்கான மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்குமான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 26-ல் கையெழுத்தானது. தமிழகத்தின் கடலோர கிராமங்கள் தவிர மற்ற கிராமங்களில் மின்சார வாரியத்தின் 11/33 KV கேபிள் மூலமும் கடலோர கிராமங்களில் இதற்காக பூமிக்கு அடியில் புதிதாக ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் மூலமும் இணைய வசதி அளிக்கப்பட இருக்கிறது. இதற்காக ரூ.1,230.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
thank you sir