தாலிபான்கள்

Kabul Falls: இரண்டே வாரங்கள்; சண்டையே இல்லாமல் காபூலைப் பிடித்த தாலிபான்கள்… ஆப்கானிஸ்தானில் என்ன நடக்கிறது?

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டுப் படைகள் கடந்த மே மாதம் முதல் வெளியேறத் தொடங்கின. நவீன ஆயுதங்கள், 30,000-த்துக்கும் மேற்பட்ட வீரர்கள் கொண்ட ஆப்கானிஸ்தான் ராணுவம் தாலிபான்களுக்கு எதிராக வலுவான போரை முன்னெடுக்கும் என்று கருதப்பட்டது. ஆனால், என்ன நடந்தது?

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தாலிபான்கள் கைப்பற்றிவிட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர். அஷ்ரப் கனி அண்டை நாடான தஜிகிஸ்தானில் அடைக்கலமாகியிருக்கிறார்.

எங்கே தொடங்கியது?

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் மே 1-ம் தேதியில் இருந்து வெளியேற்றப்படும் என்றும், செப்டம்பர் 11-ம் தேதிக்குப் பிறகு முழுமையாக இருக்காது என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த ஏப்ரல் 14-ல் அறிவித்தார். அமெரிக்க அரசு – தாலிபான்கள் இடையே கடந்த பிப்ரவரியில் ஏற்பட்ட உடன்படிக்கையைத் தொடர்ந்து இந்த அறிவிப்பை ஜோ பைடன் வெளியிட்டார். அப்போது, தாலிபான்களை விட அதிநவீன ஆயுதங்கள், 30,000-த்துக்கும் மேற்பட்ட வீரர்கள் கொண்ட ஆப்கான் ராணுவம் தாலிபான்களை எதிர்த்துப் போரிடும் என்ற நம்பிக்கையை ஆப்கானிஸ்தான் மட்டுமல்ல, அமெரிக்காவும் கொண்டிருந்தது.

தாலிபான்கள்
தாலிபான்கள்

ஆனால், நடந்ததோ எதிர்மறை. ஆப்கானிஸ்தான் ராணுவம் ஊழலில் திளைத்திருந்தது. சரியான தலைமை இல்லாதது, வெளிநாட்டுப் படைகள் ஆதிக்கத்தால் துவண்டு போயிருந்தது என ஆப்கன் ராணுவம் வலுவிழந்து போயிருந்தது. இதுபற்றி அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஏற்கனவே எச்சரித்திருந்தனர். லஷ்கர் கா உள்ளிட்ட பகுதிகளில் ஆப்கானிஸ்தான் ராணுவன் தாலிபான்களோடு வலிமையான போர் செய்தாலும், பல இடங்களில் தாலிபான்களிடம் தோல்வியை ஒப்புக்கொண்டு பின்வாங்கியது அல்லது பாதுகாப்பு நிலைகளைக் கைவிட்டது என்றே சொல்லலாம்.

தாலிபான்கள் முன்னேற்றம்

மே மாதத்தின் இறுதி முதலே தாலிபான்கள் ஆப்கன் அரசுப் படைகளையும் அரசு அதிகாரிகளையும் குறிவைத்துத் தாக்குதல் நடத்தத் தொடங்கியிருந்தனர். குறிப்பாக ஜூன் 7-ல் நடத்திய தாக்குதலில் மட்டும் 150-க்கும் மேற்பட்ட ஆப்கான் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதுவும் அரசுப் படைகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது என்றே கூறலாம். வழக்கமாகத் தங்கள் கைகள் ஓங்கியிருக்கும் தெற்குப் பகுதியில் இல்லாமல், வடக்குப் பகுதியில் கடுமையான தாக்குதல்களை அரசுப் படைகளுக்கு எதிராக நிகழ்த்தத் தொடங்கியிருந்தனர் தாலிபான்கள்.

காபூல் விமான நிலையம்

ஆகஸ்ட் 6-ல் ஜராஞ்சி நகரை தாலிபான்கள் கைப்பற்றினர். ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்குப் பின்னர் தாலிபான்கள் கைப்பற்றிய ஒரு மாகாணத்தில் தலைநகர் இதுவே. அந்த சம்பவம் நடந்து இரண்டே வாரங்களில் சண்டை எதுவுமே இல்லாமல் தலைநகர் காபூலையும் கைப்பற்றி போர் முடிந்ததாக அறிவித்திருக்கிறார்கள். தாலிபான்கள் லீடர்ஷிப் வரிசையில் மௌவ்லாவி ஹிபாதுல்லாவுக்கு அடுத்ததாக இரண்டாவது நிலையில் இருக்கும் அப்துல் கானி பராதர் (Abdul Ghani Baradar), ஆப்கானிஸ்தானின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்பார் என்று கருதப்படுகிறது.

தாலிபான்கள் வெற்றி எப்படி சாத்தியமானது?

தாலிபான்கள் கடந்த 20 ஆண்டுகளாக அரசுப் படைகளுக்கு எதிரான போரை முன்னெடுத்து வருகின்றன. அமெரிக்கப் படைகள் விலக்கிக் கொள்வது தொடர்பான தோஹாவில் கையெழுத்தான ஒப்பந்தத்தைத் தங்கள் முதல் வெற்றியாகக் கருதி, மக்களை அரசுக்கு எதிராக ஒன்று திரட்டத் தொடங்கினர். தங்கள் பழமைவாதக் கோட்பாடுகளை முன்னைவிட அதிகமாகக் கொண்டுசென்றதுடன், அரசியல்ரீதியாகவும் உள்ளூர் அரசியல்வாதிகளுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டனர். மூளைச் சலவைக்கு மயங்காதவர்களை பணம் கொண்டு வாயடைந்தனர்.

பழங்குடியின கிராமங்களில் தலைவர்களை சரிகட்டினர். மறுபுறம் அரசுப் படைகளுக்கெதிரான தாக்குதல்களை வலுப்படுத்தி, தங்களே எதிர்காலம் என்ற ஒரு இமேஜை ஏற்படுத்திக் கொண்டனர். இந்த யுக்தி விரைவிலேயே கைகொடுக்கத் தொடங்கியது. எதிர்த்துப் போரிடாமல் ஆப்கன் ராணுவம், தங்கள் நிலைகளைக் கைவிட்டுவிட்டு பின்வாங்கத் தொடங்கியது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மிகவும் பாதுகாப்பு வாய்ந்த பகுதியாகக் கருதப்படுவது ரெட் ஜோன். அங்குதான் அதிபர் மாளிகை, உலக நாடுகளின் தூதரங்கள் தொடங்கி முக்கிய அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

காபூலின் எல்லைகளை ஆகஸ்ட் 15-ம் தேதி கைப்பற்றிய தாலிபான்கள் நகருக்குள் நுழையும்போது அதிபர் மாளிகை உள்பட எந்தவொரு முக்கியமான பகுதிகளிலும் ராணுவம், உள்ளூர் போலீஸ் என எவரும் எதிர்த்துப் போரிட இல்லை. சண்டையே இல்லாமல் தலைநகரைக் கைப்பற்றியிருக்கும் தாலிபான்கள், போர் முடிவுற்றதாக அறிவித்திருக்கிறார்கள். தாலிபான்கள் காபூலைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து காபூல் விமான நிலையத்தை நோக்கி மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டனர். அமெரிக்க மீட்பு விமானம் காபூல் விமான ஓடுதளத்தின் ரன்வேயில் ஓடத் தொடங்கியபோது, அதன் சக்கரங்களோடு இணைத்துக் கொண்டு ஆப்கானிஸ்தானியர்களும் பறக்க முயற்சித்தனர். அந்த விமானம் டேக் ஆஃப் ஆனவுடன் அதிலிருந்து தவறிவிழுந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்கள். `ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்ப உலக நாடுகள் உதவ வேண்டும்’ என்று கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

Also Read – சார்பட்டா பரம்பரை டீம், அமேசானுக்கு நோட்டீஸ் அனுப்பிய அ.தி.மு.க… என்ன காரணம்?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top