நீர் நிலைகளில் ஆபத்தான ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களை வளர்க்க மத்திய, மாநில அரசுகள் தடை விதித்திருக்கின்றன… ஏன் இந்த மீன்களை ஆபத்தான மீன்கள்னு சொல்றாங்க… எதுக்காகத் தடை விதிச்சாங்கனுதான் இந்தக் கட்டுரைல நாம தெரிஞ்சுக்கப் போறோம்.
ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள்

வெளிநாடுகளில் இருந்து மீன் வளர்ப்போரின் பயன்பாட்டுக்காகப் பல்வேறு வகையான மீன்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒரு இனம்தான் தேளி மீன், பெரிய அணை மீன் என்ற பெயர்களில் அழைக்கப்படும் ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள். இந்த வகை மீன்கள் ஆபத்தானவையாக மத்திய அரசு வகைப்படுத்தி வைத்திருக்கிறது. அதற்கான முக்கியமான காரணம், இவை வளரும் நீர் நிலைகளில் மற்ற மீன் இனங்களை வளரவிடாது. எட்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் வாழும் திறன் கொண்ட இவை, தொடர்ச்சியாக மற்ற மீன் இனங்களை வேட்டையாடித் திண்ணும். அவற்றின் முட்டைகளையும் உண்பதால், நன்னீரில் வாழும் பாரம்பரிய மீன் இனங்களை முற்றிலும் அழித்துவிடும் வல்லமை படைத்தவை.
தடை

இதனாலேயே குளம், குட்டைகளில் மீன் வளர்ப்போர் ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களை வளர்க்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்திருக்கிறது. இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் வளர்க்கத் தடை அமலில் இருக்கிறது. தமிழகத்திலும் இந்தத் தடை கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு முறை இந்த மீன்கள் நமது நீர்நிலைகளுக்குள் புகுந்து விட்டால், அவற்றை முழுமையாக அப்புறப்படுத்துவது என்பது இயலாத காரியம் என்கிறார்கள். மழை, வெள்ளம் போன்ற காலங்களில் குளம், குட்டைகளில் இருந்து தப்பி மற்ற நீர்நிலைகளுக்குள்ளும் புகுந்து விடும் தன்மை கொண்ட இந்த மீன்கள், மற்ற எந்த இன மீன்களையும் பாரபட்சம் பார்க்காமல் கபளீகரம் செய்து விடுபவை. மிகக்குறைந்த நீரிலும் மிகப்பெரிய அளவில் இனப்பெருக்கும் செய்துவிடும் என்பதால், இவற்றை வளர்க்கத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தடையை மீறி ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களை வளர்ப்பவர்களுக்கு 6 மாதம் முதல் 6 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் இடமிருக்கிறது.