முல்லைப் பெரியாறு அணை

Dam safety bill: அணை பாதுகாப்பு மசோதா என்ன சொல்கிறது… மாநிலங்கள் எதிர்ப்பது ஏன்?

மாநிலங்களவையில் கடந்த 2-ம் தேதி அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், மத்திய அரசு மாநில உரிமைகளில் தொடர்ந்து தலையிட்டு வருவதாக எதிர்க்கட்சி எம்.பி-க்கள் சாடினார். அப்படி இந்த மசோதா என்னதான் சொல்கிறது. எதிர்ப்பு ஏன்?

அணை பாதுகாப்பு மசோதா ஏன் கொண்டு வரப்பட்டது?

இடுக்கி அணை
இடுக்கி அணை

`இந்தியாவில் அணை பாதுகாப்பு குறித்த சட்டப்படியான அமைப்பு ரீதியிலான நிறுவனங்கள் இல்லாததால், அணை பாதுகாப்பு கவலையளிக்கும் பிரச்னையாக உள்ளது. பாதுகாப்பற்ற அணைகள் ஆபத்தானவை. அணை உடைப்பால் பேரிடர்கள் ஏற்பட்டு உயிரிழப்பும் சொத்து இழப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்காகத்தான் இதை முன்மொழிகிறோம்’ என்கிறது மத்திய அரசு. ஆனால்,இந்த மசோதா மாநிலங்களின் உரிமையில் நேரடியாகத் தலையிடுகிறது’ எனக் குற்றம்சாட்டுகின்றன பல்வேறு மாநில அரசுகள். அதில் தமிழகமும் ஒன்று. அணை பாதுகாப்பு பொறுப்பை அணை உரிமையாளர் (மாநிலம்) மீது இந்தச் சட்டம் சுமத்துகிறது. சில செயல்களைச் செய்வது அல்லது செய்யத் தவறுவது ஆகியவற்றுக்கான தண்டனை பிரிவுகளும் சட்டத்தில் அடங்கியுள்ளன.

இந்தியாவில் ஏறத்தாழ 5,200 பெரிய அணைகள் உள்ளன. 450 அணைகள் புதிதாகக் கட்டப்பட்டும் வருகின்றன. இவை தவிர ஆயிரக்கணக்கான சிறு மற்றும் நடுத்தர அணைகளும் உள்ளன. இவை அனைத்தின் பாதுகாப்புக்கும் ஒரே மாதிரியான வழிமுறைகளை வகுக்க தேசிய அணை பாதுகாப்பு மசோதா கொண்டுவரப்படுவதாகச் சொல்கிறது மத்திய அரசு. அணைகளின் பாதுகாப்புக்கான தேசிய கமிட்டி, மத்திய, மாநில அணை பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் மூலம் மத்திய நீர்வள ஆணையம், அணை பாதுகாப்பு குறித்த அறிவுறுத்தல்களை மாநிலங்களுக்கு வழங்குகிறது. ஆனால், அவற்றுக்கு முறையான அங்கீகாரம் இல்லை.

அணை
அணை

இந்தக் குறையைத் தீர்த்து, நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் முழுவதும் ஒரே சீரான அணை பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிக்க இந்த மசோதா வழிவகை செய்யும். அனைத்து அணைகளிலிருந்தும் பயன்களை பெறும் வகையிலும் அவற்றின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையிலும் இது அமைகிறது. இந்தியாவின் முன்னணி நிபுணர்கள் மற்றும் சர்வதேச நிபுணர்களுடன் விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகே இந்த மசோதாவின் வரைவு இறுதி செய்யப்பட்டதாகச் சொல்கிறது மத்திய அரசு.

தேசிய பாதுகாப்பு மசோதாவையொட்டி, தேசிய அணைகள் பாதுகாப்புக் குழு ஒன்று அமைக்கப்படும். இந்தக் குழு அணை பாதுகாப்பு கொள்கைகளை உருவாக்கி, இதற்கென தேவைப்படும் வரைமுறைகளைப் பரிந்துரை செய்யும். இந்த ஆணையம் கொள்கை, நாட்டின் அணைகள் பாதுகாப்பு குறித்த நெறிமுறைகள், அணைகளின் தரம் ஆகியவற்றில் பங்கு வகிக்கும். இதுதவிர, மாநில அரசுகள், மாநில அணை பாதுகாப்புக் குழுக்களை அமைத்து செயல்படவும் மசோதா வகைசெய்கிறது.

தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் என்ன செய்யும்?

  • தேசிய அணை பாதுகாப்பு ஆணையம், மாநில அணை பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து அணையைப் பராமரிக்கும்.
  • மாநிலங்கள் மற்றும் மாநில அணை பாதுகாப்பு அமைப்புகளுக்கு தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை உதவிகளை வழங்கும்.
  • தேசிய நிலையில் அனைத்து அணைகள் சார்ந்த தகவல் கட்டமைப்பை பராமரிக்கும். பெரிய அணைகளில் ஏற்படும் குறைபாடுகளையும் ஆவணப்படுத்தி வைக்கும். அணைகளின் பெரிய குறைபாடுகளுக்கான காரணங்களை ஆராயும்.
  • வழக்கமான ஆய்வுக்கான தரமான நெறிமுறைகள், சரிபார்ப்பு பட்டியல்கள் ஆகியவற்றை வெளியிட்டு அவ்வப்போது மேம்படுத்தும். அணைகளின் விரிவான ஆய்வுகள் பற்றியும், இந்த ஆணையம் தகவல் சேகரித்து வெளியிடும்.
  • புதிய அணைகளின் ஆய்வு, வடிவமைப்பு, கட்டுமானப் பணிகளை ஒப்படைக்க தகுதியுள்ள நிறுவனங்களுக்கு அங்கீகாரத்தையும் தரங்களையும் தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் வழங்கும்.
அணை
அணை

இரு மாநிலங்களின் அணைகள் பாதுகாப்பு அமைப்புகளுக்கு இடையே தீர்க்கப்படாமல் இருக்கும் விஷயங்கள் குறித்து இந்த ஆணையம் ஆராயும். அணையின் மீது உரிமை உடையவர்கள் தொடர்பான நிலுவையில் இருக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளும். மேலும், ஒரு மாநிலத்தின் அணைகள் மற்றொரு மாநிலத்தின் பகுதியில் அமைந்திருப்பது போன்ற சில வழக்குகளில் தேசிய அணை பாதுகாப்பு ஆணையம், மாநில அணை பாதுகாப்பு அமைப்பின் கடமை பொறுப்புகளையும் மேற்கொண்டு, மாநிலங்களுக்கு இடையிலான முரண்பாடுகளைத் தவிர்க்க உதவும்.

மாநில அணை பாதுகாப்புக் குழு என்ன செய்யும்?

மாநிலத்தில் உள்ள அனைத்து குறிப்பிட்ட அணைகளின் சரியான கண்காணிப்பு, ஆய்வு, நடைமுறை, பராமரிப்பு, பாதுகாப்பான செயல்பாட்டையும் இந்தக் குழு உறுதி செய்யும். ஒவ்வொரு மாநிலத்திலும், மாநில அணைப் பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்த வேண்டும் என்று இந்தச் சட்டம் வலியுறுத்துகிறது. இந்த அமைப்பில் அணை பாதுகாப்புத்துறை சார்ந்த அதிகாரிகள் இடம் பெற்றிருப்பார்கள். குறிப்பாக, அணை வடிவமைப்பு, நீரியியல், பொறியியல், புவி ஆராய்ச்சியாளர்கள், கருவிகள் மற்றும் அணை மறுசீரமைப்பு ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகள் இடம்பெற்றிருப்பார்கள்.

அணை
அணை

இது மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கை என தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன. இந்த நிலையில்தான் அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

Also Read – Innuyir Kappom Thittam: தமிழக அரசின் `இன்னுயிர் காப்போம் திட்டம்’ – முக்கிய அம்சங்கள் என்ன?

1 thought on “Dam safety bill: அணை பாதுகாப்பு மசோதா என்ன சொல்கிறது… மாநிலங்கள் எதிர்ப்பது ஏன்?”

  1. Hey! Do you know if they make any plugins to help with Search Engine Optimization? I’m trying to get
    my website to rank for some targeted keywords but I’m not seeing very good success.
    If you know of any please share. Cheers! I saw similar article
    here: Eco wool

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top