மாநகராட்சி முகாமில் சிகிச்சையளிப்பதில் இருந்து விலகிய வீரபாபு, சாலிகிராமத்தில் உழைப்பாளி என்ற பெயரில் கொரோனா மருத்துவமனையைக் கடந்த 2020 செப்டம்பர் 18ல் திறந்தார்.
கொரோனா முதல் அலையின்போது சென்னை சாலிகிராமத்தில் சித்த மருத்துவம் மூலம் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்தவர் சித்த மருத்துவர் வீரபாபு. கடந்த 2016 – 2017ம் ஆண்டுகளில் டெங்கு காய்ச்சல் அதிகரித்தபோது, அதற்கு நிலவேம்பு கசாயம் தீர்வு தரும் என்று பிரபலப்படுத்தியவர். கடந்த 2020-ல் சாலிகிராமம் ஜவஹர் பொறியியல் கல்லூரியில் தனி முகாம் அமைத்து, இவரை சிகிச்சை செய்ய சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்தது. அந்த முகாம் முதலில் 200 படுக்கைகள் கொண்டதாகத் தொடங்கப்பட்டது. பின்னர், 450 படுக்கைகள் கொண்டதாக விரிவுபடுத்தப்பட்டது.
சித்த மருத்துவம் மூலம் அந்த முகாமில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். அந்த முகாம் மூலம் ஏறக்குறைய 5,400-க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பினர். அந்த முகாமில் சிகிச்சைபெற்ற நீரிழிவு, ரத்த அழுத்தம், புற்றுநோய் உள்ளிட்ட் இணை நோய் கொண்டோரும் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர். இதனால், பொதுமக்களிடையே சித்த மருத்துவர் வீரபாபு பிரபலமடைந்தார்.
ரஜினி பாராட்டு
நடிகர் ரஜினிக்கும் கொரோனா சூழலில் உடல் நலனைப் பேணுவது குறித்து தொடர்ந்து ஆலோசனைகள் வழங்கி வந்தார். அதைத் தொடர்ந்து பின்பற்றி வந்த ரஜினி, அப்போது வீரபாகுவையும் பாராட்டினார். ரஜினியின் தீவிர ரசிகரான சித்த மருத்துவர் வீரபாபு, சாலிகிராமத்தில் உழைப்பாளி என்ற பெயரில் உணவகத்தையும் நடத்தி வந்தார். அங்கு ரூ.30-க்கு மதிய உணவு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா அதிகரித்து வந்த நிலையில், தனியார் மருத்துவரான வீரபாபுவை சிகிச்சை செய்ய அழைத்தது குறித்து அரசு மருத்துவர்கள் தரப்பில் அதிருப்தி எழுந்தது. மேலும், 2020 செப்டம்பர் தொடக்கத்தில் நோயாளிகளிடம் பணம் வசூலிப்பதாகவும் வீரபாபு மீது குற்றச்சாட்டு எழுந்தது.
சிபாரிசின் பேரில் வரும் நோயாளிகளிடம் ஆக்ஸிஜன் தேவைக்காக பணம் வாங்கியதாகவும், அதற்கான கணக்கு விபரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் அப்போது விளக்கம் கொடுத்தார். குற்றச்சாட்டின் பேரில் அவரிடம் சென்னை மாநகராட்சி இணை இயக்குநர் விசாரணையும் நடத்தினார். அப்படியான சூழலில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் இருந்து விலகுவதாக கடந்தாண்டு செப்டம்பரில் அறிவித்தார். அப்போது, சாலிகிராமம் மையத்தில் சிகிச்சையில் இருந்த சுமார் 200 நோயாளிகள் ஒருவாரத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்னர், ஓய்வெடுக்கப் போவதாக அப்போது கூறினார் வீரபாபு.
உழைப்பாளி மருத்துவமனை
மாநகராட்சி முகாமில் சிகிச்சையளிப்பதில் இருந்து விலகிய வீரபாபு, சாலிகிராமத்தில் உழைப்பாளி என்ற பெயரில் கொரோனா மருத்துவமனையைக் கடந்த 2020 செப்டம்பர் 18ல் திறந்தார். அந்த மருத்துவமனையில் பத்து ரூபாய்க்கு அலோபதி மருத்துவத்துடன் சேர்த்து சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.