தி.மு.க தலைவர் கருணாநிதி, அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழும் என்று சிலர் கணித்தனர்; தமிழக அரசியலை அந்த மாற்றம் தலைகீழாகப் புரட்டிப் போட வேண்டும் என்று சிலர் கனவு கண்டனர். ஆனால், அதை ஏற்படுத்தப்போவது யார் என்பது கேள்விக்குறியாக இருந்தது?
தமிழக அரசியல் களத்தில் ‘வெற்றிடம்’ என்ற சொல்லாடல் அப்போதுதான் பாப்புலர் ஆனது. அதை நிரப்பத் தகுதியானவர் நடிகர் ரஜினிகாந்த் எனச் சொல்லி, அவரை எதிர்பார்த்துக் காத்திருந்தபோது, யாரும் எதிர்பார்க்காத நடிகர் கமலஹாசன் திடீரென அரசியல் களத்தில் குதித்தார்.
சினிமாவைத் தவிர வேறொன்றும் தனக்குத் தெரியாது என்று சொன்ன கமலஹாசன், அரசியல் என் அறிவுக்கு அப்பாற்பட்டது என்று சொல்லிக் கொண்டிருந்த கமலஹாசன் கட்சி ஆரம்பித்தது பலருக்கும் வியப்பைக் கொடுத்தது.
மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் தன் கட்சியைத் தொடங்கிய கமலஹாசனை, பொருளாதாரத்தில் நடுத்தர அடுக்கைச் சார்ந்த பொதுமக்களும், அரசியலில் மாற்றத்தை விரும்பும் பட்டதாரிகளும், கலைத்துறையில் முற்போக்கு சிந்தனையோடு இயங்கும் சில அறிவுஜீவிகளும், ஓய்வு பெற்ற சில ஐ.ஏ.எஸ், ஐ.பி.எ ஸ் அதிகாரிகளும் ஆதரித்தனர். மக்கள் நீதி மய்யம் குறிப்பிடத்தகுந்த பேசுபொருளானது.
கட்டமைப்பு பலமாக இல்லையென்றாலும், இருக்கிற பலத்தைக் கொண்டு 2019 நாடாளுமன்றத் தேர்தலை மக்கள் நீதி மய்யம் துணிச்சலாகச் சந்தித்தது. அதில், பல தொகுதிகளில் மூன்றாவது இடம் பெற்ற மக்கள் நீதி மய்யம், 3 சதவிகித வாக்குகளையும் பெற்றது. ஆனால், அங்கிருந்தே அதன் வீழ்ச்சியும் தொடங்கியது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே, அந்தக் கட்சியில் இருந்து வழக்கறிஞர் சந்திரசேகர், எழுத்தாளரும் இயக்குனருமான பாரதி கிருஷ்ணகுமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் விலகத் தொடங்கினர். அதன்பிறகு, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்ட மக்கள் நீதி மய்யம், 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டது. தேர்தலைச் சந்திப்பதற்கு முன்பே, அந்தக் கட்சியின் முக்கிய நிர்வாகியாக பொறுப்பு வகித்த கமீலா நாசர், கட்சியின் பொறுப்புகளில் இருந்து விலகிக் கொண்டார். இந்நிலையில், கோவை தெற்குத் தொகுதியில் கமலஹாசன் நேரடியாகக் களம் இறங்கி, தோல்வியைத் தழுவினார். அதன் பிறகு அந்தக் கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன், புதிதாக கட்சியில் சேர்ந்த சுற்றுச்சூழல் பிரிவின் தலைவர் பத்மப் பிரியா உள்ளிட்டவர்களும் வரிசையாக விலகத் தொடங்கினர்.
பாரதி கிருஷ்ணகுமார் முதல் பத்மபிரியா வரை, ம.நீ.ம-வில் இருந்து விலகியவர்கள் தங்கள் விலகலுக்கான காரணத்தைச் சொல்லவில்லை. ஆனால், அந்தக் கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன், மட்டும் பட்டும் படாமல் சில காரணங்களைச் சொன்னார். அவர் சொன்னதில் மிக முக்கியமான விஷயம், “கமல் தன்னகங்காரத்துடன் செயல்படுகிறார்; கட்சிக்குள் ஜனநாயகம் இல்லை; கட்சியின் ஆன்லைன் வேலைகளைப் பார்க்கும் ‘சாங்கியா’ நிறுவனத்தின் மகேந்திரனும், சுரேஷ் அய்யரும்தான் கட்சியை நடத்துகின்றனர்” என்று குற்றம் சாட்டினார். இதுபற்றி ஏற்கெனவே அந்தக் கட்சியில் இருந்து விலகியவர்களிடம் பேசினோம்.
ம.நீ.ம-வில் இருந்த ஜனநாயகத்தை முதலில் காலி செய்யும் வேலையைப் பார்த்தது, அந்தக் கட்சியின் துணைத் தலைவராக இருந்து, தற்போது விலகி உள்ள கோவை டாக்டர் மகேந்திரன்தான். அவர்தான் அதற்கு வித்திட்டார். கமலஹாசனை மற்றவர்கள் நெருங்காமல் பார்த்துக் கொண்டவர் அவர்தான். அதன்பிறகுதான் ‘சாங்கியா’ நிறுவனம் உள்ளே வந்தது. அதன் நிர்வாகிகளான மகேந்திரனும்(விஜய் டிவி), சுரேஷ் அய்யரும், பல இடங்களில் இருந்து ம.நீ.ம-விற்கான நிதித் தேவையை மகேந்திரனை (கோவை)விட அதிகம் பூர்த்தி செய்தனர். அதுபோல், கமலஹாசனுக்குத் தனிப்பட்ட முறையில் உள்ள தேவைகளையும் பார்த்துப் பார்த்துக் கவனித்துக் கொண்டனர். அதனால், சில மாதங்களில் கமலஹாசன் அவர்களுடைய கட்டுப்பாட்டிற்குள் போனார்… அல்லது, அவர்களை மட்டுமே நம்பிக்கைக்குரியவர்களாகப் பார்த்தார் என்று வைத்துக் கொள்ளலாம். அதனால், கோவை மகேந்திரனால், கமலஹாசனிடம் பெரிதாக காரியம் சாதிக்க முடியவில்லை. இதுதான் அவர்களுக்குள் இருந்த பிரச்னை.
மற்றவர்கள் விலகலுக்கு ‘சாங்கியா’ தவிர்த்துப் பல காரணங்கள் இருக்கின்றன. சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் கட்சிக்காக உழைத்தவர்களிடமும் 20 லட்சம் ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு சீட் கொடுக்கப்பட்டது. அதில் பலர் அதிருப்தி அடைந்தனர். மேலும், அவர்கள் கேட்ட தொகுதியும் கொடுக்கப்படவில்லை. கமீலா நாசர் வில்லிவாக்கம் தொகுதியில் வேலை பார்த்து வைத்திருந்தார். அவரைப்போய், மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கொளத்தூரில் போட்டியிடச் சொன்னார் கமலஹாசன். அதில், வாக்குவாதமாகித்தான் அவர் வெளியேறியதாகச் சொல்லப்படுகிறது. இப்படி நடந்த குளறுபடிகளும் அந்தக் கட்சியின் நிர்வாகிகள் அதிருப்தியில் இருந்ததற்கு மிக முக்கிய காரணம். அதோடு கமலஹாசனின் நடவடிக்கைகள் மிக முக்கியமான காரணம். ஒரு பிரச்னை என்றால், அது குறித்து சம்பந்தப்பட்டவர்களைத் தனிமையில் அழைத்துப் பேசும் கமல், அந்த நேரத்தில் தனது இன்னொரு முகத்தைக் காட்டுவார். ஒருமையில் பேசுவதும், திட்டுவதும் அதில் அடக்கம்.
‘இதையெல்லாம் தாண்டி, முற்போக்கு எண்ணத்துடன் ம.நீ.ம-விற்குள் அடியெடுத்து வைத்த சிலரிடம் பேசியபோது, அவர்கள் சொன்ன தகவல்கள் மேலும், அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. அவர்களிடம் பேசியதில், ”சாங்கியா, பணம், கமல் என்பதையெல்லாம் தாண்டி, மக்கள் நீதி மய்யத்தில் ஒருவிதமான பாகுபாடு மிகப்பெரிய அளவில் உள்ளது; கமலஹாசனுக்குள் இருக்கும் சில எண்ணங்கள், அவரைச் சுற்றி யார் இருக்க வேண்டும் என்பதில் தொடங்கி, கருத்துக்களைக் கேட்பது, சொல்வது, மதிப்பளிப்பது என்பதுவரை நீடிக்கும். நேரடியாக வெளிப்படையாக நிரூபிக்க முடியாத அளவுக்கு ம.நீ.ம-வில் ஒருவித பிரித்தாளுமை வெளிப்படும். அதில், இருந்துதான் மற்ற பிரச்சினைகள் அந்தக் கட்சிக்குள் ஆரம்பித்தது. மும்மொழிக் கொள்கை, நீட்டுக்குப் பதில் சீட் போன்ற ம.நீ.ம-வின் தேர்தல் அறிக்கையின் வாயிலாக அதை நீங்கள் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான்” என்றனர். அதிர்ந்துபோனோம் நாம். ஏனென்றால், முற்போக்கை அடையாளமாகக் கொண்ட கமல்ஹாசன் மற்றும் ம.நீ.ம. மீதான இந்த குற்றச்சாட்டு, நிச்சயம் பெரும் அதிர்ச்சி.
கமல்ஹாசன் அவர்கள் கவனத்துக்கு!
Also Read- சசிகலாவின் அமைதிக்குப் பின்னால்… வெங்கய்ய நாயுடு கொடுத்த வாக்குறுதி!