கொரோனா வைரஸ் தொற்றை சமாளிக்க முடியாமல் மத்திய மற்றும் மாநில அரசுகள் திணறி வருகின்றன. இந்த நிலையில், ப்ளாக் ஃபங்கஸ் அல்லது மியூகோர்மைகோசிஸ் என்று அழைக்கப்படும் தொற்று பல மாநிலங்களிலும் பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ப்ளாக் ஃபங்கஸ் தொடர்பான சரியான புரிதல்களே இன்னும் ஏற்படாத நிலையில் வொயிட் ஃபங்கஸ் எனும் புதிய தொற்று மக்களை பாதித்து வருவதாக மருத்துவத்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வொயிட் ஃபங்கஸ், ப்ளாக் ஃபங்கஸை விட மிகவும் ஆபத்தானது என்றும் கூறியுள்ளனர்.
வொயிட் ஃபங்கஸ் எவ்வாறு உறுதி செய்யப்பட்டது?
பாட்னா மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த நுண்ணுயிரியல் துறையின் தலைவர் மருத்துவர் எஸ்.என்.சிங் தெரிவித்த தகவலின் படி, பாட்னாவில் நான்கு நோயாளிகள் கொரோனா வைரஸ் தொற்றுக்கான அதே அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று இல்லை என வந்துள்ளது. இதைத்தொடர்ந்து விரிவான பரிசோதனைகளை நடத்தியபோது அவர்களுக்கு வொயிட் ஃபங்கஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வொயிட் ஃபங்கஸால் பாதிப்படைந்த அனைவரும் சிகிச்சைக்கு பின்னர் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ப்ளாக் ஃபங்கஸை விட ஆபத்தானதா வொயிட் ஃபங்கஸ்?
மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ள தகவலின்படி, ப்ளாக் ஃபங்கஸ் தொற்றை விட வொயிட் ஃபங்கஸ் தொற்று அதிக ஆபத்தானது. ஏனெனில், இது நுரையீரலை மட்டுமல்லாமல் உடலின் மற்ற பகுதிகளான தோல், நகம், வயிறு, சிறுநீரகம், மூளை மற்றும் வாய் போன்ற பல பகுதிகளையும் தாக்கி பாதிப்பை ஏற்படுத்துகிறது.
வொயிட் ஃபங்கஸ் ஏற்பட்டதற்கான அறிகுறிகள் என்னென்ன?
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறிகளைப் போன்றே வொயிட் ஃபங்கஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. ஆனால், கொரோனா வைரஸ் பரிசோதனையின்போது தொற்று ரிசல்ட் நெகட்டிவ் என வரும் என்கிறார்கள். சி.டி.ஸ்கேன் அல்லது எக்ஸ்ரே மூலம் இந்த நோய்த்தொற்றை கண்டறிய முடியும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாரெல்லாம் பாதிக்கப்படுவார்கள்?
ப்ளாக் ஃபங்கஸ் தொற்று நோய் ஏற்படுவது போலவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இந்த வொயிட் ஃபங்கஸ் தொற்று ஏற்படுகின்றது. நீரிழிவு நோய் போன்ற நீண்டகாலமாக மருத்துவப் பிரச்னைகள் உள்ளவர்கள் மற்றும் ஸ்டிராய்டு சிகிச்சைப் பெறுபவர்கள் இந்த தொற்றால் அதிகளவில் பாதிப்படைய வாய்ப்புகள் உள்ளன. இதுவரை பாட்னாவில் மட்டும் 16 பேர் ப்ளாக் ஃபங்கஸ் தொற்றாலும் 4 பேர் வொயிட் ஃபங்கஸ் தொற்றாலும் பாதிப்படைந்துள்ளனர்.
வொயிட் ஃபங்கஸ் ஏற்படாமல் தடுக்க சுகாதாரத்துடன் இருப்பது மிகவும் முக்கியம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ப்ளாக் ஃபங்கஸ் தொற்று நோயானது குறிப்பிடத்தக்க தொற்று நோயாக அறிவிக்க மத்திய அரசு, மாநில அரசுகளையும் யூனியன் பிரதேசங்களையும் கேட்டுக்கொண்டது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதே மிகப்பெரிய சவாலாக மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இருந்து வருகிறது. இந்த நிலையில் ப்ளாக் ஃபங்கஸ் மற்றும் வொயிட் ஃபங்கஸ் ஆகிய தொற்று நோயுகள் பரவாமல் தடுக்க வேண்டிய கட்டாயத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இருந்து வருகிறது. மக்கள் மத்தியிலும் இந்த தொற்று நோய் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
Also Read : `வடமாநிலங்களில் வேகமாகப் பரவும் தொற்று!’ – ப்ளாக் ஃபங்கஸ் என்றால் என்ன?