“கடந்த ஆண்டு ஐபிஎல் தொடங்கும் முன்பு 5-6 மாதங்கள் கிரிக்கெட் விளையாடாமல் இருந்தோம். அதேபோல், நீண்ட நாட்கள் க்வாரண்டீனில் இருந்ததும் ஒரு காரணம்’’ – தோனி.
சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணிக்கெதிரான போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தது. டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் நடந்த போட்டியில் வெற்றியைப் பதிவு செய்த சி.எஸ்.கே, ஐபிஎல் 2021 சீசனில் தொடர்ந்து ஐந்தாவது வெற்றியைப் பதிவு செய்தது. கடந்தாண்டு 14 போட்டிகளில் 12 பாயிண்டுகளை மட்டுமே பெற்ற தோனி தலைமையிலான சி.எஸ்.கே, இந்த சீசனில் முதல் 6 போட்டிகளில் 10 பாயிண்டுகளைப் பெற்றிருக்கிறது.

டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த எஸ்.ஆர்.ஹெச்சுக்கு பேட்ஸ்மேன்கள் மெதுவான தொடக்கத்தையே கொடுத்தனர். கேப்டன் வார்னர் அரைசதமடித்தாலும், அவரது கரியரில் மிகவும் ஸ்லோவான ஃபிஃப்டி இதுதான். 50வது பந்தில் அரைசதமடித்தார் அவர். அதேபோல், டி20 கரியரில் 10,000 ரன்கள் என்ற மைல்கல்லையும் வார்னர் இந்தப் போட்டியில் எட்டினார். ஃபார்ம் இல்லாமல் தவித்து வந்த மணீஷ் பாண்டே இந்தப் போட்டியில் அரைசதம் அடித்து அசத்தினார். ஆனால், அது எஸ்.ஆர்.ஹெச் பெரிய ஸ்கோரை எட்ட உதவவில்லை. மிடில் ஓவர்களில் வார்னர் – மணீஷ் பாண்டே மெதுவாக ரன் சேர்த்தது அந்த அணிக்குப் பெரும் பின்னடைவாக அமைந்தது.
கடைசி ஓவர்களில் கேன் வில்லியம்ஸன் அதிரடி காட்டவே, எஸ்.ஆர்.ஹெச் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. வில்லியம்ஸன் 10 பந்துகளில் 26 ரன்களும், கேதர் ஜாதவ் 4 பந்துகளில் 12 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த ஜோடி கடைசி 13 பந்துகளில் 37 ரன்கள் குவித்தது. சி.எஸ்.கே தரப்பில் லுங்கி இங்கிடி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த சீசனில் டெல்லியில் நடக்கும் முதல் போட்டி இதுவே.

172 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய சி.எஸ்.கேவின் இன்ஃபார்ம் ஓபனர்களான டூப்ளஸி – கெய்க்வாட் ஜோடி எஸ்.ஆர்.ஹெச் பௌலர்களை ரொம்பவே சோதித்தது. முதல் விக்கெட்டுக்கு 13 ஓவர்களில் 129 ரன்கள் சேர்த்தது இந்த இணை. இந்த சீசனில் இரண்டாவது அரைசதத்தைப் பதிவு செய்த ருத்துராஜ் கெய்க்வாட், 44 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 12 பவுண்டரிகள் அடங்கும். அதேபோல், 38 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்த மற்றொரு ஓபனரான டூப்ளசி, அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து ஆரஞ்சு கேப்பைப் பெற்றார்.
அடுத்து வந்த மொயின் அலி 15 ரன்களில் ஆட்டமிழக்க, ரெய்னா – ஜடேஜா ஜோடி வெற்றியை உறுதி செய்தது. சி.எஸ்.கே 18.3 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. ரெய்னா 17 ரன்களுடனும் ஜடேஜா 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்தப் போட்டியில் 3 பவுண்டரிகளை அடித்த ரெய்னா, ஐபிஎல் போட்டிகளில் 500 பவுண்டரிகளைப் பதிவு செய்தார். அதிக பவுண்டரிகள், சிக்ஸர்கள் அடித்தவர்கள் – விராட் கோலி – 521*4, 204*6, டேவிட் வார்னர் – 525*4, 201*6, சுரேஷ் ரெய்னா – 502*4, 202*6. சி.எஸ்.கேவின் ருத்துராஜ் கெய்க்வாட் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

போட்டிக்குப் பிறகு பேசிய டேவிட் வார்னர், `எனது பேட்டிங்குக்கான முழு பொறுப்பையும் நான் எடுத்துக் கொள்கிறேன். மிகவும் மெதுவாக பேட் செய்த நான், ஃபீல்டர்களை நோக்கிய பந்தை அடித்தேன். மணீஷ் பாண்டே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கேன் வில்லியம்ஸன், கேதர் ஜாதவால் கௌரவமான ஸ்கோரை எட்டினோம். போராட்டக் குணமிக்க வீரர்கள் பலர் எங்கள் அணியில் இருக்கிறார்கள். சி.எஸ்.கே ஓபனர்கள் சிறப்பாக விளையாடினார்கள். இதிலிருந்து மீண்டு வருவோம்’’ என்றார்.

சி.எஸ்.கே கேப்டன் தோனி பேசுகையில், “பேட்டிங் பெர்ஃபாமன்ஸ் சிறப்பாக இருந்தது. அதற்காக பௌலிங் சரியாக இல்லை என்பது பொருள் அல்ல. டெல்லி பிட்ச் ஆச்சர்யமான வகையில், சிறப்பாக இருந்தது. நல்ல ஓபனிங் பாட்னர்ஷிப். சி.எஸ்.கேவைப் பொறுத்தவரை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வித்தியாசம் என்னவென்றால், பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதுதான். எவ்வளவு சீக்கிரம் பிரச்னைகளைத் தீர்க்கிறீர்களோ… அவ்வளவு நல்லது. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடங்கும் முன்பு 5-6 மாதங்கள் கிரிக்கெட் விளையாடாமல் இருந்தோம். அதேபோல், நீண்ட நாட்கள் க்வாரண்டீனில் இருந்ததும் ஒரு காரணம். முடிவாகச் சொல்ல வேண்டும் என்றால், வீரர்கள், தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படுகிறார்கள்.
கடந்த 8-10 ஆண்டுகளை எடுத்துக் கொண்டால், அணி வீரர்களை நாங்கள் மாற்றவில்லை. அதேபோல், பிளேயிங் லெவனில் இடம்பெறாத வீரர்களையும் பாராட்ட விரும்புகிறேன். வாய்ப்புக் கிடைக்கும்போது சிறப்பாகச் செயல்பட முடியும் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும். அதற்காகத் தயாராக இருக்க வேண்டும். டிரெஸிங் ரூம் சூழல் ஆரோக்கியமாக இருப்பது ரொம்பவே முக்கியம். பிளேயிங் லெவனில் இடம்பெறாத வீரர்களைக் கூடுதலாகப் பாராட்ட விரும்புகிறேன்’ என்றார்.
Photo Credits – BCCI