பா.ஜ.க-வின் இளம்வயது எம்.பி என்று அறியப்படும் பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பி தேஜஸ்வி சூர்யா யார்… அடிக்கடி அவர் சர்ச்சைகளில் சிக்குவதேன்?
தேஜஸ்வி சூர்யா
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் எல்.ஏ.சூர்ய நாராயணா – ராமா தம்பதிக்குக் கடந்த 1990-ம் ஆண்டு நவம்பர் 16-ம் தேதி பிறந்தவர் தேஜஸ்வி சூர்யா. 90ஸ் கிட்ஸான இவரது தந்தை சுங்க வரித்துறை இணை ஆணையராகப் பதவி வகித்தவர். சிறுவயது முதலே பா.ஜ.க-வின் மாணவர் அமைப்பான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) அமைப்பில் உறுப்பினராக இருந்தவர். சிறுவயது முதலே ராணுவ வீரர்கள் மீது ஆர்வம் கொண்டிருந்த தேஜஸ்வி, 9 வயதில் தனது ஓவியங்களை விற்று அதன்மூலம் கிடைத்த தொகையை கார்கில் நிவாரண நிதிக்கு அளித்தார். அதன்பிறகு, 2001-ம் ஆண்டில் பெங்களூரு பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது இவருக்கு தேசிய அளவிலான பாலஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. கர்னாடக இசை பயின்றிருக்கும் இவர், பெங்களூரு சட்டம் பயின்று வழக்கறிஞரானார்.
அரசியல் என்ட்ரி
ஏபிவிபியில் பள்ளிக்காலம் தொட்டே உறுப்பினராக இருந்துவந்த தேஜஸ்வி, பா.ஜ.க-வின் இளைஞரணி அமைப்பான பாரதீய ஜனதா யுவமோர்ச்சா அமைப்பின் பொதுச் செயலாளராகவும் பொறுப்பு வகித்திருக்கிறார். கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வுக்காகத் தீவிரமாகக் களப்பணியாற்றிய தேஜஸ்வி, 2017ல் நடைபெற்ற `மங்களூரு சலோ’ பேரணியை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார்.
அதன்பிறகு 2018ம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க-வின் தொழில்நுட்பப் பிரிவு பணிகளை மேற்கொண்ட இவர், கர்நாடக மாநில பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவரான பி.எல்.சந்தோஷின் கவனத்தை ஈர்த்தார். பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பியாகக் கடந்த 1996 முதல் 2018ம் ஆண்டு வரை இருந்தவர் பா.ஜ.க-வின் முன்னாள் அமைச்சர் ஆனந்த் குமார். 2008ம் ஆண்டு அவர் உயிரிழந்தபின்னர், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அந்தத் தொகுதியில் போட்டுயிடும் வாய்ப்பு தேஜஸ்விக்கு வந்தது.
மறைந்த ஆனந்த்குமாரின் மனைவி தேஜஸ்வினி ஆனந்துக்கு சீட் கொடுக்க வேண்டும் என கர்நாடக பா.ஜ.கவினர் முதலில் குரல் கொடுத்தனர். தேஜஸ்வினிக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் ஆதரவும் இருந்ததால், அவருக்கே வாய்ப்புக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மூத்த தலைவர் பி.எல்.சந்தோஷ் ஆசியுடன் அங்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தேஜஸ்வி சூர்யா. முதல்முறையாகத் தேர்தலில் களம்கண்ட அவர், 3,31,192 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் பி.கே.ஹரிபிரசாத்தைத் தோற்கடித்தார். 28 வயதில் பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பியான தேஜஸ்வி, பா.ஜ.கவின் இளம்வயது எம்.பி என்ற பெருமையைப் பெற்றார். இவர் 2019ல் கன்னட மொழியில் எம்.பியாகப் பதவியேற்றுக்கொண்டார்.
அதன்பிறகு மக்களவையில் பேசிய தேஜஸ்வி, கர்நாடக மாநிலத்தில் சட்டவிரோதமாக வங்கதேசத்தினர் குடியேறி வருவதாகவும், அதனால் தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டத்தைத் தங்கள் மாநிலத்திலும் அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். அதேபோல், கர்நாடக முனிசிபால் சட்டங்களுக்குப் பதிலாக பெங்களூரு மாநகராட்சிக்கெனப் பிரத்யேக சட்டம் கொண்டு வர வேண்டுமென முதல்வர் எடியூரப்பாவுக்கும் இவர் கோரிக்கை வைத்தார்.
வழக்கறிஞர் பணி
எல்.எல்.பி படிப்பை முடித்த தேஜஸ்வி, கர்நாடகாவைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர்களான ஆர்.அசோகா மற்றும் வி.சோமன்னா ஆகியோரிடம் பயிற்சி பெற்றார். பின்னர், பா.ஜ.க மூத்த தலைவர்களான மகேஷ் ஹெக்டே, மைசூர் எம்.பி பிரதாப் சிம்ஹா ஆகியோருக்காக நீதிமன்றங்களில் வாதாடியிருக்கிறார். அதேபோல், எடியூரப்பாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் மூத்த வழக்கறிஞர் அசோக் ஹரன்ஹள்ளியுடன் இணைந்து அவருக்காக வாதாடினார். தேஜஸ்வியின் உறவினரான ரவி சுப்ரமணியா, பா.ஜ.க-வில் செல்வாக்குடன் வலம்வருபவர். அக்கட்சியின் பசவங்குடி எம்.எல்.ஏவாகவும் இருக்கிறார்.
அண்ணாமலை நட்பு
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் அரவக்குறிச்சியில் போட்டியிட்ட அண்ணாமலையுடன் நெருங்கிய நட்பில் இருந்தவர் தேஜஸ்வி. அண்ணாமலை கர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாகப் பணியாற்றியபோதே இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. அதன் அடிப்படையில் அண்ணாமலைக்காக அரவக்குறிச்சி தொகுதியில் வந்து தேஜஸ்வி வாக்கு சேகரித்தார். அதேபோல், ஆயிரம் விளக்கு பா.ஜ.க வேட்பாளர் குஷ்புவுக்காகவும் தேஜஸ்வி பிரசாரம் மேற்கொண்டார். இவர்கள் இருவருமே வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சர்ச்சைகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகையாளர் தரேக் ஃபடாவின் கருத்தைச் சுட்டிக்காட்டி அரபு நாடுகளைச் சேர்ந்த பெண்களை விமர்சிக்கும் வகையில் ட்விட்டரில் கடந்த 2020 ஏப்ரலில் இவர் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையானது. சர்வதேச அளவில் தேஜஸ்வியை விமர்சித்து நெட்டிசன்கள் பதிவிட்டனர். அதேபோல், அரபு நாடுகளைச் சேர்ந்த பலர் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சோசியல் மீடியாவில் கொதித்தனர். இந்த விவகாரம் அப்போது பரவலான கவனம் பெற்றது.
அதேபோல், பெங்களூரு மாநகராட்சி மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை ஒதுக்குவதில் பெரிய அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக தேஜஸ்வி மற்றும் பா.ஜ.க எம்.எல்.ஏ சதீஷ் ரெட்டி ஆகியோர் கடந்த 5-ம் தேதி பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தனர். மேலும், அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பெங்களூரு மாநகராட்சியின் வார் ரூமில் பணிபுரியும் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த 12 பேரின் பெயர்களை வெளிப்படையாகக் குறிப்பிட்ட தேஜஸ்வி, இதுகுறித்து முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பா.ஜ.க ஆளும் மாநிலத்தில், அக்கட்சியின் ஆட்சியதிகாரத்தின்கீழ் இருக்கும் பெங்களூரு மாநகராட்சியில் ஊழல் நடைபெற்றுள்ளதாக அந்தக் கட்சி எம்.பி ஒருவரே கூறியிருப்பதை வரவேற்பதாக காங்கிரஸ் கட்சி முதலில் கூறியது. அதேபோல், இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் வலியுறுத்தியது.
ஆனால், தேஜஸ்வி குற்றம்சாட்டிய அடுத்த நாளே கர்நாடகாவின் முன்னணி பத்திரிகையான விஜயகர்நாடகா முதல் பக்கத்தில் இன்வஸ்டிகேட்டிவ் செய்தி ஒன்றை வெளியிட்டது. அதில், பெங்களூரு மாநகராட்சியின் கொரோனா படுக்கை ஒதுக்கீட்டு ஊழலின் முக்கியப் புள்ளியே தேஜஸ்வியின் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க எம்.எல்.ஏ சதீஷ் ரெட்டிதான் என்று சொன்னது அந்த செய்தி. இது கர்நாடகாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பெங்களூரு மாநகராட்சியின் வார் ரூமில் 200க்கும் மேற்பட்டோர் பணிபுரியும்போது பல ஷிஃப்டுகளில் வேலை செய்யும் குறிப்பிட்ட மதம் சார்ந்த 12 பேரை மட்டும் குற்றம்சாட்டுவது ஏன் என்றும் தேஜஸ்வியிடம் கேள்வி எழுப்பினர். இந்த விவகாரத்தில் மதசாயம் பூச முயல்வதாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், அந்தக் குற்றச்சாட்டுகளை தேஜஸ்வி மறுத்தார்.
தேஜஸ்வி குற்றச்சாட்டுக்குப் பின்னர் குறிப்பிட்ட 12 பேரை பெங்களூரு மாநகராட்சி பணியிடை நீக்கம் செய்தது. இதற்கு அம்மாநிலத்தில் பரவலாக விமர்சனம் எழவே, அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது. ஆனால், அவர்களில் பலர் மாநகராட்சிப் பணியில் இணைய விரும்பவில்லை என்று பணிக்குத் திரும்ப மறுத்துவிட்டனர்.
Also Read – யார் இந்த சபரீசன்… தி.மு.க-வின் Master Mind ஆனது எப்படி? #Explainer