கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட்டின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை, தான் ரிலாக்ஸ் செய்ய NSDR மெத்தடைப் பயன்படுத்துவதாகக் கூறியிருக்கிறார். அப்படின்னா என்னனுதான் இந்தக் கட்டுரைல நாம தெரிஞ்சுக்கப் போறோம்.
நாள் முழுவதும் அலுவலக வேலையோ அல்லது வேறு பணிகளோ அனைத்தையும் முடித்துவிட்டு, வீட்டுக்கு வந்து இளைப்பாற நினைக்கும் நமக்கு நிச்சயம் அன்றைய நாளில் ஏற்பட்ட களைப்பை மறந்து, அடுத்த நாளை புத்துணர்ச்சியோடு தொடங்க நிம்மதியான தூக்கம் அவசியம். ரிலாக்ஸான மனநிலைக்கு தியானம் செய்வது நல்ல பலனைக் கொடுக்கும். அதேநேரம், அமைதியான மனநிலையை எட்ட நிபுணர்கள் புதுப்புது டெக்னிக்குகளை உருவாக்கி வருகிறார்கள். அப்படி, மனதையும் உடலையும் ரிலாக்ஸாக்கி புத்துணர்வு கொடுக்கும் ஒரு முறைதான் non-sleep deep rest எனப்படும் NSDR முறை.
சுந்தர்பிச்சை
சமீபத்தில் வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்குப் பேட்டிகொடுத்த சுந்தர்பிச்சை, `NSDR பற்றி பாட்காஸ்ட் ஒன்றின் மூலம் அறிந்துகொண்டேன். என்னால், எப்போதெல்லாம் தியானம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் யூடியூபுக்குச் சென்று NSDR முறையைச் செய்வது பற்றிய வீடியோக்களைப் பார்ப்பேன். அவை, 10, 20, 30 நிமிடங்களில் இருக்கின்றன. இதனால், அதை அடிக்கடி என்னால் செய்ய முடிகிறது’ என்று சொல்லியிருந்தார். கடுமையான வேலைப்பளு, அதிகமான வேலைநேரம் போன்ற பல்வேறு பணிச்சூழல்களால் ஏற்படும் மன அழுத்தத்தில் இருந்து மனதை ரிலாக்ஸாக்க இந்த முறை ரொம்பவே பயனுள்ளதாக இருப்பதாக சுந்தர் பிச்சை கூறியிருந்தார்.
அதென்ன NSDR மெத்தட்?
அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழக நரம்பியல் துறை பேராசிரியர் ஆண்ட்ரூ ஹ்யூபர்மேன் (Andrew Huberman) என்பவரால் உருவாக்கப்பட்டது இந்த non-sleep deep rest எனப்படும் NSDR மெத்தட். தியானம் உள்ளிட்டவைகள் மூலம் மன அமைதியைத் தூண்டும் ஒரு நுட்பம்தான் இந்த NSDR.
இதில்,
Non-Sleep Deep Rest (NSDR): யோக நித்ரா
Non-Sleep Deep Rest (NSDR): ஹிப்னாஸிஸ்
Non-Sleep Deep Rest (NSDR): குட்டித் தூக்கம் என மூன்று படிநிலைகள் இருக்கின்றன.
யோக நித்ரா
இந்த முறை நிலையாக ஓரிடத்தில் படுத்துக்கொண்டே, மூச்சுவிடும் முறை, உடலின் பாகங்களைத் தனித்தனியாக உணர்தல் மற்றும் மூளை உள்ளிட்டவைகளை ரிலாக்ஸாக்க உதவுகிறது. அமைதியாக ஓரிடத்தில் நிலையாக இருப்பதன் மூலம் மன அமைதியையும் தேட வழிவகுக்கும் இந்த முறையின் மூலம், நாம் தேவையில்லாமல் சுமக்கும் எண்ணங்களில் இருந்து வெளிவர முடியும் என்கிறார்கள்.
ஹிப்னாஸிஸ்
இது hypnotist ஒருவரின் உதவியோடு மேற்கொள்ளப்படும் முறை. இதுபற்றி நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்ட ஆண்ட்ரூ ஹ்யூபர்மேன், “ஒரு பொருளை டெலிபோட்டோ லென்ஸ் மூலமாகப் பார்ப்பது போன்றது இது. அந்தப் பொருளைச் சுற்றியிருப்பவற்றை விட்டு மெல்ல மெல்ல உங்கள் கவனத்தை விலக்குவீர்கள். அதிகபட்ச ஸ்ட்ரெஸ் அல்லது மகிழ்ச்சியின் உச்சம் இவற்றோடு தொடர்புடையது. ஆனால், ஹிப்னாஸிஸ் என்பது மாறுபட்டது. இதில், நீங்கள் உச்சகட்ட கவனத்தைக் குவிப்பீர்கள், அதேநேரம் ரிலாக்ஸாக உணர்வீர்கள்’ என்று விளக்கம் கொடுத்திருந்தார்.
குட்டித் தூக்கம்
தேவையில்லாத ஸ்ட்ரெஸ் மற்றும் கோபத்தைக் குறைக்கும் அருமருந்தாக தூக்கம் பார்க்கப்படுகிறது. இந்த முறையில், உடலுக்கும் மனதுக்கு புத்துணர்ச்சி பாய்ச்சும் விதமாக சுமார் 20 நிமிடங்கள் வரை குட்டித் தூக்கம் போட பரிந்துரைக்கிறார்கள்.
முக்கிய குறிப்பு…
NSDR மெத்தட் பற்றி நிபுணர்கள் பரிந்துரைக்கும் கருத்துகளையே இங்கு கொடுத்திருக்கிறோம். புதிய டயட் அல்லது ஃபிட்னெஸ் புரோகிராம்களில் ஏதேனும் மாற்றம் செய்ய நீங்கள் விரும்பினால், உங்கள் மருத்துவரோடு கலந்தாலோசித்துவிட்டு செய்யுங்கள்.