அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீரரும், இரண்டாம் உலகப் போரில் பங்கெடுத்த வீரரும், ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த சமூக ஆர்வலருமான டாக்டர். ஃபிராங்க் கமேனியை கவுரவிக்கும் விதமாக கூகுள் நேற்று டூடுல் ஒன்றை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து கூகுளில் சுமார் 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் யார் இந்த பிராங்க் கமேனி என கூகுளில் தேடினர். இதனால், கூகுள் டிரெண்டிங்கிலும் இவரது பெயர் இடம் பிடித்தது. கூகுள் அதன் முகப்பு பக்கத்தில் கமேனியின் படத்தை வெளியிட்டு மாலை ஒன்று அணிந்திருப்பதைக் காட்டுகிறது. ஜூன் மாதமானது `Pride Month’ (பெருமைமிகு மாதம்) என்று அழைக்கப்படுகிறது. இதுதொடர்பாக கமேனியின் நினைவைப் போற்றும் வகையில் கூகுள் மரியாதை செய்துள்ளது. “அமெரிக்க LGBTQ உரிமையாளர்களின் இயக்கத்தில் முக்கியமான பங்கு வகித்தவர் கமேனி. பல தசாப்தங்களாக LGBTQ-வின் முன்னேற்றத்துக்கு தைரியமாக வழி வகுத்தமைக்கு நன்றி” என்று கூகுள் அவரைப் பற்றி விவரித்துள்ளது.
யார் இந்த ஃபிராங்க் கமேனி?
நியூயார்க்கில் உள்ள குயின்ஸில் கமேனி 1925-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி பிறந்தார். குயின்ஸ் கல்லூரியில் தன்னுடைய 15 வயதில் இயற்பியல் படிப்பதற்காக சேர்ந்தார். ஹார்வேர்ட் பல்கலைக்கழத்தில் இணைந்து அஸ்ட்ரானமி பாடத்தில் முனைவர் பட்டம் பெறுவதற்கு முன்பு இரண்டாம் உலகப் போரில் இணைந்து போராடினார். 1957-ம் ஆண்டு ராணுவத்தில் விண்வெளி வீரராக இணைந்து பணியாற்றினார். ஆனால், வேலையில் இணைந்து சில மாதங்களிலேயே LGBTQ சமூகத்தின் உறுப்பினராக இருந்ததால், தன்னுடைய பணியை இழந்தார். இதனைத் தொடர்ந்து கமேனி அரசுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமைகளுக்காக 1961-ல் முதன்முறையாக அமெரிக்காவின் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டைத் தாக்கல் செய்தார்.
அமெரிக்காவில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்காக வாதாடும் குழு ஒன்றை கமேனி முதன்முறையாக உருவாக்கினார். 1970-களின் முற்பகுதியில் அமெரிக்க மனநல சங்கத்திற்கு ஓரினச்சேர்க்கை என்பது மனநல கோளாறு என்பதை நிரூபிக்க முடியுமா என்று சவால் விடுத்தார். நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு 1975-ல் சிவில் சர்வீஸ் கமிஷன் LGBTQ ஊழியர்கள் மீதான தடையை நீக்கியது. ராணுவ சேவையில் இருந்து நீக்கப்பட்டதற்காக 50 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க அரசாங்கம் கடந்த 2009-ம் ஆண்டில் கமேனியிடம் மன்னிப்பு கோரியது. 2010-ம் ஆண்டு ஜூன் மாதம் வாஷிங்க்டன் டி.சியில் உள்ள தெரு ஒன்றுக்கு `ஃபிராங்க் கமேனி வே’ என்று பெயரிட்டு அவரைப் பெருமைப்படுத்தியது.
ஸ்டோன்வால் கலவரம்…
1969-ம் ஆண்டு நடந்த ஸ்டோன்வால் கலவரம் பிரைட் இயக்கத்துக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதற்கு முன்னதாக அமெரிக்க அரசியலமைப்பானது LGBTQ பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு தடை விதித்திருந்தது. காவல்துறை அதிகாரிகள் பார்களில் நுழைந்து ஓரினச் சேர்க்கையாளர்களைத் தாக்கி தொந்தரவு செய்து வந்தனர். கிரீன்விச் வில்லேஜில் உள்ள ஸ்டோன்வால் விடுதியும் காவல்துறை அதிகாரிகளின் இலக்காக இருந்து வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகளின் அட்டூழியங்களால் சோர்ந்து போன LGBTQ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஜூன் மாதம் 28-ம் தேதி 1969-ம் ஆண்டு அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களுக்கு எதிராக கடுமையான போராட்டம் ஒன்றை நடத்தினர். இந்த போராட்டத்துக்கு உலகம் முழுவதிலும் உள்ள பல நாடுகளில் இருந்து ஆதரவு கிளம்பியது. இந்த போராட்டம்தான் LGBTQ சமூகத்தினருக்கு உரிமைகளை வழங்க மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தது. இதனைத் தொடர்ந்து ஜூன் மாதம் பிரைட் மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பிரைட் தினம்..
ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் ஜூன் மாதம் 28-ம் தேதி பிரைட் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளைக் கொண்டாடும் விதமாக LGBTQ சமூகத்தினர் வண்ணமயமான அணிவகுப்புகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் ஆகியவற்றை கொண்டாடுவது வழக்கம். கொரோனா தொற்று நோய் பரவல் இருந்துவரும் போதிலும் பல நாடுகளிலும் இந்த ஆண்டும் ஜூன் 28-ம் தேதி பிரைட் தினம் கொண்டாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. LGBTQ சமூகத்தினர் திருமணம் செய்துகொள்ளவும் குழந்தைகளை தத்தெடுக்கவும் பாகுபாடுகள் மற்றும் வெறுப்பு பேச்சுகளை தவிர்க்கவும் தங்களது உரிமைகளை நிலைநாட்டவும் தொடர்ந்து இந்த நாளில் வலியுறுத்தி வருகின்றனர்.
Also Read : `தி ஃபேமிலி மேன் 2 சர்ச்சையில் சிக்கிய சமந்தா!’ – பின்னணி என்ன?