பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த மருதநாயகம் எனும் மாவீரன் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி, அதே பெயரில் படம் எடுக்க வேண்டும் என்பது நடிகர் கமல்ஹாசனின் கனவு. அவரின், கனவுப் படத்துக்கு 1997 அக்டோபர் 16-ல் பூஜை போடப்பட்டபோது, இங்கிலாந்து ராணி எலிசபெத், அப்போதைய முதல்வர் கருணாநிதி, சிவாஜி கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அந்த காலகட்டத்திலேயே ரூ.50 கோடி பட்ஜெட் போடப்பட்ட கமலின் இந்தக் கனவுப் படம் இதுவரை நனவாகாமலேயே இருக்கிறது… சரி, உண்மையில் யார் இந்த மருதநாயகம்… அவரோட வரலாறைத்தான் இந்த வீடியோவுல நாம தெரிஞ்சுக்கப் போறோம்.
ராமநாதபுரம் மாவட்டம் பனையூரில் ஒரு கூலித் தொழிலாளியின் மகனாகப் பிறந்தவர் மருதநாயகம். இவர் பிறந்த ஆண்டு 1725-1730-க்குள் இருக்கலாம் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். வரலாற்றுத் தகவல்கள்படி 1764-ம் ஆண்டே இவர் தூக்கிலப்பட்டார் என்று தெரியவருகிறது. இதன்படி பார்த்தால், தனது 40 வயதுக்கு மேல் அவர் உயிரோடு இருக்கவில்லை.. இவரது பெற்றோர் இஸ்லாத்தைத் தழுவியதால் முகமது யூசுஃப் கான் என்று பெயர் பெற்றார் என்று ஒரு தரப்பினரும், இல்லை இல்லை, அவரது பெற்றோர்கள் இல்லாத நிலையில் இஸ்லாமியர் ஒருவரால் வளர்க்கப்பட்டதால் இந்தப் பெயர் வந்தது என்று இன்னொரு தரப்பினரும் சொல்கிறார்கள். கான்சாகிப் என்ற பெயரால் அழைக்கப்பட்ட இவரது நினைவாக இன்றும் மதுரையில் கான்சாமேட்டுத் தெரு, கான்பாளையம் போன்ற பகுதிகளும், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்புக்கு அருகே கான்சாபுரம், சிதம்பரம் அருகே உள்ள கான்சாகிப் வாய்க்கால் போன்றவை மருதநாயகத்தின் புகழைத் தாங்கி நிற்கின்றன.
சரி, சாதாரண குடும்பத்தில் பிறந்த இவரை ஹைதர் அலியோடு ஒப்பிட்டு மாவீரன் என ஆங்கிலேயர்கள் சொல்ல என்ன காரணம்… எப்படி புகழ்பெற்றார்… வாங்க தெரிஞ்சுக்கலாம். ஆரம்பத்துல ஆற்காடு நவாப் படை வீரரா இருந்த இவர் எப்படி ஆங்கிலேய படைக்குள்ள வந்தாரு… மதுரை, திருநெல்வேலி ஏரியாக்கள்ல வரி வசூலிக்குற அளவுக்குப் பதவி உயர்வு இவருக்கு எப்படி கிடைச்சது… ஒரு கட்டத்துல ஆங்கிலேயர்களை எதிர்த்து சுதந்திர ஆட்சியாளரா அறிவிச்சுக்கிட்ட இவர் எப்படி துரோகத்தால் வீழ்த்தப்பட்டார்… எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்றேன்.. வீடியோவை முழுசா பாருங்க.
இந்தியாவைத் தங்கள் ஆளுகைக்குக் கீழ் கொண்டுவர வேண்டும் என ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்கள் போரிட்டுக் கொண்டிருந்த காலம்தான் இவர் வாழ்ந்த காலம். சின்ன வயசுலயே படிப்பு மேல ஆர்வம் இல்லாததால பனையூர்ல இருந்து பாண்டிச்சேரி போன யூசுஃப் கான், சில காலம் படகோட்டியா வேலை பார்த்ததா சொல்றாங்க. அதேநேரம், ஒரு சிலர் அவர் பிரெஞ்சு கவர்னர் மான்சர் காக்லா வீட்டில் வேலைக்காரராகப் பணிக்குச் சேர்ந்ததாவும் சொல்றாங்க. அதேநேரம், அங்கிருந்த பிரெஞ்சு போர்விரரான நண்பர் ஜாக் வில்லா மூலமா குதிரையேற்றம், பீரங்கி, துப்பாக்கி சுடுதல், வாள்வீச்சு போன்ற போர்ப்பயிற்சிகளை எடுத்திருக்கார்.
ஆற்காடு நவாப்களின் வாரிசுச் சண்டை
அப்போதைய காலகட்டத்தில் ஆற்காடு நவாபாக சாந்தாசாஹிப் இருந்தார். அவர் முந்தைய ஆற்காடு நவாபின் வாரிசில்லை என்பதால், உண்மையான வாரிசான முகமது அலி அரியணைக்கு உரிமை கோரினார். இந்த சூழ்நிலையை ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் பயன்படுத்திக் கொண்டனர். சாந்தாசாஹிப் பிரெஞ்சுக்காரர்களின் உதவியை நாடிய நிலையில், முகமது அலிக்கு ஆங்கிலேயர்கள் உதவினர். முதற்கட்ட போரில் சாந்தாசாஹிப் வெற்றிபெற்ற நிலையில், முகமது அலி திருச்சி கோட்டையில் பதுங்கினார். அவரை அங்கிருந்து விரட்ட பெரும் படையுடன் சாந்தாசாஹிப் சென்ற நிலையில், திடீரென ஆற்காட்டை ஆங்கிலேயர்கள் தாக்கினர். அவர்களுக்கு எதிராகப் போரிட தனது மகன் ராஸா சாகிப்பை 10,000 வீரர்களுடன் சாந்தா சாகிப் அனுப்பி வைத்திருக்கிறார். நெல்லூர் ராணுவத்தின் சுபேதாராக இருந்த மருதநாயகம் அந்தப் போரில், ராஸா சாகிப்புக்கு உதவியாகப் போரிட்டார். போரில், ஆங்கிலேயர்கள் வெற்றிபெற்றாலும் மருதநாயகத்தின் போர்த்திறனைக் கண்டு வியந்த ஆங்கிலேயப் படைத் தளபதி ராபர்ட் கிளைவ், அவரை அரவணைத்துக் கொண்டார். ஆற்காடு நவாபாக ஆங்கிலேயர்களின் உதவியோடு முகமது அலி பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்தப் போர் மட்டுமல்லாது, அதன்பிறகு 1752-ல் காவேரிப்பட்டனத்தில் பிரெஞ்சுப் படைகளுக்கு எதிராக நடைபெற்ற இரண்டு போர்களில் ஆங்கிலேயப் படைகள் வெல்வதற்கு கான்சாகிப் முக்கியமான பங்காற்றினார். இதைக் குறிப்பிட்டு ராபர்ட் கிளைவுக்கு எழுதிய கடிதத்தில், ’எனது வெற்றிக்கு நான் பெரிதும் சார்ந்திருந்தது கான்சாகிப்பைத்தான்’ தளபதி டால்டன் குறிப்பிட்டிருந்தார். ஒரு கட்டத்தில் ஆங்கிலேய படைத் தளபதி ராபர்ட் கிளைவின் படையில் முக்கியமான அங்கமாகவும் அவருக்கு வெற்றி தேடித்தரும் தளகர்த்தர்களில் முதன்மையானவராகவும் கான்சாகிப் மாறினார்.
இதற்கு வெகுமதியாக 1756-ல் மதுரை, திருநெல்வேலியின் ராணுவ அதிகாரி பொறுப்பு கான்சாகிப்புக்குக் கிடைத்தது. இது ஆற்காடு நவாபான முகமது அலிக்கு வேறொரு வகையில் எரிச்சலை ஏற்படுத்தியது. இந்தப் பகுதிகளை ஆளும் உரிமையை அவர் ஆங்கிலேயரிடமிருந்து 1751-லேயே வாங்கியிருந்தார். இந்த சூழலில் ராணுவ அதிகாரியாக கான்சாகிப் நியமனம் ஆத்திரத்தை உண்டுபண்ணியது. இந்த நெருப்பு அவர் மனதுக்குள் கனன்றுகொண்டிருந்த நிலையில், மறுபுறம் மக்களிடம் வசூலித்த வரிப்பணத்தை அந்தப் பகுதியின் முன்னேற்றத்துக்கே கான்சாகிப் செலவிடத் தொடங்கினார். சாலை வசதிகளை மேம்படுத்துதல், ஏரி, குளங்களை தூர்வாருதல், வணிகர்கள், நிதித் துறை சார்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதால், அவரின் செல்வாக்கும் மக்களிடையே அதிகரித்தது. இது ஆற்காடு நவாப் மனதில் பொறாமைத் தீயை மேலும் வளர்த்தது.
ஒரு கட்டத்தில் ஆங்கிலேயர்களிடம் வாதாடி, மதுரை, திருநெல்வேலி பகுதிகளில் வரி வசூலிக்கும் உரிமையை ஆற்காடு நவாப் பெற்றார். ஒரு கட்டத்தில் ஆற்காடு நவாப் முகமது அலியின் பணியாளர்தான் கான்சாகிப் என்று ஆங்கிலேயர்கள் அறிவிக்கும் நிலை வந்தது. ஆனால், இதை கான்சாகிப் விரும்பவில்லை. வரி வசூலை உயர்த்திக் கொடுக்கும்படி அவர் கொடுத்த ஆஃபரையும் ஆங்கிலேய அரசு ரசிக்கவில்லை. இதனால், தான் சுதந்திர ஆட்சியாளன் என்று கான்சாகிப் அறிவித்துக் கொண்டார். இது ஆங்கிலேயர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
போர் மேகம்
இப்படியான சூழலில் 1763ம் ஆண்டு செப்டம்பரில் மதுரை கோட்டை மீது ஆங்கிலேயர்கள் போர் தொடுத்தனர். அவர்களுக்கு ஆதரவாக தஞ்சை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட சமஸ்தானங்களும் ஆற்காடு நவாபும் போரில் கைகோர்த்தனர். கான்சாகிபுக்கு ஆதரவாக பிரெஞ்சுப் படை உதவிக்கு வந்தது. 22 நாள்கள் நீடித்த இந்தத் தாக்குதலில் ஆங்கிலேயர்களால் மதுரை கோட்டையைத் தகர்க்க முடியவில்லை. இதன்பின்னர், 1764 ஜூன் மாதத்தில் இரண்டாவது முறையாக மதுரை கோட்டையை ஆங்கிலேயர்கள் தாக்கியும் அவர்களால் வெற்றிபெற முடியவில்லை. ஒரு கட்டத்தில் போர் தந்திரம் வேலைக்கு ஆகாது; நமது வழக்கமான ஆயுதமான சூழ்ச்சிதான் பெஸ்ட் என ஆங்கிலேயப் படை முடிவுக்கு வந்து அதற்கான வேலைகளைப் பார்த்தது. மருதநாயகம் என்கிற கான்சாகிபோடு இருந்த பிரெஞ்சு தளபதி மர்ச்சண்ட், திவான் சீனிவாச ராவ் உள்ளிட்டோரை கைக்குள் போட்டுக்கொண்டது. இதற்கு ஒரு பின்னணிக் கதையும் இருந்தது. ஆங்கிலேயர்கள் போர் தொடுத்தபோது ஏற்பட்ட அசாதாரண சூழலில் அவர்களிடம் சரணடையலாம் என மர்ச்சண்ட் கொடுத்த ஐடியா கான்சாகிபுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. போரிட்டு வீர மரணமடைய விரும்பிய கான்சாகிப், அவரைக் கன்னத்தில் அறைந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்த சம்பவத்துக்குப் பழிவாங்க நினைத்த மர்ச்சண்ட், ஆங்கிலேயருடன் கைகோர்த்து கான்சாகிபுக்கு எதிராக சதித்திட்டத்தில் ஈடுபட்டார். 1764ம் ஆண்டு அக்டோபர் மாதம் 13-ல் தனது வாளை வைத்துவிட்டு தொழுகையில் ஈடுபட்டபோது,
பின்புறம் கைகளைக் கட்டி சிறைபிடித்து, ஆங்கிலேயர்களிடம் ஒப்படைத்தனர். இதன்பின்னர், மதுரை சம்மட்டிபுரத்தில் இருந்த மரம் ஒன்றில் 1764-ம் ஆண்டு அக்டோபர் 15-ல் கான்சாகிப் தூக்கிலிடப்பட்டார். துரோகத்தால் வீழ்ந்த கான்சாகிப் மீது ஆங்கிலேயர்களுக்கு எந்த அளவுக்குப் பயம் இருந்தது என்றால், அவரை மூன்று முறை தூக்கிலிட்டுக் கொன்றனர். அவர் மீண்டும் உயிர்ந்தெழுந்து வந்துவிடுவார் என்று பயந்த ஆங்கிலேயர்கள், தலையைத் திருச்சியிலும் கைகளைப் பாளையங்கோட்டையிலும் கால்களை பெரியகுளத்திலும் புதைத்தனர். தலை, கை,கால்கள் அற்ற உடலை மதுரை சம்மட்டி புரத்தில் புதைத்தனர். அவர் உயிரிழந்து நாற்படு ஆண்டுகளுக்குப் பிறகு 1808 வாக்கில், அந்த இடத்தில் தர்ஹா ஒன்றை ஷேக் இமாம் என்பவர் எழுப்பினார். அது இன்றும் கான்சாஹிப் பள்ளிவாசல் என்கிற பெயரில் இருக்கிறது.
இன்னிக்கு மருதநாயகம் படத்தை எடுத்தா நான் நடிக்க மாட்டேன்னு கமல் சொல்லிட்டார்.. இப்போ, அந்த கேரக்டர்ல யாரு நடிச்சா நல்லா இருக்கும்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க!