தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான ஒருநாள் தொடரை `Eye Opener’ என்று வர்ணித்திருக்கிறார் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட். மூன்று போட்டிகளிலும் இந்திய அணியை வென்று முதல் முறையாக வொயிட் வாஷ் செய்திருக்கிறது தென்னாப்பிரிக்க அணி.. இந்திய அணி சறுக்கியது எங்கே… 4 காரணங்களைப் பார்க்கலாம் வாங்க…
Safety First அப்ரோச்
இந்திய அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரை வழக்கமான வீரியம் தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரில் மிஸ்ஸிங் என்றே சொல்லலாம். இரண்டு போட்டிகளில் சேஸ் செய்தபோதும் சரி; ஒரு போட்டியில் முதலில் பேட் செய்தபோதும் சரி ரிஸ்க் எடுக்க ரொம்பவே தயங்கினார்கள் இந்திய பேட்ஸ்மேன்கள். சீரிஸ் முடிவில் இதே கேள்வி பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை நோக்கி எழுப்பப்பட்டது. இந்த டெம்ப்ளேட்டை இந்திய அணி மாற்றிக்கொள்ளுமா என்றும் அவரிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த ராகுல், `மிடில் ஓவர்களில் இன்னும் சிறப்பாகவே நாங்கள் செயல்பட்டிருக்க வேண்டும். இந்த டெம்ப்ளேட்டை மாற்றுவது என்பது பெரும்பாலும் டீம் பேலன்ஸைப் பொறுத்தே அமையும். ஆல்ரவுண்டர்களான சில வீரர்கள் இதில் உங்களுக்கு 6,7,8 ஆகிய பேட்டிங் பொசிஸன்களில் வாய்ப்புக் கொடுப்பர். ஆனால், அவர்கள் இடம்பெறவில்லை. அவர்கள் அணிக்குத் திரும்பும்போது பேட்டிங் டெப்த் இன்னும் அதிகரிக்கும். அது இன்னும் வித்தியாசமாக விளையாடும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்’’ என்று பதிலளித்திருந்தார்.
பிளேயிங் லெவன்
ஒண்டே கேப்டன் ரோஹித் ஷர்மா காயம் காரணமாக விளையாட முடியாத நிலையில், பொறுப்பு கேப்டன் கே.எல்.ராகுல் தலைமையில் இந்திய அணி களம்கண்டது. முதல் போட்டியில் அறிமுக வீரராகக் களம்கண்ட வெங்கடேஷ் ஐயருக்கு ஒரு ஓவர் கூட பந்துவீச வாய்ப்பளிக்கப்படவில்லை. ஆறாவது பந்துவீச்சாளர் என்ற கணக்கில் அவர் பிளேயிங் லெவனில் இடம்பெற்றிருந்தார். இரண்டாவது போட்டியில் அவருக்கு 5 ஓவர்கள் பந்துவீச வாய்ப்பளிக்கப்பட்டாலும், மூன்றாவது போட்டியில் அவர் இடம்பெறவில்லை. ஒவ்வொரு போட்டிக்கும் ஏற்ற பிளேயிங் லெவனைத் தேர்வு செய்ய கே.எல்.ராகுல் – ராகுல் டிராவிட் கூட்டணி தவறிவிட்டதாக விமர்சனம் எழுந்திருக்கிறது. குறிப்பாக, இந்திய ஸ்பின்னர்களை விட தென்னாப்பிரிக்க ஸ்பின் கூட்டணியாக ஷம்ஷி – கேசவ் மகாராஜ் கூட்டணி சிறப்பாகவே செயல்பட்டது என்றே கூறலாம்.
மிடில் ஓவர் சொதப்பல்
பேட்டிங்கிலும் சரி; பவுலிங்கிலும் சரி மிடில் ஓவர்களில் இந்திய அணியை விட தென்னாப்பிரிக்க அணி சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியது. இரண்டாவது போட்டியில் கே.எல்.ராகுல் – ரிஷப் பண்ட் பாட்னர்ஷிப்பை பெரிய அளவுக்கு எடுத்துச் செல்லாதது. அதேபோல், கடைசிப் போட்டியில் ஷிகர் தவான் – விராட் கோலி பாட்னர்ஷிப் அமைத்து விளையாடிக் கொண்டிருந்தபோது, இந்தியாவின் கையே ஓங்கியிருந்தது. ஆனால், இந்த பாட்னர்ஷிப்புகளை தென்னாப்பிரிக்கா பிரித்தபிறகு தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து தடுமாறத் தொடங்கியது இந்தியா. இரண்டாவது போட்டிக்குப் பிறகான செய்தியாளர் சந்திப்பில் மேட்சின் திருப்புமுனை என்ன என்ற கேள்விக்குப் பதிலளித்த ரிஷப் பண்ட், `இரண்டு அணிகளுக்கு இடையிலான வித்தியாசமே மிடில் ஓவர்களில் செயல்பாடுதான். பேட்டிங்கைப் பொறுத்தவரை மிடில் ஓவர்களில் இன்னும் கொஞ்சம் கூடுதலாக ரன்கள் சேர்த்திருக்கலாம். பவுலிங்கைப் பொறுத்தவரை விக்கெட்டுகளை வீழ்த்தத் தவறிவிட்டோம்’ என்று ஸ்டேட்மெண்ட் தட்டியிருந்தார்.
ஃபினிஷர் எங்கப்பா?
ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜாவின் இடங்களை நிரப்ப அடுத்த ஒரு வீரரை இந்திய அணி நிர்வாகம் வளர்க்காமல் விட்டதன் பலனை இந்தத் தொடரில் அனுபவித்தது. ஒருநாள் போட்டிகளில் மிடில் ஆர்டரில் ஆடிக்கொண்டிருந்த கே.எல்.ராகுல், ரோஹித் ஷர்மா ஆப்செண்டான நிலையில் மீண்டும் ஓபனிங் ஆடினார். இதனால், நம்பர் 4 இடம் யாருக்கு என்ற கேள்வி எழவே, பின்வரிசையில் ஆடிக்கொண்டிருந்த ரிஷப் பன்டை நோக்கி கையை நீட்டினார். இதனால், ஸ்ரேயாஸ் ஐயருக்கு முன்னால் பன்ட் களமிறக்கப்பட்டார். ஏற்கனவே 6,7-வது இடத்தில் ஆடக்கூடிய ஃபினிஷர்கள் இல்லாத நிலையில், பன்டும் நான்காவது வீரராகக் களமிறக்கப்பட்டது இந்தியாவுக்கு டெப்த் ஓவர்களில் சிக்கலை ஏற்படுத்தியது. இந்தியா முதலில் பேட் செய்த ஒரே ஒரு மேட்சில் ஷ்ரதுல் தாக்குர் அரைசதம் அடிக்காவிட்டால், இந்தியாவின் ஸ்கோர் 250-ஐத் தாண்டியிருக்காது. திடீரென ஃபினிஷிங் ரோலை அவரால் எப்படி தன் தோளில் தாங்கி எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய முடியும்? பேட்டிங் ஆர்டர், ஃபினிஷர் பிரச்னைகள் இல்லாமல் இருந்திருந்தால் அந்தப் போட்டியில் நிச்சயம் இந்திய அணியால் 300 ரன்களுக்கு மேல் குவித்திருக்க முடியும்.
Also Read – Virat Kohli: `கிங்’ கோலியின் தரமான 5 Thug Life மொமண்ட்ஸ்!