Annamalai

தமிழக பா.ஜ.க-வின் அடுத்த தலைவர்… ரேஸில் முந்துவது யார்?

தமிழக பா.ஜ.க தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணையமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார். இதனால், அந்தப் பொறுப்புக்கு அடுத்து வருபவர் யார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

எல்.முருகன்

தமிழக பா.ஜ.க தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், கடந்த 2019-ல் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து காலியாக இருந்த அந்தப் பதவியில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்த எல்.முருகன் நியமிக்கப்பட்டார். இது பி.ஜே.பியினர் மத்தியிலேயே ஆச்சர்யமாகப் பார்க்கப்பட்டது. கடந்த 2020-ல் பா.ஜ.க மாநிலத் தலைவரான எல்.முருகன் தி.மு.க-வை எதிர்த்துக் கடுமையாகக் களமாடினார். தமிழகம் முழுவதும் வேல் யாத்திரை என்ற பெயரில் பயணம் மேற்கொண்ட அவர், கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனல் விவகாரத்திலும் கடுமையான எதிர்வினையாற்றினார்.

அ.தி.மு.க-வோடு கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்த பா.ஜ.க, போட்டியிட்ட 20 இடங்களில் நான்கில் வென்றது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ்நாடு சட்டப்பேரவையில் பா.ஜ.க உறுப்பினர்கள் அடியெடுத்து வைத்திருக்கிறார்கள். இதை பாசிட்டிவாக எடுத்துக் கொண்டிருக்கும் பா.ஜ.க தேசியத் தலைமை, அதற்கான பரிசாகவே எல்.முருகனை மத்திய இணையமைச்சராக்கி அழகுபார்த்திருக்கிறது என்கிறார்கள் அக்கட்சியினர். தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தாலும், மத்திய அமைச்சராகியிருக்கிறார் எல்.முருகன். அவருக்கு மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத் துறை இணையமைச்சர் பதவி அளிக்கப்பட்டிருக்கிறது.

தமிழக பா.ஜ.க தலைவர்

ஜெ.பி.நட்டா - நயினார் நாகேந்திரன்

பா.ஜ.க-வில் ஒருவர் இரண்டு பதவிகளை வகிக்கக் கூடாது என்ற விதி இருப்பதால், எல்.முருகன் மாநிலத் தலைவர் பதவியில் தொடர முடியாது. அதனால், அடுத்த தலைவர் யார் என்ற விவாதம் எழுந்திருக்கிறது. இப்போதைய சூழலில் தமிழக பா.ஜ.க-வில் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், வி.பி.துரைசாமி உள்ளிட்ட 10 துணைத் தலைவர்கள் இருக்கிறார்கள். அதேபோல், வானதி சீனிவாசன், ஹெச்.ராஜா போன்ற தலைவர்களும் இருக்கிறார்கள். இவர்களில் தலைவர் பதவிக்கான ரேஸில் இரண்டு பேரின் பெயர்கள் முன்னணியில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

ஒருவர் கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து, பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க-வில் இணைந்த அண்ணாமலையின் பெயர் முன்னணியில் இருப்பதாகச் சொல்கிறார்கள். அதேபோல், அ.தி.மு.க-வில் இருந்து வந்த நயினார் நாகேந்திரன், தி.மு.க-வில் இருந்து வந்த வி.பி.துரைசாமி ஆகியோர் அரசியலில் அனுபவம் கொண்டவர்கள். அண்ணாமலைக்கு ஆதரவாக ட்விட்டரில் அக்கட்சித் தொண்டர்கள் ட்விட்டரிலும் டிரெண்ட் செய்து வருகிறார்கள்.

தமிழிசைக்குப் பின்னர் தமிழக பா.ஜ.க தலைவராக இவர் வருவார்… அவர் வருவார் என்று பல்வேறு ஊகங்கள் வெளியாகின. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் எல்.முருகனை அந்தப் பொறுப்புக்குக் கொண்டுவந்தது பா.ஜ.க தேசியத் தலைமை. அதேபோல், இந்த முறையும் நடக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Also Read – கச்சத்தீவு வரலாறு… 1974 ஒப்பந்தத்தின் பின்னணி என்ன?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top