மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியை அறிமுகம் செய்து வைத்த பேராசிரியர் சர் லுட்விக் கட்மேன் (Ludwig Guttmann) என்பவரின் 122 வது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் கூகுள் நிறுவனமானது டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த டூடுலை பால்டிமோர் பகுதியைச் சேர்ந்த ஆஷாந்தி ஃபோர்ட்சன் (Ashanti Fortson) என்பவர் வடிவமைத்துள்ளார். கூகுள் நிறுவனம் இவரை சிறப்பித்ததைத் தொடர்ந்து லட்சக்கணக்கான மக்கள் லுட்வின் கட்மன் யார்? என கூகுளில் தேடி வருகின்றனர். அவரைப் பற்றிதான் இந்தக் கட்டுரையில் நாம தெரிஞ்சுக்கப்போறோம்.
சர் லுட்விக் கட்மேன் ஜெர்மனியில் இருந்த டோஸ்ட் (Tost) எனும் இடத்தில் ஜூலை மாதம் 3-ம் தேதி 1899-ம் ஆண்டு பிறந்தார். தற்போது இந்த டோஸ்ட் எனும் இடம் போலந்து நாட்டில் டோஸெக் (Toszek) என்ற பெயரில் உள்ளது. கட்மேன் தனது மருத்துவப்படிப்பை 1918-ம் ஆண்டு ப்ரெஸ்லாவ் பல்கலைக்கழகத்தில் தொடங்கினார். இதனைத் தொடர்ந்து 1924-ம் ஆண்டு ஃப்ரீபெர்க் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். முதுகெலும்பு காயங்கள் தொடர்பான ஆராய்ச்சிகள் மற்றும் நரம்பியல் தொடர்பான அறுவை சிகிச்சை ஆராய்ச்சிகளை தொடர்ந்து மேற்கொண்டார். இதன்மூலம் பரவலாக கவனம் பெற்றார். தன்னுடைய முப்பது வயதுகளில் ஜெர்மனியின் சிறந்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களில் ஒருவராக விளங்கினார்.
ஜெர்மனியில் நாசிசத்தின் எழுச்சியின்போது யூதர்களுக்கு எதிராக பல்வேறு கொடூரங்கள் நிகழ்த்தப்பட்டன. அப்போது 1933-ம் ஆண்டு லுட்விக் தன்னுடைய சிந்த நாட்டில் மருத்துவம் தொடர்பான பயிற்சிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படவில்லை. இதனால், தனது சொந்த வாழ்க்கையை பணயம் வைத்து சில ஆண்டுகள் கழித்து சொந்த நாட்டில் இருந்து இங்கிலாந்திற்கு தப்பித்து சென்றார். இங்கிலாந்தில் அதிக ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டார். அப்போது மாற்றுத்திறனாளிகளுக்காக வில்வித்தை போட்டி ஒன்றையும் 1948-ம் ஆண்டில் ஏற்பாடு செய்தார். இந்த போட்டிகள்தான் தற்போது `பாராலிம்பிக் கேம்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முன்னதாக அவர் நடத்திய போட்டிகள் `ஸ்டோக் மாண்டேவில் கேம்ஸ்’ என்று அழைக்கப்பட்டன. ஸ்டோக் மாண்டேவில் என்பது அவர் பணிபுரிந்த மருத்துவமனையின் பெயர்.
ஸ்டோக் மாண்டேவில் மருத்துவமனையில் முதுகெலும்பு காயங்கள் பிரிவின் தலைவராக லுட்விக் இருந்தார். முதுகெலும்பு காயங்களுடன் வரும் வீரர்களுக்கு படுத்தபடி சிகிச்சையளிப்பதைவிட உடல் இயக்கத்துடன் இருக்கும்போது அளிக்கப்படும் சிகிச்சை நல்ல பலனை தருவதாக தனது ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்தார். இதனைத் தொடர்ந்து இந்த போட்டிகளை அவர் அறிமுகப்படுத்தியுள்ளார். சர்வதேச அளவில் பாராலிம்பிக் போட்டிகளை லுட்விக் கட்மேன் 1960-ம் ஆண்டில் அறிவித்தார். சுமார் 400 வீரர்களுடன் இந்தப் போட்டியானது முதலில் நடத்தப்பட்டது. மருத்துவராக இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு தன்னம்பிக்கை அளித்து அவர்களையும் விளையாட்டு போட்டியில் பங்குபெற வைத்த லுட்விக் 1980-ம் ஆண்டு மார்ச் மாதம் 18-ம் தேதி மறைந்தார். அவரது நினைவைப் போற்றும்படியாக ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்தநாள் அன்று கூகுள் நிறுவனமானது டூடுல் வெளியிட்டு சிறப்பு செய்கிறது.
லுட்விக்கின் பிறந்தநாளை மாற்றுத்திறனாளிகளும் சிறப்பான ஒரு நாளாக கொண்டாடி வருகின்றனர். நோயாளிகளின் மீது தொடர்ந்து தன்னுடைய அக்கறையை தொடர்ந்து செலுத்தி வந்தார். இதன் விளைவாக இண்டர்நேஷனல் மெடிக்கல் சொசைட்டி ஆஃப் பேராப்லெஜியா மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு சங்கம் ஆகியவற்றையும் நிறுவினார். அவரது பங்களிப்புகளுக்காக தொடர்ந்து பாராட்டுகளையும் பெற்றார்.
Also Read : ஒளிப்பதிவு சட்டத் திருத்த வரைவு 2021 என்ன சொல்கிறது… இவ்வளவு எதிர்ப்பு ஏன்?